ஐப்பசி அமாவாசையில் காவிரி நீராடல்



அரங்கனின் திருவடிவாரத்தை எப்போதும் வருடிக் கொண்டிருக்கும் காவிரி நதியின் தேவதையான காவிரித் தாயார், அரங்கனிடம், “சுவாமி! கங்கையையே  எல்லோரும் புனிதமானவள் என்று சொல்கிறார்களே! எனக்கு அந்தப் பெருமை கிட்டாதா?” என்று வருந்திக் கேட்டாள். “கங்கையை விட நீயே உயர்ந்தவள்!”  என்று காவிரியிடம் சொன்னார் அரங்கன். “அப்படியாயின் கங்கையை விட நான் உயர்ந்தவள் என்பது அனைவரின் மனதிலும் பதியும்படியாக நீங்கள் ஒரு  லீலையைப் புரிந்தருள வேண்டும்!” என்று அரங்கனிடம் வேண்டினாள் காவிரி.

“நீ திரு இந்தளூரில் (மயிலாடுதுறையில்) தவம் புரிவாயாக! அங்கே ஒரு லீலை புரிந்து உன் பெருமையை நான் உலகுக்கு உணர்த்துவேன்!” என்றார் அரங்கன்.  அரங்கனின் கூற்றை ஏற்றுத் திரு இந்தளூரில் தவம் புரிந்து வந்தாள் காவிரி. இந்நிலையில், கங்கை நதிக்கு அதிபதியான கங்கா தேவி, திரு இந்தளூரில் கோயில்  கொண்டிருக்கும் பரிமள ரங்கநாதப் பெருமாளை வணங்கி, தன் மனத்திலே ஒரு பெரும் குழப்பம் உண்டானதாகத் தெரிவித்தாள். “என்ன குழப்பம்?” என்று பரிமள  ரங்கன் வினவ, “உலக மக்கள் எல்லோரும் தங்கள் பாபங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக என்னுடைய நதிநீரில் வந்து நீராடுகிறார்கள்.

அதன் விளைவாக அவர்களின் பாபங்கள் எல்லாம் என்னிடம் அதிகமாகச் சேர்ந்து விட்டன. எந்தத் தவறுமே செய்யாமல் இத்தனை பாபங்களைச் சுமந்து  கொண்டிருக்கும் நான் எனது பாபங்களை எப்படிக் கழித்துக் கொள்வேன்?” என்று கேட்டாள் கங்காதேவி. அதற்குப் பரிமள ரங்கன், “கங்கையே! நீ ஐப்பசி மாதம்  அமாவாசை நாளன்று இங்கே இந்தளூரில் உள்ள காவிரியில் நீராடு. உனது பாபங்கள் அனைத்தையும் காவிரி தீர்த்து விடுவாள்!” என்றார். “எனது பாபங்களைத்  தீர்க்கவல்ல ஆற்றல் காவிரிக்கு உண்டா?” என்று கங்கா தேவி கேட்டாள். அதற்குப் பரிமளரங்கன், “கங்கையே நான் திரிவிக்கிரமனாக ஓங்கி உலகளந்த போது,  எனது இடது பாதத்தில் இருந்து நீ தோன்றினாய்.

அந்த ஒரு சமயத்தில் மட்டும் தான் என் பாத ஸ்பரிசம் உனக்குக் கிட்டிற்று. ஆனால் காவிரியோ நித்தியமும் திருவரங்கத்தில் என் பாதங்களை வருடியபடி ஓடிக்  கொண்டிருப்பதால், தினந்தோறும் என் பாத ஸ்பரிசம் அவளுக்குக் கிட்டிக் கொண்டே இருக்கிறதே! உனக்கோ எனது இடது பாதத்தின் ஸ்பரிசம் மட்டுமே கிட்டியது.  ஆனால் காவிரியோ திருவரங்கத்தின் இருபுறமும் ஓடுவதால், என் இரு பாதங்களின் ஸ்பரிசமும் அவளுக்குக் கிட்டியுள்ளதே! ஒருமுறை என் ஒரு பாதத்தைத்  தொட்ட உன்னைக் காட்டிலும், தினந்தோறும் என் இரு பாதங்களையும் தீண்டும் காவிரியே உயர்ந்தவள்!” எனவே காவிரியில் நீராடி உன் பாபங்களைப் போக்கிக்  கொள் என்று கங்கையிடம் சொன்னார்.

