இதய அறுவைசிகிச்சைக்குப் பிறகு இரத்தக் கட்டிகளைத் தடுப்போம்!



இதயமே…இதயமே…ஹெல்த் கைடு!

இதய அறுவைசிகிச்சை என்பது உயிரைக் காக்கவும், வாழ்வுத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் ஒரு முக்கியமான மருத்துவ நடைமுறையாகும். ஆனால், சிகிச்சைக்கு பின் இயல்பு நிலைக்கு மீண்டு வரும் காலத்தில், இரத்தக் கட்டிகள் (Blood Clots) உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. இவ்வாறு கால்களில் உருவாகும் இரத்தக் கட்டிகளை ஆழக் குழாய் தடை (Deep Vein Thrombosis - DVT) என அழைக்கின்றனர். 
சில சமயங்களில் இக்கட்டிகள் கால்களில் உருவாகி, பின் நுரையீரலுக்கு சென்று ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நுரையீரல் நாளங்களில் அடைப்பை (Pulmonary Embolism - PE) ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். இதன் மூலம் அபாயங்களைத் தவிர்ப்பதோடு, மீண்டு வருவதற்கான மருத்துவ பராமரிப்பையும் குறைக்கமுடியும்.
இதுபோன்ற ரத்தக்கட்டிகள் விஷயத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன. சில முக்கிய குறிப்புகளை இனி பார்க்கலாம்.1. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைப் பின்பற்றுதல்மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்வது. 

இதய அறுவைசிகிச்சைக்குப் பிறகு, குறிப்பாக கார்டியோபுல்மோனரி பைபாஸ் [cardiopulmonary bypass] சம்பந்தப்பட்ட அறுவைசிகிச்சைக்கு பின், பெரும்பாலும் இரத்தக் கட்டி உருவாவதைத் தடுக்கும் மருந்துகள் (Anticoagulants) அளிக்கப்படுகின்றன. இதய அறுவை சிகிச்சை அதிலும் உதாரணமாக, ஹெபரின் (Heparin) போன்ற மருந்துகள் இரத்தம் விரைவில் கட்டி ஆகாமல் தடுக்கும்.

இது ஊசி அல்லது IV மூலம் செலுத்தப்படுகிறது,. இந்த சிகிச்சை நோயாளியின் உடல் நிலையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ரத்தத்தினால் உண்டாகும் கட்டிகளைத் தடுப்பதற்கும் அதிகப்படியான இரத்தப்போக்கைத் தவிர்ப்பதற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. நோயாளி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன பிறகும், அவருடைய உடல்நிலைக்குள்ள அபாயத்தின் அளவைப் பொறுத்து, ஆன்டிகோகுலண்ட் தொடரலாம்.

அறுவைசிகிச்சையில் இயந்திர இதய வால்வு பொருத்தப்பட்டாலோ அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்கு இதயத் துடிப்பில் குறைபாடு [ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் - atrial fibrillation] இருந்தாலோ, மருத்துவர் நீண்டகால ஆன்டிகோகுலேஷன் சிகிச்சையை பரிந்துரைக்கலாம். 

இந்த மருந்துகள் பயனுள்ளதாக இருந்தாலும், ஆனால் உணவு மற்றும் பிற மருந்துகள் அவற்றின் நேர்மறையான விளைவை பாதிக்கக்கூடும் என்பதால் தொடர் கண்காணிப்பு மற்றும் வழக்கமான இரத்தப் பரிசோதனைகள் தேவை. 

சில சந்தர்ப்பங்களில், ரிவரோக்சாபன் அல்லது அபிக்சாபன் [rivaroxaban / apixaban] போன்ற நேரடியாக வாய்வழி உட்கொள்ளும் புதிய ஆன்டிகோகுலண்டுகள் [direct oral anticoagulants] பரிந்துரைக்கப்படலாம். இவை உணவு அல்லது மருந்துகளின் மீது அதிக பாதிப்பை உருவாக்குவதில்லை.  இதனால், நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவையில்லை. இருப்பினும் இவற்றின் பயன்பாடானது அந்நோயாளியின்  மருத்துவ நிலையைப் பொறுத்தே அமையும்.

2. அழுத்தக் கருவிகள் மற்றும் ஸ்டாக்கிங் பயன்படுத்துதல்

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன், இயந்திர முறைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவமனையில் இருக்கும்போது, ​​நோயாளிகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக உங்கள் கால்களை இடைவிடாது அழுத்திவிடும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். 

இதற்காக கால்களைச் சுற்றி அணியப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் காலுறைகளில் காற்றை ஊதி மீண்டும் அதை வெளியேற்றும் சாதனங்கள் மூலம [intermittent pneumatic compression] ரத்த ஓட்டத்தை சீராக்கமுடியும். 

