மர வழிபாட்டின் வேர்களைத் தேடி....



(Deep into the Roots of Tree Worship)

மதங்களின் அடிப்படைக் காரணம் என்ன அவை தோன்றுவதற்கான சமூகக் காரணம் என்ன மற்றும் அவற்றின் தோற்ற வரலாறு யாது என்பன பற்றி அறிந்து  கொள்வது காலத்தின் கட்டாயமாகும். எனவே, நாம் மனித குல வரலாற்றில் சமய வரலாற்றின்  வேர்களைத் தேடிச் செல்வோம்.  மதம் என்பது கடவுளை  மையப்படுத்தியதாகத் தோன்றினாலும்  கடவுள் நம்பிக்கையற்ற சில விதிமுறைகளை மையப்படுத்திய மதங்களும் உண்டு.

கடவுள் நம்பிக்கை உடைய மதங்கள் அகச் சமயங்கள் என்றும் கடவுள் நம்பிக்கை அற்றவை புறச் சமயங்கள் [பௌத்தம், சமணம்] என்றும் தமிழில்  அழைக்கப்படும்.  வேதங்களில் நம்பிக்கை கொண்டவை வைதிகச்  சமயங்கள் என்றும் வேதங்களில் நம்பிக்கையற்றவை அவைதிகச் சமயங்கள் [புத்தம் சமணம்]  என்றும் இந்தியாவில் பெயர் பெறுகின்றன. சமயம் என்பது அதீத நம்பிக்கை சார்ந்ததாக இருக்கின்றது. கடவுள் என்பது அதீத சக்தி உடையதாக நம்பப்படுகிறது.  மேலும் கடவுளை பாதுகாவலனாகவும் மக்களை படைக்கின்றவனாகவும் அழிக்கின்றவனாகவும் மக்கள் படைத்திருக்கின்றனர் அல்லது இன்னொரு வகையில்  சொன்னால் நம்புகின்றனர்.

மந்த சக்திக்கும் மீறிய பேராற்றல் பெற்றவனாகவே கடவுளை சமயங்கள் வர்ணிக்கின்றன. இந்தப் பேராற்றலைக் குறிக்கவே மனிதன் கடவுளுக்கு பல கைகளும்  தலைகளும் குறியீட்டு முறையில் வரைகின்றான். மக்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து அவர்களைப் பாதுகாக்கும் அதீத சக்தியாக கடவுளை சமயங்கள்  விளக்கியுள்ளன. இந்த அதீத சக்தி மனித குலத்தின் ஆரம்பகட்டத்தில் நெருப்பு நீர் மலை நதி காடு மரம் என பல இயற்கை சக்திகளிடமும் இருந்ததாக  நம்பப்பட்டு வந்தது. இந்த நம்பிக்கை சார்ந்த வரலாற்றில் மரங்கள் தெய்வங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றை முதலில் காண்போம்.

முதலில் மரம் வழிபடப்பட்டது; பின்னர் மரத்திற்கு உயிர் இருப்பதாகவும் நம்பப்பட்டது. அதன் பிறகு மரத்தில் இருப்பது தெய்வம் எனக் கருதும் நம்பிக்கை  துளிர்த்தது. இதனைத் தொடர்ந்து மரத்தில் இருக்கும் தெய்வத்துக்கு சாந்தி செய்வதும் வணங்கி மகிழ்வதுமாக சமயச் சடங்குகள் வளர்ந்தன. பின்னர் மரங்கள்  இருக்கும் இடங்களில் [இந்து] கோயில்கள் முளைத்தன. மரங்களின் முக்கியத்துவம் ஸ்தல விருட்சம் என்றளவில் நின்றுவிட்டது. பௌத்தம் தவிர மற்ற  சமயங்களில் மர வழிபாடு அருகிவிட்டது. மரம் அல்லது மரங்கள் அடர்ந்த வனம் ஆரம்பகாலத்தில் தெய்வீக சக்தி உடையதாக நம்பப்பட்டது.

மர வழிபாடு என்பது இன்றைக்கு வேப்ப மரத்தை வழிபடுதல் அரச மரத்தை வழிபடுதல் என்று புரிந்து கொள்ளப் பட்டாலும் கூட இது இந்து மதம் சார்ந்தது  மட்டுமல்ல, மற்ற மதங்களிலும் sacred groves எனப்படும் புனித மரக் காடுகள் ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவிலும் வழிபாட்டுக்கு உரியனவாக  இருந்துள்ளன. அதுபோல ஆப்பிரிக்க கிராமங்களிலும் மரங்கள் வழிபடு பொருட்களாக போற்றப்பட்டன. எனவே, மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம்  மரங்களும் அவர்களுக்கு தெய்வங்களாகவே இருந்து வந்த காலம் ஒன்று இருந்தது. தொதவர் [Todas] எனப்படும் மலைவாழ் மக்கள் வாழும் உதகமண்டலம்  பகுதியில் சேல மரம் என்ற மரத்தை தன குல முதல்வராக கருதி வழிபட்டு வருகின்றனர்.

