வயல்களை வளமாக்கிய வாராஹி



ஆட்சிலிங்கம்

அதிக பலமும் கோபாவேசமும் நிறைந்த விலங்கு காட்டுப்பன்றி, இந்த இனத்தில் ஆண் பன்றி, பெண் பன்றி ஆகிய இரண்டுமே வெறியுடன் எதிர்த்துப் போராடும் இயல்பைக் கொண்டவை.

அவற்றின் இலக்கு வெற்றி அல்லது வீரமரணமே. யானைகள் கூட பல சமயங்களில் போருக்கு பயன்படுத்தினால் பயந்துவிடும். ஆனால் காட்டுப் பன்றிகள் தாக்கத் தொடங்கி விட்டால் நிறுத்தாது. எதைக் கண்டும் அஞ்சாமல் எதிரிகளைத் தொடர்ந்து தாக்கும். பன்றிகள் வீரத்திற்கு அடையாளமாக இருப்பது போலவே அன்பிற்கும் அடையாளமானவை. மக்களைக் காக்கும்  தெய்வமாக வீரமும் அன்பும் நிறைந்த பெரிய தெய்வம் பெண்பன்றியின் வடிவில் காட்டில் உறைவதாகப் பண்டைய மக்கள் நம்பினர். அவளை வழிபட்டால் சகல சுகங்களும் கிடைக்கும் என நம்பினர்.

பன்றி முகத்துடன் கூடியவளாக விளங்கும் அவளை மக்கள் ஏனமுகப் பாவை என்றும், கேழல் முகச்செல்வி என்றும் போற்றி வழிபட்டனர். வடமொழியில் அவள் வாராஹி எனப்படுகிறாள். தொடக்கத்தில் தொல் பழங்குடியினரிடம் மலையகத்தில் இருந்த வாராஹி வழிபாடு பின்னாளில் அனைத்துச் சமயங்களிலும் கலந்து விட்டது என்பது ஆய்வாளர் கருத்தாகும். அவள் சைவ சமயத்தில் சப்த மாதர்களில் ஒருத்தியாகப் போற்றப்படுகிறாள். இவள் பூமாதேவியின் அம்சமாகத் திகழ்கிறாள். சாக்தர்கள் அவளை லலிதா தேவியின் சேனாதிபதியாகக் கொண்டாடுகின்றனர்.

சாக்த தந்திரத்தில் இவள் தண்டநாதா எனும் பெயரில் கிரிச்சக்கர ரதத்தில் பவனி வருபவளாகத் துதிக்கப்படுகின்றாள். சமண, பௌத்த சமயங்களிலும், வாராஹி வழிபடப்படுகிறாள். சைவம், வைணவம், சாக்த, வைரவம் முதலிய தந்திரங்களில் போற்றப்படும் வாராஹியைப் பற்றிய பல்வேறு செய்திகளை இப்பகுதியில் அறிந்து மகிழலாம். சைவ சமயத்தில்  சிவபெருமானுக்குரிய அஷ்ட பரிவாரங்களில் ஒன்றாக இருப்பது சப்தமாதர் குழுவாகும். இதில் ஏழு பெண் தெய்வங்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஐந்தாமவளாக இருப்பவள் வாராஹி. இவள் கலப்பை, தண்டம் ஏந்தியவளாகக் காட்சி அளிக்கின்றாள்.

திருமூலர் திரு மந்திரத்தில் இவளை ஆற்றல் மிக்க பெண் சக்தியாகப் போற்றுகின்றார். இந்த ஏழு மாதர்களுடன் எட்டாவது தேவியான யோகினியும் சிவபெருமானால் அந்தகாசுர வதத்தின் பொருட்டுக் கீழ்மைக் குணங்களில் இருந்து தோற்றுவிக்கப்பட்டதாகச் சிவமகாபுராணம் கூறுகின்றது. சென்னை கொத்தவால்சாவடி அண்ணாபிள்ளை தெருவிலுள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சிங்க வாகனத்தில் வாராஹி வீற்றிருந்து காட்சி அளிக்கிறாள். வைணவர்கள் வாராஹியை விஷ்ணுவின் சக்தியாகப் போற்றுகின்றனர்.  திருமாலின் மூன்றாவது அவதாரமான வராஹரின் சக்தி அம்சமாக இவள் வணங்கப்படுகிறாள்.

