விவசாயம் செழிப்புற வெற்றிலை பிரி திருவிழா



மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் கிராமத்தில் மந்தை கருப்பண சாமி கோயில் உள்ளது. இந்தக்கோயிலில் சித்திரை முதல் நாளில்  நடைபெறும் விழா வெற்றிலை பிரி திருவிழா. இத்திருவிழா விவசாயம் செழிப்புறுவதற்காக நடத்தப்படுகிறது. மேலூர் வெள்ளலூர் கிராமத்தை தலைமையிடமாக்  கொண்டது வெள்ளலூர் நாடு. இதில் ஐந்து மாகாணங்கள் என வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, மலம்பட்டி மற்றும் குறிச்சிப்பட்டியை  குறிப்பிடுவார்கள்.

இந்த ஐந்து மாகாணங்களில் வசிக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து கொண்டாடுவது தான் இவ்விழா. வெள்ளலூர் மந்தை கருப்பணசாமி  கோயிலில் 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலக்காரர்கள், 22 இளங்கச்சிகள் தலைமையில் கிராம மக்கள் கூடுவார்கள். சுமார் 200 கிலோ வெற்றிலை கொண்டு  வரப்பட்டு அதை 11 கரை அம்பலகாரர்களுக்கு ஒரு பங்காகவும், இதர மக்களுக்கு ஒரு பங்காகவும் பிரிப்பார்கள். அவற்றை பெற்றுக் கொள்ளும் அம்பலகாரர்கள்  மேலும் கிலோ கணக்கில் வெற்றிலைகளை சேர்த்து, தங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாக்குடன் சேர்த்து வழங்குவார்கள்.

அவற்றை பெற்றுக் கொள்ளும் கிராம மக்கள், தங்கள் வீடுகளில் நாழியில் வைத்த புது நெல், கலப்பை மற்றும் மாடுகளை வைத்து சாமி கும்பிட்டுவிட்டு, பின்னர்  தங்கள் வயலுக்கு சென்று, அந்த ஆண்டிற்கான விவசாய பணிகளை மேற்கொள்வார்கள். இந்த வெற்றிலை பிரிவிழா விவசாயம் செழிக்க மட்டுமன்றி, சாதி, சமய  வேறுபாடு களைந்து நல்லிணக்கத்தை உருவாக்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. வெள்ளலூர் போன்று அதே சித்திரை முதல் நாளில் மேலூர் அருகே  இருக்கும் தும்பைப்பட்டியில் உள்ள மந்தையில் கிராம அம்பலகாரர்கள் தலைமையில் முஸ்லிம் மக்கள், சிங் குடும்பத்தார், பிள்ளைமார், ஆசாரி, மூப்பனார், ஆதி  திராவிடர்கள் என சாதி, சமய பாகுபாடின்றி கூடுவார்கள்.

அனைவருக்கும் சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்கப்பட்ட பிறகு, பள்ளிவாசல் நோட்டம் பொறுப்பில் உள்ள முஸ்லிம் பிரமுகர், அனைவருக்கும் வெற்றிலை  பாக்குகளை வழங்குவார். இதுகுறித்து தும்பைப்பட்டி அண்ணாதுரை கூறியதாவது : ஆண்டு முழுவதும் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ  வேண்டும் என்றும், விவசாயம் செழித்து, நோய் நொடியின்றி வாழவும் இந்த முறை 800 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வூரில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது  என்று கூறினார்.

படம்: ரெ.ஜெய குமார்