திருக்கழுக்குன்றினில் மேவிய பெருமாளே!



அருணகிரி உலா-87

செங்கல்பட்டிலிருந்து 14 கி.மீ தொலைவிலுள்ள திருக்கழுக்குன்றத்தை நோக்கி நமது உலா நகர்கிறது. ‘கழுகு தொழு வேதகிரி சிகரி’ என்று அருணகிரியாரால்  போற்றப்பட்டுள்ள இத்தலத்திலுள்ள மலைக் கோயிலில் சில ஆண்டுகள் முன்பு வரை, இரண்டு கழுகுகள் மதியம் குறிப்பிட்ட நேரத்தில் வந்து பண்டாரத்தின்  கையிலிருந்து உணவை எடுத்துக் கொண்டு திரும்பச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. இதனால் இம்மலை ‘பட்சி தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது.  வேதமே மலையாக நிற்பதால் வேதகிரி என்றும் பெயர் பெற்றுள்ளது. மலைக் கோயில் ஈசன் ‘வேதகிரீச்வரர்’ எனப்படுகிறார்.

மலைக் கோயிலை அடைய 565 படிகள் உள்ளன. மாணிக்கவாசகர் தம் தலைமேல் தாங்கிய ஈசன் பாதங்கள், கணபதி மற்றும் சாஸ்தாவை வணங்கிப் படி  ஏறலாம். கம்பையாற்றில் நீர் பெருக்கெடுத்த போது தான் பூசித்து வந்த லிங்கத்தை அம்பிகை ஆரத் தழுவிக் கொண்ட காட்சியைத் தரும் தனிச் சந்நிதி உள்ளது.  மலை உச்சியில் கருவறையில் சுயம்பு மூர்த்தியாக வேதகிரீச்வரரும், பின்புறம் சோமாஸ்கந்தரும், தாமரை மலரால் ஈசனை அர்ச்சிக்கும் திருமால் உருவமும்  உள்ளன. நடராசர், சிவகாமி அம்மை, முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோரை வணங்கி வரும் போது நடராசப் பெருமான் சந்நதி வாசலில் விநாயகரும்  முருகப் பெருமானும் காட்சி அளிக்கின்றனர்.

கழுக்குன்றத்தில், யுகத்திற்கு இரண்டு கழுகுகள் வீதம் வந்து வழிபட்டுப் பேறு பெற்றன என்று தலபுராணம் கூறுகிறது. கிருத யுகத்தில் சண்டன் - ப்ரசண்டன்,  திரேதா யுகத்தில் சம்பாதி - ஜடாயு, துவாபர யுகத்தில் சம்புகுத்தன் - மாகுத்தன், கலியுகத்தில் பூஷா - விதாதா ஆகிய கழுகுகள் வந்து இறைவனை வணங்கி  முக்தியடைந்தன என்றறிகிறோம். தாழக்கோயில் மிகப் புராதனமானது. நாற்புறமும் கோபுரங்கள் உள்ளன. வீதியின் கோடியில் புகழ் பெற்ற சங்கு தீர்த்தம்  உள்ளது. மார்க்கண்டேயர் இறைவனை வழிபட பாத்திரமின்றி தவிக்க, இறைவன் இக்குளத்தில் ஒரு சங்கை உற்பத்தி செய்து தந்ததாகக் கூறுவர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கன்னியா ராசியில் பிரவேசிக்கும் நாளில் இத்தீர்த்தத்தில் சங்கு பிறக்கிறது. இந்தத் தீர்த்த நீர் ஒரு துளி நம்மேல்  பட்டாலும் பாவங்கள் கரைந்து விடும் என்பர். இதுவரை கிடைத்த பல சங்குகள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தாழக்கோயில் இறைவன்  பக்தவத்சலேஸ்வரர். இறைவி திரிபுரசுந்தரி தலமரம் வாழை. கதலி வனம் எனும் குறிப்பு திருப்புகழில் உள்ளது. ஏழு நிலைகள் கொண்ட கிழக்கு கோபுரத்தைக்  கடந்து உள்ளே செல்கிறோம். உள்ளிருக்கும் பதினாறு கால் மண்டபத்தின் தூண்களிலுள்ள கலையழகு மிக்க தெய்வத் திருவுருவங்கள் நம்மை மிகவும்  கவர்கின்றன.

