நீர் தீர்த்தமாகும் ரகசியம்வணக்கம் நலந்தானே!

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாகத் தொடங்கினர்க்கு ஓர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே  - என்பது தாயுமானவ சுவாமிகள் வாக்காகும். இந்த இரண்டு வரிகளுக்குள் எவ்வளவு பெரிய கருத்து பாருங்கள். ஒருவர் கடவுளைப்பற்றியோ அல்லது தத்துவங்கள் குறித்தோ எதுவுமே தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. மெல்ல கோயில்களுக்குச் சென்று கொண்டிருந்தாலே போதும்.

அங்குள்ள இறையுருவச் சிலைகளையும், கோயில் தீர்த்தம் எனப்படும் திருக்குளத்திலுள்ள நீரை அருந்தியோ அல்லது தெளித்துக்கொண்டு வந்துவிட்டால் கூட போதுமானது. காலக்கிரமத்தில் சரியான பக்குவம் ஏற்பட்டு குரு கிடைப்பார் என்கிறார். அதிலும் ஓர் வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்று உறுதி கூறுகின்றார். ஓர் வார்த்தை என்பது உபதேசமாகும். மந்திரம் போன்ற அருளாணை. அப்பேற்பட்ட புனிதத் தன்மை வாய்ந்ததுதான் நம்முடைய தல தீர்த்தங்கள்.

ஒரு நீர் நிறைந்த குளமானது தீர்த்தம் எனும் புண்ணிய புஷ்கரணியாக மாறும்  மாயம் எப்படி நடக்கின்றது. இதற்கு நம் சமய மரபில் சில விஷயங்கள்  கூறப்படுகின்றன.  இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் மிகவும் சூட்சுமமானவை ஆகும். ஒவ்வொரு கோயில் தீர்த்தத்திற்கும் ஒரு பெயர் இருக்கும். அது அந்தந்த கோயிலின் புராணத்திலேயே இருக்கும். ஞானம் பெற்ற ஞானியானவனின் கண்ணோட்டத்தில் சகலமும் பிரம்ம மயம்.

அவன் எதைத் தொடுகின்றானோ அதுவும் தனிப் பெருஞ் சக்தியாக மாறிவிடும். அது கட்டையாக இருந்தாலும் சரி. கல்லாக இருந்தாலும் சரிதான். அது தனித்துவம் பெற்று விடும். அதுபோல ஏதோவொரு காலத்தில் ஒரு ஞானியானவர் ஒரு குளத்தில் இறங்கி நீராடினால் உடனே அந்த நீரானது தன்னுள் பெருஞ் சக்தியை சேகரித்து வைத்துக் கொள்கின்றது. இது நம் அறிவிற்கும், புலன்களுக்கும் கட்புலனாகாத விஷயமாகும்.

அந்தக் கணமே அந்த நீரானது தீர்த்தமென்று தனிப் பெருஞ் சக்தியோடு விளங்கத் தொடங்குகிறது. அதனால்தான் ஒரு ஞானி தன் கையால் தரும் தீர்த்தம், பழம் போன்றவைகள் அத்தனை முக்கியம் பெறுகின்றன.  இன்னொரு கோணத்தில் வேத மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி அதிர்வூட்டப்பட்ட விக்ரகங்களை கோயிலில் உள்ள புஷ்கரணியில் நீராட்டு செய்யும்போதே வேத மந்திரங்களை தேக்கி வைத்திருக்கும் சிலைகளின் மூலமாக நீருக்குள்ளும் வேத அலைகள் தானாகச் சென்று தங்குகின்றன. வேதத்தின் அதிர்வுகள் அந்த நீரின் தன்மையை மாற்றி சிறப்புச் சக்தியொன்று அதனுள் பாய்கின்றன.

 இப்படியும் ஒரு நீர் நிறைந்த குளம் புஷ்கரணி என்றும் தீர்த்தம் என்றும் சிறப்புத் தகுதியை பெறுகின்றன. பஞ்ச பூதங்களில் மந்திர அலைகளை தேக்கி வைத்திருப்பதில் நீர் சிறப்புடையதாகும். இப்படிப்பட்ட திருக்குளங்களின் இன்றைய நிலையினை பார்த்தோமானால் நிச்சயம் நம் கண்கள் கலங்கும். எப்பேர்ப்பட்ட பொக்கிஷங்களை நாம் பாதுகாத்துக் கொள்ளாது இழக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

கோயில் குளங்கள் அந்தந்த பகுதியின் நீர் மட்டத்தையும் தெளிவாகக் காட்டும். ஊர் முழுவதும் வறட்சியில் இருக்கும்போது அக்காலங்களில் கோயில் குளம் வற்றாமல் இருக்கும். ஆனால், இன்றைய நிலையே வேறு. கோயில் குளங்களை கழிப்பிடமாக்கி வைத்திருக்கும் அராஜகமெல்லாம் நம்மூரில்தான் நடக்கின்றது. இதற்கு மேல் தெரிந்து கொள்ள அருகேயுள்ள ஏதேனும் கோயில் குளத்திற்கு சென்று பாருங்கள். ஆன்மிக அமைப்புகளோ, கோயில் நிர்வாகத்தினரோ, பக்தர்களோ யார் முன்னெடுத்துச் செய்தாலும் பரவாயில்லை. கோயில் குளங்கள் அனைத்தும் கோயிலின் கருவறைக்கு நிகராக பேணப்பட வேண்டும். அது வெறும் நீர் அல்ல. ஆத்ம தீர்த்தம்.

கிருஷ்ணா (பொறுப்பாசிரியர் )