எலும்பு மஜ்ஜை தானம்!



ரத்தப்புற்றுநோய், ஹெச்.ஐ.வி. போன்றவற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு எலும்புமஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சையை செய்கின்றனர். மேலும், உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்களில் இருந்தும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை காக்கிறது. 
உதாரணமாக, அமெரிக்காவில் பல வருடங்களாக ஹெச்.ஐ.வி. தொற்று இருந்தவர்கள் இரண்டு பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் உடலில் இருந்து இக்கிருமி முற்றிலும் நீங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த எலும்புமஜ்ஜை மாற்று என்பது என்ன.. அதன் பணி என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் எலும்பு மஜ்ஜை சிகிச்சை நிபுணர் மருத்துவர் எம்.பி.ராம்பிரபு. 

எலும்புமஜ்ஜை என்பது என்ன?

ஒவ்வொருவருக்கும் எலும்பினுள்ளே பஞ்சு போன்ற ஒரு திசு இருக்கும். அதைத்தான் எலும்பு மஜ்ஜை என்று அழைக்கிறோம். இந்த எலும்பு மஜ்ஜையிலிருந்துதான் ரத்த செல்கள் உருவாகிறது. 
இந்த ரத்த செல்களில் மூன்று வகைகள் இருக்கிறது. சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்ஸ் .இதில், நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை நுரையீரல் வழியாக மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை சிவப்பு ரத்தஅணுக்கள் செய்கிறது. 

இந்த ரத்தஅணுக்கள் குறைந்தால் ஹீமோக்ளோபின் அளவு குறைந்து ரத்த சோகை நோய் உருவாகும். அதே சமயம், நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பாக்டீரியாக்கள் ரத்தத்தை அடைந்துவிடாமல் தடுக்கும் பணியை வெள்ளை அணுக்கள் செய்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இது குறைந்தால், உடலில் பலவித தொற்றுகள் ஏற்பட்டு நோய்கள் உண்டாகும். பிளேட்லெட், ரத்தம் உறைவதற்கான செல்களை உற்பத்தி செய்யும் அணுக்கள் ஆகும். 

இவை ஒவ்வொருவரின் உடலிலும் 1லட்சத்துக்கு மேல் இருக்கும் அவை குறைந்து விட்டால், உடலிலிருந்து ரத்தம் வெளியேறும். அதாவது ஒருவருக்கு அடிபட்டவுடன், அந்த இடத்தில் உள்ள இவ்வகையான அணுக்கள் ஒன்று கூடி, ரத்தத்தை உறைய வைத்துவிடும். இவை இல்லை என்றால், ரத்தம் உறையாமல், ரத்தக் கசிவு ஏற்படும். இந்த மூன்று செல்களும் உற்பத்தியாகுமிடம்தான் எலும்புமஜ்ஜை.

எலும்புமஜ்ஜை பொருத்தவரை சப்பை எலும்புகள் என்று சொல்வார்கள். இடுப்பு எலும்பு, முதுகு எலும்பு, தோள் பட்டை எலும்பு, மண்டை ஓட்டு எலும்புகள், தொடை, கை போன்ற பகுதியில் உள்ள நீளமான எலும்புகள் போன்றவற்றின் இறுதி ஓரங்களில் இந்த எலும்புமஜ்ஜை இருக்கும். அங்கிருந்துதான் ரத்தம் உற்பத்தியாகும். இதில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால், ரத்த அணுக்கள் எல்லாம் குறைந்துவிடும். அதனால், பலவிதமான நோய்கள் உருவாகலாம்.

குறிப்பாக, ரத்தப் புற்றுநோய், இந்த ரத்த புற்றுநோய் ரத்தத்தில் அல்லது எலும்புமஜ்ஜையில் எங்கு வேண்டுமானாலும் கேன்சர் செல்கள் உருவாக்கலாம். இதுபோன்று உருவாகும் கேன்சர் செல்கள் ரத்தத்தில் கலந்து கல்லீரல், மண்ணீரல் என வேறு உறுப்புகளுக்கும் பரவும். இதைதான் ரத்தபுற்று நோய் என்கிறோம். இந்த ரத்தப்புற்று ஏற்படும்போது, எலும்புமஜ்ஜை பாதிக்கப்படலாம். 

