ஸ்ருதிஹாசன் ஃபிட்னெஸ்!



நடிகையும், பின்னணிப் பாடகியும் ஆன ஸ்ருதிஹாசன், சிறந்த நடிப்புத் திறமைக்கும், தனது வெளிப்படையான ஆளுமையாலும் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை தக்கவைத்துக் கொண்டவர்.
நடனத்திலும் தனித் திறமை பெற்றவர் ஸ்ருதி. ஃபிட்னெஸ் விஷயத்தில், தந்தையைப் போலவே, பல கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர். ஸ்ருதிஹாசனின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்துகொள்வோம்.

வொர்க் அவுட்ஸ்: ஃபிட்னெஸ் விஷயத்தில் அப்பாதான் எனக்கு குரு. தினசரி வொர்க் அவுட் விஷயத்துல அப்பா ஒருநாளும் எக்ஸ்கியூஸ் கொடுக்கவே மாட்டார். இன்று ஜிம்முக்கு போயே ஆகணுமா என்று நினைத்தால் கூட அப்பா சம்மதிக்க மாட்டார். தினசரி வொர்க் அவுட்ஸ் கட்டாயமாக செய்தே ஆகணும். 
எங்களுக்கு சொல்வது மட்டுமல்ல, அவரும் அதை தினசரி ஃபாலோ செய்வார். அவரோட ஃலைப்ல வொர்க் அவுட் பண்ணாத நாளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்போ அந்த ஹெல்த் கான்சியஸ் எங்களிடமும் இருக்கும்தானே. 

தினமும் எனது உடற்பயிற்சிகள் ஓட்டப்பயிற்சியில் தொடங்குகிறது. ஓட்டம் ஒரு நபரின் சுறுசுறுப்பு, சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. அதன்பின் 30 நிமிடங்கள் ஜிம் பயிற்சிகள், அதில் கார்டியோ பயிற்சிகள், கூடுதல் கலோரிகளை எரித்து உடல் எடையை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. அதன்பிறகு, 45-50 நிமிடங்கள் நடனப் பயிற்சிகளை மேற்கொள்கிறேன். இது எடையைக் குறைக்க உதவும் அதே வேளையில் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

 மேலும், 30 நிமிடங்கள் கிக் பாக்ஸிங் போன்ற சண்டைப் பயிற்சியிலும் ஈடுபடுகிறேன். இது எனக்கு மனத் தெளிவையும், நல்ல உடல் வலிமையையும் தருகிறது. அதுபோன்று, எனது பயிற்சிகளில் ஹுலா ஹூப் அடங்கும். அதிலும், மனதிற்கு இதமான நல்ல பாடல்களுடன் சண்டைப்பயிற்சி எடுத்துக் கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் சீக்ரெட் என்னவென்றால், நான் 90 - களின் இசைக்கு ஒரு மணி நேரமாவது நடனமாடுவேன். இந்த பயிற்சிகள்தான் என்னை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. 

டயட்: நல்ல ஆரோக்கியமான உடலமைப்பிற்கு உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் காலை உணவை நான் ஒருபோதும் தவிர்ப்பதில்லை. அதே சமயத்தில் கண்ணாபிண்ணா என்று எந்த உணவையும் உட்கொள்வதுமில்லை. ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து எனது உணவுத் திட்டங்களை அமைத்துக் கொள்கிறேன். 

அதுபோன்று பட்டினி கிடப்பது அல்லது உணவைத் தவிர்ப்பதை நான் ஒருபோதும் செய்வதில்லை. எனது உணவில் சரியான அளவு புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அதுபோன்று, தினசரி உணவில் முட்டை, மியூஸ்லி, இட்லி பிரஷ்ஷான பழங்கள், கீரைகள், காய்கறிகள், சாலட்கள், சூப்கள் மற்றும் கிரில்டு சிக்கன் ஆகியவை அடங்கும். மேலும், எனக்கு மிகவும் பிடித்த இரண்டு உணவுகள் சுஷி மற்றும் சாம்பார் ஆகும். 

சருமப் பராமரிப்பு: என்னுடைய சருமப் பராமரிப்பு முறை எப்போதும் உள்ளிருந்து தொடங்குவதாகவே இருந்து வருகிறது. எனவே, அடிப்படையில், சரியாக சாப்பிடுவது மற்றும் ஆரோக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியமாகும். 

அதுபோன்று நல்ல பளபளப்பான சருமத்திற்கு வறட்சியில்லாமல் சரியான அளவு ஈரப்பதம் வைத்திருப்பதும் மிகவும் முக்கியமாகும். அதற்கு தண்ணீர், பழச்சாறுகள் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும். 

மேலும், சருமம் பாதிக்கப்படாமல் இருக்க நல்ல தரமான தயாரிப்புகளைப் பயன்படுத்த விரும்புகிறேன், மேலும் நான் தனிப்பட்ட முறையில் சீரம்களை பயன்படுத்துவதையும் விரும்புகிறேன். இந்த சீரம்கள் என் சருமத்திற்கும் மேக்கப்பிற்கும் இடையில் ஒரு தடையை உருவாக்கி மேக்கப்பால் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. சருமத்திற்கு ஊட்டச்சத்தையும் அளிக்கிறது.

தலைமுடி பராமரிப்பை பொறுத்தவரை நாம் உடலுக்குள் என்ன செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. அந்தவகையில், நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். 

அதுபோன்று எனக்கு நேரம் கிடைக்கும்போது தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தடவுகிறேன். மேலும் நல்ல லீவ்-இன் கண்டிஷனரைப் பயன்படுத்துகிறேன்; என் தலைமுடி ஈரமாக இருக்கும்போது, அலசிய பின் அதைப் பயன்படுத்துகிறேன், எனவே, தலைமுடியை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. 

பொதுவாக தலைமுடி பராமரிப்பில் பலரும் செய்யும் தவறு என்ன தெரியுமா, எண்ணெய் தடவிய பின், பிசுக்குப் போக நன்றாக தலைமுடியை அலச வேண்டும். எண்ணெய் பிசுக்கு போகாமல் இருந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து அனைத்துப் பிரச்னைகளும் வரும். அதுபோன்று ஃபிட்னெஸின் தாரக மந்திரமே, தினசரி ஏழு முதல் எட்டு மணிநேரம் வரையான நல்ல தூக்கம்தான். தூக்கம் நன்றாக இருந்தால்தான் உடல் உற்சாகத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். 

- தவநிதி