சர்வ வாத்திய மண்டபத்தையும், நாலு கால் மண்டபத்தையும் கண்டு அடுத்த கோபுரத்தைக் கடக்கிறோம். வடக்கு வாயிலை அடுக்கும் பொழுது நந்தி தீர்த்தமும்  கரையிலுள்ள நந்தியும் தென்படுகின்றன. மரத்தாலான கொடி மரம், நந்தி, பலிபீடம் கடந்து வரும் போது ஊர்துவ தாண்டவரின் அழகான புடைப்புச் சிற்பம்  கண்ணைக் கவர்கிறது. கொடியின் ஒரு புறம் அகோர வீரபத்திரர் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். அடுத்த மண்டபத்தில் நுழையும் போது இடப்புறம் சூரியனும்,  வலப்புறம் பைரவரும் காட்சியளிக்கின்றனர். கருவறையில் லிங்கத் திருமேனியான மூலவர் பக்தவத்சலேசுவரர், லிங்கவடிவில் உள்ளார்.

நாச்சிமுத்து எனும் பெண், வழக்கம் போல் இறைவன் முன் நாட்டிய சேவை செய்ய முடியாமல் மழையும் காற்றும் வருத்திய போது, அவள் எண்ணியபடியே  வீட்டு முற்றத்தில் இவ்விறைவர் காட்சி தர அவளும் நடனமாடி முத்தியடைந்தாள். ‘‘முற்றத்திலே  வந்து தாதி தமிழைக் கேட்டு மோட்சம் கொடுத்த  லிங்கம்’’ - லிங்கப்பதிகம். கருவறைக் கோட்டத்திலே விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோரும் கீழே சண்டிகேசுவரரும்  உள்ளனர். பிராகாரத்தில் அறுபத்து மூவர்  மூலத் திருமேனிகள், உற்சவத் திருமேனிகள், சிவலிங்கங்கள் ஆகியன காணலாம். பீடம் மட்டுமே கொண்ட ஆத்மநாதர்  சந்நிதியிலிருந்து மலைக் கோயிலைக் காணலாம் .நாம் நினைத்தது போலவே மூலவர் எதிரே மாணிக்க வாசகர் திருஉருவம் உள்ளது.
 
 ‘‘என் வினை ஒத்தபின் கணக்கிலாத்
திருக்கோலம் நீ வந்து காட்டினாய்
கழுக்குன்றிலே’’     
 
 - என்று திருக்கழுக்குன்றப் பதிகத்தில் மணிவாசகர் பாடியுள்ளதை நினைவு கூறுகிறோம்.
     
ஏகாம்பரேசுவரர், தல விநாயகரான வண்டு வன விநாயகர், ஜம்புகேசுவரர், அருணாசலேச்வரர் ஆகியோரை வணங்கி அறுமுகனின் சந்நிதிக்கு வருகிறோம்.  அருணகிரியார் இக்கோயிலில் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.

 ‘‘புகழ்ச்சிலைக்  கந்தர்ப்பனுமேபொடி
படச்சிரித்தண் முப்புர நீறுசெய்
புகைக்கனற்கண் பெற்றவர் காதலி        
…..அருள்பாலா
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய்! அர
சனைத்து முற்றுஞ் செற்றிடவேபகை
 புகட்டி  வைக்கும் சக்கிர பாணிதன்  …...மருகோனே
 திகழ்க்கடப்பம் புட்பமதார்புய
 மறைத்துருக்கொண்டற்புதமாகிய
தினைப்புனத்தின் புற்றுறை பாவையை ........அணைசீலா
   செகத்திலுச்சம் பெற்றமராவசி
அதற்குமொப்பென்றுற்றழகேசெறி
 திருக்கழுக்குன்றத்தினில் மேவிய  ........ பெருமாளே’’
இப்பாடலில்...
 ‘‘எமக்கயிற்றின் சிக்கினிலாமுனுன்
 மலர்ப் பதத்தின் பத்தி விடமான
திருக்கு நற்றொண்டர்க் கிணையாகவுன் அருள்தாராய்’’

- என்ற பிரார்த்தனையையும் சமர்ப்பிக்கிறார்.
      
 ‘‘புகழ் மிக்க கரும்புவில் உடைய மன்மதன் சாம்பலாகிவிட, நெருங்கி வந்த திரிபுரங்களை எரித்துப் பொடியாக்கிய, புகைவிடும் நெருப்பு விழியை உடைய  சிவபெருமானின் அன்பு மனைவி பார்வதி பெற்றருளிய குழந்தையே ! இப்பூமியில் பாரதப்போர் நிகழ்ச்சி, பிள்ளைகள், வாரிசுகள், அரசர் ஆகிய அனைவரும்  ஒருவரோடொருவர் போர் புரியும் படி பகைமையைக் கிளப்பிய சுதர்சனச் சக்கரம் கொண்ட கிருஷ்ணனின் மருகனே ! விளங்கும் கடப்பமாலையை அணிந்த  தோள்களை (தன் சுயரூபத்தை மறைத்து) வேறு வேறு உருவங்களைத் தாங்கி, வள்ளிமலையின் தினைப்புனத்தில் இன்பமுடன் வாழ்ந்து வந்த வள்ளியை  அணைத்த குணசீலனே ! உலகில் மேலான சிறப்பைப் பெற்று, தேவேந்திரனின் அமராபதிக்கு நிகரென விளங்கும் அழகு நிரம்பிய திருக்கழுக்குன்றத்தில்  வீற்றிருக்கும் பெருமாளே!’’ என்று விளிக்கிறார்.
    