நோயாளிகள் பெரும்பாலும் கால்களை அழுத்திப் பிடிக்கும் காலுறைகளை [compression stockings] அணிவார்கள், இது கால்களில் நிலையான அழுத்தத்தை செலுத்துகிறது மற்றும் ரத்தம் ஒரே இடத்தில் சேர்வதையும்  மற்றும் உறைதல் உருவாவதையும் தடுக்க உதவுகிறது. 

நோயாளியின் உடல் இயக்கம் இன்னும் குறைவாக இருக்கும்போது, குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய ஆரம்ப நாட்களில் இந்த நடவடிக்கைகள் மிகவும் முக்கியம். குறிப்பாக படுக்கையிலேயே அதிக நேரம் இருக்கும் ஆரம்பகட்டத்தில் இவை மிகுந்த பயன் தருகின்றன.

3. இயன்றவரை சீக்கிரம் அசைவுகளைத் தொடங்குதல்

நம்முடைய உடல் இயக்கம் நாம் இயல்பு நிலைக்கு மீண்டெழுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நோயாளிகள் தங்கள் உடல் நிலை அனுமதிக்கும் அளவுக்கு விரைவாக எழுந்து நகர முயற்சி எடுக்க வேண்டும். முதலில் படுக்கையிலேயே கால் மூட்டுச் சுழற்சிகள் அல்லது பாதம் வளைத்தல் போன்ற எளிய பயிற்சிகளைச் செய்யலாம். 

பின்னர் உட்காருதல், நிற்பது, மற்றவர்கள் உதவியுடன் குறுகிய நடைப்பயிற்சி என படிப்படியாக முன்னேறலாம். இவை அனைத்தும் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இயக்கம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, தசைகளின் பலவீனத்தையும் குறைக்கிறது. அதேபோல் கட்டிகள் உருவாகும் வாய்ப்புகளையும், நுரையீரல் சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

4. வீடு திரும்பிய பின் கடைபிடிக்க வேண்டியவை

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்பும் சில முக்கிய அம்சங்களை பின்பற்ற வேண்டும்:

*மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
*கால்களில் அழுத்தம் கொடுக்கும் கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ் அணிய வேண்டும். 
*கால்களில் சிவப்பு, வீக்கம், சூடு அல்லது தோல் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.
*படுக்கையிலோ நாற்காலியிலோ இருந்தபடியே எளிய கால் பயிற்சிகளை (பாத சுழற்சி போன்றவை) தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

பாதப் பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட்களின் கண்காணிப்பிலோ அல்லது அவர்களது அறிவுறுத்தல்களின் படியோ மேற்கொள்ள வேண்டும்.

5. ஆரோக்கியமான வாழ்க்கை முறை

நீண்ட காலத்திலும் இரத்தக் கட்டி அபாயத்தை குறைக்க, நாம் நம்முடைய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நாம் சில பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவை.

*உடல் எடையை சீராக வைத்துக்கொள்வது.
*புகைபிடித்தலை நிறுத்துவது.
*உடல் இயக்கத்தை வழக்கமாக்குவது.

இவையனைத்தும் உங்களுக்கு பாதிப்பிலிருந்து மீண்டெழுவதை மேலும் எளிதாக்கும்.

6. உடல் உணர்த்தும் எச்சரிக்கையைக் கவனித்தல்

மேற்கூறியவை அனைத்தும் ஒன்றிணைந்து இரத்தக் கட்டியின் அபாயத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும். அதேநேரம் இரத்தக் கட்டி ஏற்படுவதற்கான அறிகுறிகள் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். இதுவே தக்க தருணத்தில் சரியான சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும். ரத்தக் கட்டி ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள்:

*கால்களில் வலி, வீக்கம் அல்லது சூடு உணர்தல்
*திடீர் மூச்சுத்திணறல்
*நெஞ்சு வலி

மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், நோயாளிகள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதும், சிகிச்சை பெறுவதும் கடுமையான சிக்கல்களைத் தடுக்க உதவும்.

இந்த பாதுகாப்பு முறைகள் மற்றும் வராமல் முன் கூட்டியே தடுக்கும் பழக்கங்களைப் பின் தொடர்வது, அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளை மேற்கொள்வது போன்ற அம்சங்கள் நம்முடைய உடல்நல பாதுகாப்பை வலுப்படுத்துவதால் சீக்கிரமே குணமடைய உதவுகின்றன.  

நமக்கான மருத்துவ பராமரிப்புத் திட்டத்தை கவனமாகப் பின்பற்றுவதன் மூலம், நோயாளிகள் சீராகவும் பாதுகாப்பாகவும் மீண்டு வருவதற்கான வாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்த முடியும் என்பது ஒரு நல்ல செய்தி. 

இதயம் மற்றும் மார்பக நிபுணர்
முகம்மது ரியான் சையது