தீர்த்தத்தின் பெருமையை தீர்க்கமாக கூறினீர்கள்



திருக்கோயில் திருக்குளங்களின் மகத்துவங்களை ஆய்ந்தறிந்து பல்வேறு மகத்தான தீர்த்தங்களைப்பற்றிய சிறப்புத் தகவலை சேகரித்து ‘திருக்கோயில் திருக்குளங்கள்’ சிறப்பு மலராய் ‘ஆன்மிகம் பலன்’ இதழை பக்தி சிரத்தையுடன் உருவாக்கி எங்களை ஆனந்த தீர்த்தத்தில் மூழ்கச்செய்து விட்டீர்கள்! இந்த இதழைப் படித்தாலே போதும். புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பெரும்பலன் கிட்டும் என்பதில் ஐயமில்லை! ஐயமில்லை!
- அயன்புரம். த.சத்திய நாராயணன், சென்னை-72.

திருக்குளத்தின் புனிதத்தை அறிந்திருந்தாலும் நம் சௌகரியத்திற்காக நாமே அதைக் கெடுக்கிறோம். கோயில் குளங்களை புணரமைப்பதை இறைத்தொண்டாக பாவித்து, சரி செய்து, திருக்குள புனிதத்தை காப்பாற்றினாலே போதும்.  மீண்டும் மாதம் மும்மாரி பொழிவது நிச்சயம். இனியாவது ஊர்கூடி சத்தியம் செய்வோமா.
- அ.யாழினி பர்வதம்,சென்னை-78.

‘திருக்கோயிலும் திருக்குளமும் வெவ்வேறல்ல’ தலையங்கம் படித்தேன். பிற்காலத்தில் நாட்டு மக்கள் எவரும் தண்ணீருக்கு சிரமப்படக் கூடாது  என்பதற்காக கோயிலில் குளங்களை அமைத்து நிலத்தடி நீர் மட்டத்தைக் காத்த நம் முன்னோர்களின் அறிவு வியக்க வைக்கிறது. புதிதாக எதையும் செய்ய வேண்டாம். அவர்கள் அமைத்துத் தந்த குளம். ஏரி போன்றவற்றைப் பாதுகாத்தாலே போதும். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்பதை தக்க சமயத்தில் எடுத்துரைத்த ‘ஆன்மிகம்’ எங்கள் மனதில் உயர்ந்துவிட்டது.
- மு.மதிவாணன். அச்சல்வாடி, அரூர்-3, வா.மீனாவாசன், வந்தவாசி.

அத்திவரதர் நிகழ்த்திய அற்புதங்கள், அந்த 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து போகும் அரிய ஆன்மிக நிகழ்வின் ஆன்மிகப் பின்னணியை பக்தி பரவசத்துடன் படைத்திருந்த அருமையான ஆன்மிகக் கட்டுரை! (திருக்குளங்கள் பக்தி ஸ்பெஷல்)
- இரா.வளையாபதி, கரூர் மாவட்டம்.

திருக்கோயில்களின் திருக்குளங்கள் தொடர்பான படங்களுடன் கூடிய பல்வேறு தகவல்கள் யாவும் அரிய செய்திகளாகவும் சிறப்புச் செய்திகளாகவும் இருந்தன.
- ப.மூர்த்தி, பெங்களூரு-97.

ஒரு சொ(பொ)ட்டு மழைத்துளிகூட முழுமையாக காணாத இந்தத் தருணத்தில் சமய சஞ்சீவியைப்போல் தமிழகத்திலுள்ள முக்கிய திருக்கோயில்களின் தீர்த்தக்குளங்கள் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துச்சொல்லி அதன்  பெருமைகளையும் காண்பித்திருந்தது ஜோவென்ற மழை நீரில் தொப்பலாக நனைந்ததுபோல் பரிபூரண ஆனந்தத்தை அள்ளித்தந்தது.
- சிம்ம வாஹினி, சென்னை - 39.

‘‘விஷ்ணுதாசன் அவர்களின் தீர்த்தம் இன்றி அமையாது திருக்கோயில் என்ற கவிதையில், ‘மனிதரின் பாவங்களை கழுவியே பாதம் வெடித்து வறண்டு விட்டது’’ என்ற வரிகள் கவிதைக்கே மகுடம் வைத்த வரை வரிகள் எனலாம்.
- முனைவர். இராம.கண்ணன், திருநெல்வேலி.

மண் குளிர வான் மழையே வா! கட்டுரை மண்ணின் மைந்தர்கள் நலம் பேணும் பொதுநல நோக்கு மிளிர்ந்து இளங்கோவடிகள் மழைக்கு முக்கியத்துவம் தந்த மாமழை போற்றும் மாமழை போற்றும் என கூறிய சங்ககால பாடலை தங்கள் காலத்தில் மண் குளிர வான் மழையே வா! கட்டுரை வருணதேவன் கண் திறந்து கொட்டோ கொட்டு என கொட்டும் என்று ஆன்மிகம் பலன் வாசகர்கள் ஆழி மழை கண்ணனை பிரார்த்தித்து நிற்போம். தேரழகு கண்ணை கவர்ந்தது. கட்டுரையாளர் கருத்தோவியம் சிந்தை கவர்ந்தது. ஆன்மிகம் பலன் செழித்தோங்கியது.
- அரிமளம். R.தளவாய் நாராயணசாமி,  பெங்களூரு-76.