இனி மிஸ் பண்ணாதீங்க!



நினைத்தாலே இனிக்கும்

எல்லா இடங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைக்கக் கூடியது கடலை மிட்டாய். சுவை அதிகம், விலை குறைவு என்பதால் இது பலருக்கும்  விருப்பமான தின்பண்டமாகவும் இருக்கிறது. வயது வித்தியாசமின்றி பலரையும் ரசித்து சுவைக்க வைப்பதும் கடலை மிட்டாயின் தனிச்சிறப்பு.எல்லாம்  சரிதான்… கடலை மற்றும் கடலை மிட்டாயின் மருத்துவ சிறப்புகள் என்ன?
- ஊட்டச்சத்து நிபுணர் கோகிலவாணி சக்திவேல் விளக்குகிறார்.

:கடலை மிட்டாயின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு அதன் முக்கிய கருப்பொருளான நிலக்கடலையை எப்படியெல்லாம் சாப்பிடுகிறோம்,  அதில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ சிறப்புகள் என்னென்ன என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம்.உலகின் சத்துமிகுந்த உணவுப் பொருள்  பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் பாதாம், முந்திரி பருப்புகளுக்கு நிகரானதாகவும், விலை  மலிவானதாகவும் இருப்பதால் இது ஏழைகளின் முந்திரி என அழைக்கப்படுகிறது. நமது உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களை  உள்ளடக்கியுள்ள நிலக்கடலையை நாம் பல விதங்களில் உட்கொள்கிறோம்.

ஊறவைத்து மற்றும் வேகவைத்து உண்ணுதல்
-------------
Acidity மற்றும் வாயு பிரச்னை உள்ளவர்கள் நிலக்கடலையை 6 முதல் 7 மணி நேரம் ஊறவைத்து சாப்பிடலாம். அதிகளவு வைட்டமின் மற்றும்  தாதுஉப்பு சத்துக்களை உடைய இந்தக் கடலையை வேகவைத்து சாப்பிடுவது நல்லது. வேக வைப்பதன் மூலம் தோலில் இருக்கும் நோய் எதிர்புப்  பொருளான Anti-oxidant பெறப்படுகிறது. இதன் மூலம் வறுத்த கடலையில் உள்ளதைவிட 3 முதல் 4 மடங்கு அதிகளவு Anti-oxidant-ஐ நாம்  பெறலாம்.

வறுத்து உண்ணுதல்

கடலையை வறுத்தும் உண்ணலாம். வறுத்த கடலையானது நமது உடலின் கொலஸ்ட்ரால் அதிகமாவதைத் தடுக்கிறது. இதில் உள்ள  Monounsaturated மற்றும் Poly unsaturated fatty acid ஆகியவை உடலின் கெட்ட கொழுப்பினைக் குறைக்கிறது. 28 கிராம் அளவு வறுத்த கடலையை  உட்கொள்ளும்போது நாம் 166 கலோரியைப் பெறலாம்.

பொரித்து உண்ணுதல்

நிலக்கடலையை எண்ணெயில் பொரித்தும் உண்ணலாம். இந்தக் கடலையில் கலோரியானது 170-ஆக உள்ளது. தொடர்ச்சியாக பொரித்த கடலையை  உட்கொள்வதால் கொழுப்பு அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி கடலையோடு உப்பு சேர்த்து உண்ணும்போது சோடியம் அளவு அதிகரிக்கிறது. எனவே,  இதை ரத்த அழுத்தம், ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

100 கிராம் நிலக்கடலையில் உள்ள சத்துக்கள்


கலோரி - 564
புரதம் - 26 கிராம்
கொழுப்பு - 47.5 கிராம்
கார்போஹைட்ரேட் - 18.6 கிராம்
கால்சியம் - 69 மில்லிகிராம்
பாஸ்பரஸ் - 401 மில்லிகிராம்
இரும்புச்சத்து - 2.1 மில்லிகிராம்   
தயமின் - 1.14 மில்லிகிராம்
ரிபோஃபிளேவின் - 0.13 மில்லிகிராம்
நியாசின் - 17.2 மில்லிகிராம்

மருத்துவ சிறப்புகள்

கடலை மிட்டாயில் உள்ள நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், கரையும் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, கால்சியம்,  பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் என அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் B1 (தயமின்) உடலுக்குத் தேவையான  ஆற்றலை கொடுத்து தசைகளை வலிமைப்படுத்துகிறது. மேலும் அது உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் அதிகரிக்கிறது. கடலையில் செறிந்துள்ள  வைட்டமின் B3(நியாசின்) மூளையின் செயல்பாட்டினைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. படிக்கிற மாணவர்களுக்கு ஞாபக  சக்தியினை அளிக்க வல்லது. சரியான அளவில் தொடர்ச்சியாக உட்கொண்டு வருவதன் மூலம் நரம்பு செல்களை செயல்படுத்தி பார்க்கின்ஸன்,  அல்ஸைமர் போன்ற நரம்பு சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

கடலையில் உள்ள Monounsaturated fatty acid, Olelic acid ஆகியவை ரத்தத்திலுள்ள High density lipoprotein என்று சொல்லப்படுகிற நல்ல  கொழுப்பினை சமன்செய்து, Low density lipoprotein என்கிற கெட்ட கொழுப்பினைக் குறைப்பதோடு இதய வால்வுகளையும் பாதுகாக்கிறது. சைவ  உணவுகளில் சோயாபீன்ஸ்-க்கு அடுத்தபடியாக தரமான புரதத்தினை உடையது நிலக்கடலை. அசைவ உணவினை விரும்பாதவர்களுக்கு இது  போதுமான புரதத்தினை அளிக்கிறது. கடலையில் உள்ள Tryptophan என்கிற முக்கிய அமினோ அமிலம் Serotonin என்ற உயிர்வேதிப்பொருள்  உற்பத்திக்கு உதவுகிறது. இந்த செரடோனின் மூளை நரம்பினைத் தூண்டி மன அழுத்தத்தினைக் குறைக்கிறது.

