வரலாற்றை தாங்கும் கல்வெட்டுக்களை காப்போம்



கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது நல்ல விஷயம்தான். அது ஆன்மிகரீதியாகவும், ஆகமரீதியாகவும் சூட்சுமமாக பிம்ப சாந்நித்தியத்தை எப்போதும் நிலை நிறுத்தச் செய்யும். கோயிலின் கும்பாபிஷேகத்திற்குப் பின்னால் ரிஷிகளாலும் முன்னோர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த விக்ரகத்தின் சூட்சுமத்தை எல்லோரையும் அறியச் செய்து தொடரச் செய்யலாம். அதுவரை, ஒரு கோயிலில் எந்தெந்த சிலைகள் இருந்தன என்று தெரியாமல் இருப்போருக்கு அதற்குப் பிறகு இவ்வளவு சிலைகளா நம் கோயிலில் என்று அறிவிக்கச் செய்யும் பெரும் காரியமாகும்.

இந்தச் சிலை நம் கோயிலிலா இருந்தது என்று அறியாதோர் கூட அன்று அணுகி அறிந்து கொள்வார்கள். இன்னொரு அருமையான விஷயம் என்னவெனில் அடுத்த தலைமுறைக்கு இந்தக் கோயிலை நாங்கள் எப்படியோ காப்பாற்றி கொண்டு வந்திருக்கின்றோம். இதேபோல் நீங்களும் திருப்பணி புரிந்து காப்பாற்றுங்கள் என்கிற அறிவிப்பும் அதிலிருக்கின்றது. ஆனால், கும்பாபிஷேகம் எனும் பெயரில் பல இடங்களில் அறியாமையின் காரணமாகவும், அலட்சியம் காரணமாகவும் கல்வெட்டுக்கள் சிதைக்கப்படுகின்றன. கோயிலென்பதை மக்கள் குழுமி வழிபாடு இயற்றுவதற்கு மட்டுமே என்கிற ஒற்றைப்படையாக நினைப்போர்கள் அதிகமாகி வருகின்றார்கள்.

அந்த நாளில் கோயிலே சமூகத்தின் மையமாக திகழ்ந்தது. சகல சமூக மாற்றங்களையும் கல்வெட்டாக பதித்தனர். இன்று நம்மிடையே வரலாறு என்றொன்று உண்டெனில் அது பெரும்பாலும் கோயிலின் கல்வெட்டு வழியாகத்தான் கிடைத்திருக்கின்றன. ஆனால், இதை எதையுமே அறியாதவர்கள் சர்வ சாதாரணமாக கோயில்களின் சுவற்றை சுத்தப்படுகின்றோம் என்று இயந்திரங்களின் வழியே வேகமாக காற்றைத்து பீய்ச்சி அடித்து பழமையான சிற்பங்களையும், கல்வெட்டுக்களையும், ஓவியங்களையும் சுத்தமாக சிதைக்கின்றனர்.

இன்னொரு கொடுமை என்னவெனில், பெரும் கல் தூண்களிலெல்லாம் கண்களை பறிக்கும் வண்ண நிறங்களை பூசி கற் தூண்களின் பழமை எனும் அழகை கெடுத்து வைக்கின்றனர். எல்லா சிற்பங்களையும் பூசி மெழுகினாற் போன்று செய்து விடுகின்றனர். பல கோயில்களில் உள்ள கல்வெட்டு தூண்களெல்லாம் கடைகளாக மாறி அப்படியே வரலாற்றையும் சேர்த்து மறைத்திருக்கின்றது. கொஞ்சம் பெரிய கோயில்களுக்குச் சென்று தூண்களில் சாய்ந்திருப்போரை கொஞ்சம் விலக்கி விட்டுப் பாருங்கள் மணிமணியான எழுத்துக்கள் நம் வரலாற்றை கண்கூடாகக் காட்டும். தெய்வங்களின் குடில்கள் நம்மை மட்டுமல்ல. நம் வரலாற்றையும் காத்து நிற்பது புரியும்.  

கிருஷ்ணா(பொறுப்பாசிரியர்)