கௌதம புத்தர் போதி மரம் எனப்படும் அரச மரத்தின் கீழிருந்து தியானம் செய்த போது அவருக்கு ஞானோதயம் பிறந்ததால் அந்த மரம் போதி மரம் என்ற  பெயரில் புத்தி தரும் மரமாக பௌத்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. அரச மரத்தடி பிள்ளையார் ஆல மரத்தடி பிள்ளையார் என்ற பெயரில் மரத்தடியில்  பிள்ளையார்கள் வைக்கப்பட்டு அரச மரமும் ஆலமரமும் இந்து சமயத்தவரால்  தெய்வீக மரங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றில் அரசமரத்தை சுற்றி  வரும்பொழுது ஆக்சிஜன் அதிகம் கிடைப்பதால் குழந்தைப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கையும் உண்மையும் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் அரச மரம்  பெறும் பெருமையை தெய்வீகத் தன்மையை ஐரோப்பாவில் ஓக் மரம் பெற்றுள்ளது.

இந்தியாவில் மர வழிபாடு இருப்பது போல ஐரோப்பாவில் அரசர் காடுகள் என்று பெருங் காடுகள் அடர்த்தியாகவும் தெய்வீக சக்தியுடனும் இருந்தன. கிரிஸ்,  இத்தாலி ஆகிய நாடுகளில் புனிதக் காடுகள் வழிபாட்டுக்கு உரியனவாக இருந்து வந்தன. இப்போது நகர மயமாக்கல் அங்கும் காடுகளை அழித்து விட்டது.  ஜெர்மனியில் பழைய வழிபாட்டு தலங்கள் என்பவை பெரும்பாலும் அடர்ந்த புனிதக் காடுகளே ஆகும். ஆரியர் எனப்படும் இந்தோ ஐரோப்பிய வம்சத்தினர்  மரங்களில் தெய்வம் உறைந்திருப்பதாக நம்பினார்கள். வான்களில் வன தேவதை உலவுவதாகவும் நம்பி வணங்கி வந்தனர்.

கிறிஸ்தவ சமயம் பெரு வளர்ச்சி பெற்ற பிறகு அங்கு வன தேவதைகளும் மர வழிபாடும் மறைந்து விட்டது என்றாலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது  வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரம் இன்றும் அங்கிருந்த மர வழிபாட்டின் எச்சமாகவே தங்கி இருக்கிறது. மரமும் கருவளமும் ஜெர்மனியில் கிறிஸ்துமசுக்கு  முந்தைய இரவில் பழம் தரும் மரங்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து கயிறால் கட்டி வைப்பது மரபு.

இது மரங்களுக்கு இடையிலான திருமணச் சடங்கைப் போன்றதாகும். மரங்களை இணைத்து வைத்தால் அவை நன்றாக பழுக்கும் எனபது ஜெர்மானிய  விவசாயிகளின் நம்பிக்கை. மற்றொரு இனத்தவர் கிராம்பு மரங்கள் பூக்கும் வேளையில் அது கருவுற்றிருப்பதாக நம்பி அந்த மரங்களின் அருகே எவரும் சென்று  தொந்தரவு தரக் கூடாது; அங்கு யாரும் சத்தம் போடக் கூடாது, இரவில் விளக்கெடுத்து கொண்டு அவ்வழியே போய் அதன் உறக்கத்தை கெடுக்க கூடாது;  நெருப்பை கொண்டு போகக் கூடாது; மரம் பயந்து விட்டால் பழங்கள் பழுக்காமல் நின்று போய்விடும் பழுக்காது.

அல்லது கடுங்காயாகவே உதிர்ந்து விடும். மரத்துக்கு மரியாதை தரும் வகையில் அவ்வழியே செல்பவர்கள் தலையில் தொப்பி வைக்கக் கூடாது. ஆனால், தனது  தலையை துணியைக் மூடிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதித்தனர். இதுபோன்ற ஆதிகாலச் சமயத்தின் பழக்க வழக்கங்கள்தான் பின்னர் தெய்வம்  இருக்கும் கோயில்களில் யாரும் தனக்கு குடை பிடிக்க கூடாது, தலையில் முண்டாசு கட்டக் கூடாது; என்று தென் பகுதியிலும் வடக்கிலும் மேற்கிலும் பெண்கள்  தலையை துணியால் மூடிக்கொள்ள வேண்டும் என்றும் நம்பிக்கைகள் வளரக் காரணம் ஆயிற்று.

முனைவர் செ.ராஜேஸ்வரி