இவளை சங்கு, சக்கரம், கதாயுதம் ஏந்தியவளாகப் போற்றுகின்றனர். என்றாலும் இவள் வழிபாட்டை வைணவத்தில் காண முடியவில்லை. காட்டுப்பன்றிகள் வடிவத்தால் பெரியவை. உறுதியான தலையை உடையவை. காட்டில் கிழங்குகளைத் தோண்டியெடுத்து உண்பவை. அவை தோண்டிய இடங்களில் பயிர் செழிப்பாக வளர்வதைக் கண்டறிந்த ஆதிகால மனிதன் உழுவதற்கும் மண்ணைச் சமமாக்கி விவசாயம் செய்வதற்கும் கற்றுக் கொண்டான் என்கின்றனர். அதனால் உழுவதற்கும், நிலத்தைப் பண்படுத்துவதற்கும் உரிய தெய்வமாகப் பன்றிமுக தெய்வத்தைக் கொண்டாடினர். மேலும், விவசாய நிலங்களைப் பன்றிகள் பாழ்படுத்தாதிருக்கவும் பன்றி வடிவில் காடுகளில் நிலை பெற்றிருந்த தெய்வங்களை வழிபட்டனர்.

அத்தெய்வமே வாராஹி என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காட்டில் வாழ்ந்த மனிதன், வளமான வாழ்வை நல்கும் பெண் தெய்வத்தைப் பெரிய பன்றி வடிவில் வழிபட்டான். அத்தெய்வம் அவர்களுக்கு அருள்புரிந்து வருகிறாள் என்பர். இவளே உழவுத் தொழிலை மனிதனுக்குக் கற்பித்தாள் என்று கூறுவர். இவள் நிலத்தை உழும் ஏரையும், (கலப்பையும்) பெரும்பாறைகளை அடித்துத் தூளாக்கும். முசல (இரும்பு உலக்கையையும்)த்தையும்ஏந்தியுள்ளாள். பயிர்த்தொழிலின் கடவுளாக இருப்பதாலேயே உழுபடையான ஏரையும், பண்படுத்தும் இரும்பு உலக்கையும் கொண்டவைகளாகக் காட்சியளிக்கின்றாள் என்பர்.

  திருமூலர் திருமந்திரத்தில்,
  ஆன வராகமுகத்தி பதத்தினள்
  ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு
  எனை உழுபடை ஏந்திய வெண்ணகை
  ஊனமற உணர்ந்தார் உள்ளத்தோங்குமே.

என்று இவளை உழுபடையான கலப்பையையும், உலக்கையையும் ஏந்தியுள்ளவளாகப் போற்றுகின்றார். வேளாளர்கள் தங்கள் பயிர்த்தொழில் மேம்பட வாராஹிக்கு வழிபாடு செய்கின்றனர். நிலம் மாசுபடாதிருக்கவும், உழும் போது நிலம் இளகி மிருதுவாகி, பயிர்கள் செழிக்க ஏற்றதாக இருக்கவும், காட்டு விலங்குகளால் தொல்லை நேராதிருக்கவும் நன்கு விளைச்சல் காணவும் இவளை வழிபடுகின்றனர். நிலத்தை உழுது சமன்படுத்த உதவும் கலப்பையையும், தானியங்களை இடித்துக் குத்தி உணவுப் பொருளாக்க உதவும் உலக்கையையும் வாராஹி ஏந்தியிருப்பதும் அவர் வேளாளர்தம் கடவுள் என்பதை விளக்குகிறது.