சிலருக்கு எலும்புமஜ்ஜை வேலை செய்யாமலே கூட போய்விடலாம். இதனை ஏ பிளாஸ்டிக் அனிமியா என்று சொல்வோம். இதில் பல வகைகள் உள்ளன. இது ஒருவர் தொடர்ந்து உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளால் வரலாம் அல்லது ஏதாவது தொற்றினால் ஏற்படலாம் மேலும், ரசாயன நச்சுகளால் உருவாகலாம். இப்படி பல காரணங்களால் வரலாம். இதிலும் பல வகைகள் உள்ளன. 

உதாரணமாக, பிறந்த குழந்தை அனிமீக்காக இருந்தால், அதன் எலும்புமஜ்ஜையைப் பரிசோதித்து, அவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதாவது தலசீமியா என்று குறிப்பிடப்படும் குறைபாடு இருந்தால், மாற்று எலும்புமஜ்ஜையை அந்த குழந்தையின் ரத்த தொடர்புடையவரிடமிருந்து பெற்று சிகிச்சை செய்து, அந்த குழந்தையை காப்பாற்றுவார்கள்.


இதில் இன்னொரு வகை, மைலோ டைபிளாஸ்டிக் சின்ட்ரோம், (எம்.டி.எஸ்), இது வயதானவர்களை தாக்கக்கூடியது. இது வயது ஆக ஆக, எலும்புமஜ்ஜை சரியாக வேலை செய்யாமல் போவதனால் ஏற்படுகிறது. இதுபோன்ற பலவிதமான நோய்கள் எலும்புமஜ்ஜையினால் ஏற்படலாம். 

எலும்பு மஜ்ஜை புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும்

எலும்புமஜ்ஜை புற்றுநோயை பொருத்தவரை, ரத்தபுற்று நோய் என்றுதான் சொல்வோம். இந்த ரத்தபுற்று நோய் பெரும்பாலும், பத்து வயதிலிருந்து 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் ஒருசிலருக்கு முப்பதிலிருந்து ஐம்பது வயதிற்குள் வரலாம். 

இது பரம்பரை காரணமாக வரலாம் அல்லது மரபணு குறைபாட்டினால் வரலாம் அல்லது கதிர்வீச்சுகளால் வரலாம். சுற்றுசூழலில் கலந்து வரும் ரசாயன மாசுகளால் ஏற்படலாம். 

அதாவது, தண்ணீர், உண்ணும் உணவுகள் மூலமும் கலந்து வரும் ரசாயனங்களால் ஏற்படுவது. இந்த ரத்தபுற்று நோய் ஏற்படும்போது, நார்மலாக உள்ள எலும்புமஜ்ஜை அழியத் தொடங்கிவிடும். 

இது அழியும்போது, உடலில் உள்ள ரத்த அணுக்கள் குறைந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும். அதுபோன்று பிளேட்லெட் குறையும்போது, ரத்தம் உறையாமல், மூக்கு,வாய் வழியாக ரத்தம் வெளியே வருவது போன்றவை ஏற்படும்.. 

இதற்கான சிகிச்சை முறைகள் 

எலும்புமஜ்ஜையினால் ஏற்படும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொருவிதமான சிகிச்சை முறைகள் இருக்கும். உதாரணமாக, ரத்தபுற்று நோய் பொருத்தவரை, கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலமே பலர் குணமாகிவிடுவார்கள். இந்த ரத்த புற்றிலேயே 3 வகைகள் இருக்கிறது. 

ஒன்று அக்யூட் லுக்கிமியா, குரோனிக் லுக்கிமியா என இரண்டு விதம் இருக்கிறது. இந்த ஆக்யூட் லுக்கிமியா என்பது உடனடி அறிகுறிகளை காண்பித்துவிடும். குரோனிக் லுக்கிமியா மெது மொதுவாகதான் அறிகுறிகளை காண்பிக்கும். இதற்கு பெரும்பாலும் கீமோ தெரபி சிகிச்சைகள் அளிக்கப்படும். அதுவே, சற்று முற்றிய நிலையில் இருப்பவர்கள்தான் எலும்புமஜ்ஜை டிரான்ஸ்பிளாண்ட் செய்யப்படும். 

