ஆத்ம விசாரம் எனும் ராஜ மார்க்கம்



பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் மார்க்கம் ராஜ மார்க்கம். எங்கேயோ கடவுள் இருக்கிறார். அவரை காண்பது மிகவும் கடினம். அது யாருக்கோ சிலருக்குத்தான்  முடியும். வீட்டைத் துறக்க வேண்டும். குடும்பத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தவே இல்லை.

‘‘பகவானே, கடவுளை அறிவது எப்படி’’
‘‘கடவுளை அறிவது இருக்கட்டும். உன்னை நீ யார் என்று தெரிந்து கொண்டு விட்டு அதற்கு அன்னியமாக, அதற்கு அப்பால் கடவுள் என்கிற விஷயம் தனியே  இருக்கிறதா என்று பார். இந்த கேள்வியை கேட்பவன் யார் என்று தன்னையே ஏன் கேட்டுக் கொள்ளக் கூடாது’’ என்று ஞான மார்க்கத்தை போதித்தார். மீண்டும்,  மீண்டும் பகவானிடம் நான் யார் என்கிற ஆத்ம விசாரத்தை எப்படி செய்வது என்று கேட்கப் பட்டது. மகரிஷிகளும், ‘‘அப்பா... ஓர் இருட்டு அறையில்  இருக்கிறாய். இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஆனால், நான் இருக்கிறேனா என்று யாரிடமாவது கேட்பாயா.

நான் எங்கே என்று இருட்டில் தேடுவாயா. கண்கள் இருட்டில் தவித்தாலும் நான் என்கிற உணர்வு. இருக்கிறேன் என்கிற நிச்சய உணர்வு அதாவது உன்னுடைய  இருப்பு உனக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா. நீ இருக்கிறாய் என்பதை யாரேனும் சொல்ல வேண்டுமா என்ன? அந்த நான் இருக்கிறேன் என்கிற  உணர்வின் மீது உன் கவனத்தை செலுத்து. அதனை வைத்துத்தான் மற்ற எண்ணங்கள் கூட்டமாக அமர்ந்துள்ளன. எனவே, நான் இருக்கிறேன் எனும் உணர்வின்  மீது கவனத்தை திருப்புங்கள். சிரத்தையோடு திருப்ப வேண்டும். அந்த நான் என்கிற உணர்வு எங்கு உற்பத்தியாகிறதோ அங்கு சென்று ஒடுங்கும்.

அந்த நான் எனும் எண்ண விருத்தி எப்படி உடல் முழுவதும் பரவியிருக்கிறதோ, தன்னையே உடலாக நினைத்திருக்கிறதோ அப்படியே மெல்ல கூம்பி குறுகும்.  அப்படி அது சென்று ஒடுங்கும் இடம்தான் அருணாசலம். அதுவே ஆத்ம ஸ்தானம். நான் எனும் எண்ணம் தோன்றிய பிறகுதான் மற்ற எல்லா எண்ணங்களும்  தோன்றுகின்றன. எனவே, இந்த மனதின் உற்பத்தி ஸ்தானத்திற்கு செல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை பார்ப்பீர்கள். ‘‘பகவானே,  மூர்த்தி வழிபாடு, பூஜை, மந்திரங்கள் என்று எத்தனையோ இருக்கிறதே’’ ‘‘இவையெல்லாமும் சித்த சுத்தி தரும். மனதில் ஏகாக்கிரகம் என்கிற மன  ஒருமையை உண்டாக்கும்.

மனம் ஏகாக்கிரகமானால் ஆத்ம வித்தை எளிதாக சித்திக்கும். எப்படி வைத்தாலும் மீண்டும் தன்னிடத்தேதான் வரவேண்டும்’’ என்று பதில் பகன்றார். எந்த  சாதனையும் செய்ய முடியவில்லையே, நீங்கள் சொல்வதும் புரியவில்லையே என்று கூறிய அன்பர்களுக்கு, ‘‘இதோ இந்த அருணாசலத்தை வலம் வாருங்கள்.  போதும். இதுவே சிவம்’’ என்று கூறியதோடு மட்டுமல்லாது, ‘‘நாம் எவ்வாறு உடலை நான் என்று அபிமானிக்கிறோமோ அவ்வளவு பிரியமாக சிவபிரான்  இந்த அருணாசல மலையை தனது தூல வடிவத் திருமேனியாக ‘நான்’ என்று அபிமானிக்கிறார்’’ என்று மலையின் மகிமையை வெளிப்படுத்துகிறார்.

கிருஷ்ணா(பொறுப்பாசிரியர்)