சரபப் பறவை



இலக்கியங்கள் மிகுந்த வலிமையும் ஆற்றலும் கொண்டதாக போற்றும் அபூர்வமான பறவை சரபம் ஆகும். இது விலங்கும் பறவையும் கலந்து இனக் கலவையாக  உருப்பெற்றதாகும். இந்தப் பறவையைப் பேரண்டப் பட்சி எனவும் அழைப்பர். இரண்டு தலைகள், எட்டுக் கால்கள் வலிய வால், கொண்டதாக இதை இலக்கியங்கள்  குறிக்கின்றன. அடர்ந்த காடுகளில் மட்டுமே வாழும் சரபப் பட்சிகள் பெரிய யானைகளைப்பற்றி எடுத்துச் சென்று அவற்றை வைத்து விளையாடி மகிழும் என்பர்.  இவை எட்டுக் கால்களால் எட்டு யானைகளைப் பற்றி எடுத்துக் கொண்டும்.

இரண்டு அலகுகளால் இரண்டு யானைகளைக் கொத்திக் கொண்டும் அனாயசமாக விண்ணில் பறந்து செல்லும் இயல்புடையவை என்று கூறப்படுகிறது. அப்படிப்  பத்து யானைகளை எளிதில் எடுத்துக் கொண்டு பறக்குமானால் இதன் பலம் என்ன என்பதை ஊகித்துப் பாருங்கள். இப்படி பலமும், உறுதியும் கொண்டிருப்பதால்  சரபப் பட்சிகள் மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகின்றன. தமது அறிவார்ந்த கருத்துக்களாலும் உரிய அறிவாலும் உயர்ந்த படிப்பாலும் மேன்மை பெற்று,  அடுத்தவர்களை வாதில் எளிதில் வென்று வெற்றி பெறுபவர்களை சரபர்கள் என்று போற்றப்படுகின்றனர்.

சைவ ஆகம நூல்களில் மிகுந்த பயிற்சி பெற்று, தவ நெறிக் கிரியைகளை முறையாக குறைவின்றிச் சிறப்பாகச் செய்து மக்களுக்கும் பயன்படுமாறு செய்பவர்கள்  சைவாகம சரபம் என்று அழைக்கப்பட்டனர். சைவ சித்தாந்த நூல்களை நுணுகி ஆராய்ந்து, தெளிந்து, பிற சமயவாதிகளுக்குத் தகுந்த விடை கூறி நன்கு தெளிவு  படுத்தும் வகையில் மேன்மை பெற்றவர்களைச் சித்தாந்த சரபம் என்று போற்றுகின்றனர். பாடல்களை விரைந்து இயற்றும் வல்லமை பெற்றவர்கள் கவிச் சரபம்  என்று போற்றப்பட்டனர். சொற் சுவையும், பொருட்சுவையும் தோய்ந்த எனப்பட்டனர்.

வண்ணப் பாடல்களை இயற்றுவதில் தனிச் சிறப்புப் பெற்றிருந்ததால் ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள் வண்ணச்சரபம் என்று அழைக்கப்பட்டார். சரபப் பட்சிகளில் பல  சிவபூசை செய்து மேன்மை பெற்றுள்ளன. அவர்கள் பெண் தெய்வங்களைச் சுமந்து செல்லும் பேறு பெற்றனர். இதையொட்டி ஆலயங்களில் சரப பட்சிகளை  வாகனமாக அமைக்கும் வழக்கம் வந்தது என்பர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்திலும், சென்னை கொத்தவால் சாவடி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்திலும்  சரபப் பட்சி வாகனங்கள் உள்ளன. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் ‘‘சரபன்’’ வாகனமாக அமைந்துள்ளான்.

மரத்தால் செய்து வண்ணம் தீட்டப்பட்டு பொலிவுடன் இவ்வாகனம் விளங்குகிறது. இலக்கியங்கள் குறிப்பது போல் பறவை வடிவில் அமைக்காமல் அதிகார நந்தி,  கருடன் முதலியவற்றைப் போல் மனித வடிவிலேயே சரபர்களை அமைத்துள்ளனர். ஆற்றல் மிகுந்தவன் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டியிட்டு  அமர்ந்துள்ளான். பறவை இனத்தைச் சேர்ந்தவன் என்பதைக் குறிக்க தோள்களில் நீண்ட சிறகுகளைக் கொண்டுள்ளான். சரபர்களுக்கு விளையாட்டுப் பொருள்  யானைகள் என்பதால் அவனது இரண்டு கைகள் தாமரைக் குளத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் யானைகளைப் பற்றி தூக்குவதுபோல் அமைக்கப்பட்டுள்ளன.

மேலிரண்டு கைகள் அன்னை காமாட்சியம்மன் பாதங்களை தாங்குவதுபோல் உள்ளது . புராணச் சிறப்புமிக்க இந்த வாகனத்தில் காமாட்சியம்பிகை 4ஆம் நாளில்  பவனி வந்து அருட்பாலிக்கின்றாள். சென்னை - கொத்தவால் சாவடி ஆரிய வைசியர்களின் உரிமைக் கோயிலான கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் சரபி  வாகனம் உள்ளது. கலையழகு மிக்க இச்சரபி வாகனம் வெள்ளியால் செய்யப்பட்டுள்ளதாகும். அளவில் சிறியதாக இருந்தாலும், கலை நுணுக்கத்துடன்  செய்யப்பட்டுள்ளது.

சரபி எட்டுக் கால் பறவை என்பதால் இவள் ஆறு கரங்களும் இரண்டு கால்களும் கொண்டவளாக அமைக்கப்பட்டுள்ளாள். பின் கரங்கள் இரண்டு மேலே தூக்கி  ஆற்றலைக் காண்பிக்க இரண்டு கைகள் தாமரைக் குளத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் யானைகளைத் தூக்குகின்றன. முன்னிரண்டு கைகள் அம்பிகையின்  திருவடிகளைத் தாங்கும் பாவனையில் உள்ளன. இது அரிய கலைப் படைப்பாகத் திகழ்கிறது. கலை உலகில் பல்வேறு கோலங்களில் சரபப் பறவைகளை  சித்திரித்து மகிழ்ந்துள்ளனர்.

- ஆட்சிலிங்கம்