    ‘‘காலனின் பாசக் கயிற்றில் அகப்படுவதற்கு முன்னால், உன் தாமரைப் பதத்திற்கு விடாது பக்தி செய்யும் உள்ளம் படைத்த உண்மை அடியார்க்குச்  சமமாகும்படி உன் அருளை ( எனக்குத்) தரவேண்டும்’’ என்பது வேண்டுகோள்.

 எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
 இலகுமரன் மூவர் . . . .  முதலானோர்
இறைவியெனும் ஆதி பரைமுலையினூறி
 எழுமமிர்த நாறு  . . . .  .கனிவாயா
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
 புநிதனென ஏடு  . . . . தமிழாலே
புனலில்எலெதிரேற சமணர் கழுவேற
பொருதகவி வீர . . . .  குருநாதா
மழுவுழை கபால டமரகத்ரி சூல
மணிகரவி  நோதர்  . . . . அருள் பாலா
மலரயனை நீடு சிறைசெய் தவன் வேலை
வளமைபெறவேஎய் . . . .  முருகோனே
கழுகுதொழு வேதகிரிசிகரி வீறு
 கதிருலவு வாசல் . . . . நிறைவானோர்
கடலொலிய  தான மறைதமிழ்களோது
 கதலிவன மேவு  . . . . பெருமாளே ’’
[ திருக்கழுக்குன்றத்திற்கு ஒரு பெயர் கதலிவனம். இந்தத் தலத்து விருட்சம் வாழை]

ஏழுலகங்களையும் தன் வயிற்றிலடக்கிய திருமால் பிரம்மா, செந்தழல் உருவினரான ருத்ரன் எனப்படும் மும்மூர்த்திகளுக்கும் மற்ற தேவர்கள் அனைவருக்கும்.  தலைவியாகிய பராசக்தியின் முலையில் ஊறி வந்து அமிர்தம் போன்ற ஞானப்பால் மணக்கும் இனிய வாயை உடையோனே ! புனுகு வாசனை மிகுந்த  சீகாழியில் கவுணியர் குலத்தில் ஞான சம்பந்த மூர்த்தியாகத் தோன்றி, ‘‘வாழ்க அந்தணர்’’ பாசுரம் எழுதப்பட்ட ஏட்டை வைகை வெள்ளத்தில் விட, அந்தப்  பாட்டின் மகிமையால் அந்த ஏடு நீரின் ஓட்டத்தை எதிர்த்துச் சென்று திரு ஏடகத்தில் கரை ஏறியது. இதன் காரணமாகத் தாங்கள் வாக்களித்திருந்தபடி சமணர்கள்  கழுவேற, தாக்கம் செய்த கவி வீரனே ! குருநாதனே !

[ அருணகிரி நாதரைப் பொருத்தவரை முருகப் பெருமானும் ஞானசம் பந்தரும் ஒருவரே என்ற கருத்தைக் கொண்டிருந்தார்]  கரங்களில் மழு, மான், பிரம்ம  கபாலம், உடுக்கை, திரிசூலம் இவற்றைத் தரித்திருந்த சிவபெருமான் அருளிய பாலனே ! பிரணவத்திற்குப் பொருள் தெரியாத குற்றத்திற்காக தாமரை மலரில்  வாசம் செயும் பிரம்மனைச் சிறையிலடைத்து அவனுடைய சிருஷ்டித் தொழிலை வளமை மிகுந்ததாகத் தானே செய்து வந்த முருகோனே ! கழுகுகள் வந்து  தொழுகின்ற வேதகிரி எனும் மலைமீது ஒளி வீசும் கோயில் வாயில் முன்பு கூட்டமாய் நின்ற தேவர்கள், கடலின் ஒலி போல் வேதங்களையும், தேவார  திருவாசகப் பாக்களையும் ஓதுகின்ற கதலிவனம் எனப்படும் திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !’’

(உலா தொடரும்)
சித்ரா மூர்த்தி