இக்கருத்தையே தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில்,

“கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்குநீர்ப் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கைக் கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே”

என்று பாடினார். கங்கா தேவிக்கு மற்றோர் ஐயம் எழுந்தது. “எனது பாபங்களை நான் காவிரியில் கழித்து விட்டால், காவிரியின் பாபங்களை யார் கழிப்பார்கள்?”  என்று கேட்டாள். அதற்குப் பரிமள ரங்கன், “கங்கையே! சாதாரண ஊர்களில் பாபம் செய்தால், அதைப் புண்ணிய நதியில் நீராடிப் போக்கிக் கொள்ளலாம்.  புண்ணிய நதிக்கரையிலேயே பாபம் செய்து விட்டால், அதைக் கங்கையில் நீராடிப் போக்கிக் கொள்ளலாம். கங்கைக் கரையில் ஒருவன் பாபம் செய்தான் என்றால்,  அவன் காவிரியில் நீராடி அதைப் போக்கிக் கொள்ளலாம். காவிரிக் கரையில் பாபம் செய்தால், அதற்காக வேறோர் இடத்தை நாடிச் செல்ல வேண்டிய  அவசியமில்லை.

காவிரியில் நீராடினாலே அந்தப் பாபமும் தீர்ந்து விடும்! காவிரியில் நீராடிய மாத்திரத்தில் பாபங்கள் மறைந்து விடும்! காவிரியில் எந்தப் பாபமும் ஒட்டாது!”  என்றார். (திருமாலின் திருப்பாதங்களின் சிறப்பு யாதெனில், அவை எப்போதுமே தூய்மையானவையாக, தோஷங்களற்றவையாக, பவித்திரமானவையாகத் திகழும்.  கோயில்களில் திருமாலின் திருமேனியை நாம் தீண்டக் கூடாது என்றாலும், அவரது திருப்பாதமாகிய சடாரி நம்மைத் தேடி வந்து நம் தலைகளைத் தீண்டி  அருள்புரிந்து விட்டுச் செல்கிறதல்லவா? அதில் எந்தப் பாபமும் தோஷமும் ஒட்டாது என்பதால் தான் நம் தலைகளில் வைத்த பிறகு சடாரியை அலம்ப  மாட்டார்கள்! சடாரியை அலம்பக் கூடாது என்கிறது ஆகமம்.

இவ்வாறு எப்போதுமே பவித்திரமாய் இருக்கும் திருமால் திருவடிகளை நாள்தோறும் வருடிக் கொண்டிருப்பதால், காவிரி தானும் பவித்திரமானவளாக இருந்து  கொண்டு, தன்னில் நீராடுவோரையும் பவித்திரமானவர்களாக ஆக்குகிறாள்.) இதை உணர்ந்து ஐப்பசி அமாவாசையில் கங்கா தேவி காவிரியில் நீராடித் தன்  பாபங்களைப் போக்கிக் கொண்டாள் என்பது புராண வரலாறு. இவ்வுண்மையை உலகத்தார் மனதில் பதியும் படி உணர்த்த விரும்பிய பரிமள ரங்கநாதப் பெருமாள்,  திரு இந்தளூரில் தனது தலைமாட்டில் காவிரித் தாயாரையும், திருவடிவாரத்தில் கங்கா தேவியையும் அமர்த்தினார்.

இன்றும் மயிலாடுதுறையில் பரிமளரங்கன் திருக்கோவில் கருவறையில், இறைவனின் தலைக்கு அருகே காவிரியும், திருவடிவாரத்தில் கங்கையும் இருப்பதைத்  தரிசிக்கலாம். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி அமாவாசை அன்று கங்கா தேவி மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடுவதால் தான், ஐப்பசி மாதத்தில்  செய்யப்படும் துலா காவிரி ஸ்நானம் விசேஷம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவோரின் அனைத்துப் பாபங்களும் நீங்கும்  என்பதில் ஐயமில்லை.

குடந்தை உ.வே. வெங்கடேஷ்