அதாவது, எலும்புமஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படும். இப்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டதால், ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. அதாவது, முன்பெல்லாம் எலும்புமஜ்ஜை எடுத்து மாற்று அறுவைசிகிச்சை செய்தார்கள். இப்போது, ரத்தத்திலிருந்து ஸ்டெம்செல்களை பிரித்து எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்கிறோம். 

ஸ்டெம்செல் என்பது எல்லா செல்களுக்கும் தாய்செல் போன்றது. அதாவது, சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட் எல்லாவற்றுக்கும் தாய்செல் போன்றது. எனவே, இந்த ஸ்டெம்செல்லை எடுத்து டிரான்ஸ்பிளாண்ட் செய்யும்போது, மற்ற செல்கள் எல்லாம் உற்பத்தியாக தொடங்கிவிடும். எம்.டி.எஸ் நோய்க்கு சில வகையான மருந்துகள் கொடுத்து, எலும்புமஜ்ஜை தூண்டிவிட்டு சிகிச்சையளிக்கப்படும். 

எலும்புமஜ்ஜை தானம் யார் யாருக்கு வழங்க முடியும்

எலும்புமஜ்ஜை தானத்தை பொருத்தவரை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்கள் யார் வேண்டுமானாலும் வழங்கலாம். ஸ்டெம்செல்கள் வழங்கலாம். அதாவது, எச்.ஐ.வி போன்ற தொற்று வியாதிகள் இருக்கக் கூடாது அவ்வளவுதான்.

எலும்புமஜ்ஜை தானம் வழங்குவதற்கென உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் பதிவு செய்து கொண்டு எலும்புமஜ்ஜை தானம் வழங்கலாம். அவர்கள் பெறப்படும் எலும்புமஜ்ஜையை பத்திரப்படுத்தி வைப்பார்கள். பின்னர், தேவைப்படுவோருக்கு வழங்குவார்கள். 

இதிலும் இரண்டு வகைகள் இருக்கின்றன. அவை ஆட்டோ லோகஸ், அலோஜீனிஸ் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. ஆட்டோ லோகஸ் என்பது ஒருவருடைய ஸ்டெம்செல்களை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். பின்னாளில் அவருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால். இந்த செல்களை அவர்களே பயன்படுத்திக் கொள்ளலாம். 

அல்லோஜீனிஸ் என்பது மற்றவர்களுக்கு தானமாக தருவது 

பொதுவாக, ஒருவருக்கு இந்த எலும்புமஜ்ஜை தானமாக தேவைப்படுகிறது என்றால் முதலில், உடன்பிறந்தவர்களிடம் இருந்துதான் எடுப்பார்கள். அவர்களின் எலும்புமஜ்ஜை பொருந்தவில்லை என்றால், ரத்தஉறவுகளில் யாருக்கேனும் பொருந்துகிறதா என்று பார்ப்பார்கள். அதுவும் சேரவில்லை என்றால், அமைப்புகளின் மூலம் தேடுவார்கள். 

உதாரணமாக ரத்ததானம் செய்யும்போது, எப்படி ரத்தப்பிரிவு பார்த்து தானம் வழங்குகின்றோமோ, அதுபோன்று எலும்புமஜ்ஜை மாற்று செய்ய வழங்குபவர், பெறுபவர் இருவரின் டிஷூவும் பொருந்தி வர வேண்டும். அப்போதுதான் அதனை பெறுபவரின் உடல் ஏற்றுக் கொள்ளும். 

அந்தவகையில், உடன் பிறந்தவர்களாக இருந்தால் 25 சதவீதம் பொருந்தி வர வாய்ப்பு உள்ளது. அதுவே, வெளி ஆட்களாக இருந்தால், லட்சத்தில் ஒருவருக்கு அல்லது பத்து லட்சத்தில் ஒருவருக்குத்தான் பொருந்தும். அப்படி தேடி, யாருக்கு அது பொருந்தி வருகிறதோ அதை வாங்கி மாற்று அறுவைசிகிச்சை செய்வார்கள். 

- ஸ்ரீதேவிகுமரேசன்