கடலையில் உள்ள Folic acid கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதை இளம்பெண்கள் தொடர்ந்து உட்கொண்டு வருவதால்  கருப்பை சீராக செயல்படுவதுடன் கருப்பைகட்டி, நீர்க்கட்டி ஏற்படுவதை தடுக்கிறது. இதில் உள்ள Polyphenol என்கிற Anti-oxidant ஆனது நோய்  வருவதை தடுப்பதுடன், இளமையை பராமரிக்க உதவுகிறது. ஆண்களும், பெண்களும் இதை உட்கொண்டு வருவதால் ஹார்மோன் செயல்பாட்டை  சீராக்கி, மலட்டுத்தன்மையை குறைக்கிறது. கடலையில் உள்ள தாமிரம், துத்தநாகம் போன்ற நுண்சத்துக்கள் உடலின் தீமை செய்யும் கொழுப்பினைக்  குறைத்து, நன்மை செய்யும் கொழுப்பினை அதிகரித்து ரத்த ஓட்டத்தினை சீராக்குகின்றன. இதில் உள்ள மெக்னீசியம் என்ற நுண்ணூட்டச்சத்து  இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்கச் செய்து ரத்த சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்துகின்றன. இந்தக் கடலையில் சோடியம் அளவு  குறைவாக இருப்பதால் இவை ரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கின்றன. இதை உண்டுவரும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு 70  சதவிகிதம் மூளைத்தண்டுவட பாதிப்பு குறைகிறது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இதை உட்கொள்வதால் நன்மை பெறலாம்.

தினமும் 30 கிராம் அளவிற்கு நிலக்கடலையை உட்கொள்வதால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தடுக்கலாம்.
வாரத்திற்கு 5 முறை, ஒரு கைப்பிடி அளவு எடுத்து வருவதால் இதயநோய் வராமல் தடுக்கலாம். வாரத்திற்கு 2 முறை கைப்பிடி அளவு எடுத்து  வருவதால் ஏற்கெனவே இதயநோய் உள்ளவர்களின் இறப்பு விகிதம் 24 சதவிகிதம் குறைக்கப்படுகின்றது. இந்தக் கடலையில் உள்ள நார்ச்சத்து சிறந்த  மலமிளக்கியாக உள்ளது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பினை வலுவடையச் செய்கிறது.கடலைமிட்டாயின் மகத்துவம்  நிலக்கடலையும், மண்டை வெல்லமும் சேர்த்து இனிப்புச் சுவையுடையதாக தயார் செய்யப்படுவதுதான் கடலை மிட்டாய். இது பல சத்துக்களை  கொண்டுள்ள ஒரு சிறந்த மருத்துவ குணமுடைய தின்பண்டமாக திகழ்கிறது.

கடலை மிட்டாய் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் அதிக அளவு தயார் செய்யப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டிற்கு  பெருமை சேர்க்கும் விதமாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு(Geographical Indication) கிடைத்துள்ளதையும் இங்கே  நினைவுபடுத்திக் கொள்ளலாம். நிலக்கடலை உடலுக்கு நன்மை தரக்கூடியதுதான் என்றாலும், அதிக அளவு உண்டால் பித்தத்தினை உண்டாக்கும்.  அதேவேளை, அதனோடு சிறிதளவு வெல்லம் சேர்த்து உண்பதால் பித்த குணம் நீக்கப்படுகிறது. கடலையின் பித்தத் தன்மையானது வெல்லம்  சேர்ப்பதால் சீர்செய்யப்படுகிறது.

கடலையுடன் வெல்லம் சேர்க்கப்படும்போது இரும்புச்சத்து அதிகரிப்பதால் ரத்த சோகையைத் தவிர்க்கலாம். கடலை மிட்டாயானது புரதம், இரும்பு,  செலினியம் சத்துக்களையும் அபரிமிதமாகத் தருகிறது. இத்தனை சிறப்புகளை உடைய நிலக்கடலையில் செய்யப்படும் கடலை மிட்டாயை பெற்றோர்  குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து அவர்களை பழக்க வேண்டும். பதப்படுத்திகள், சுவையூட்டிகள், நறுமணமூட்டிகள் என்று பல்வேறு வகையான  வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிற உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்களைத் தவிர்த்து, நமது பாரம்பரிய  தின்பண்டமான சத்துமிக்க கடலை மிட்டாயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதன் மூலம் மேற்சொன்ன நன்மைகளை  நாம் பெற முடியும்.

- க.கதிரவன்

ஹெல்த்தி  கடலை மிட்டாய்... வீட்டிலேயே செய்யலாம்!

நிலக்கடலையை நன்கு வறுத்து, மொறுமொறுப்பாக எடுத்துக் கொண்டு அதன் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும். கடலை எவ்வளவு எடுத்துக் கொள்கிறோமோ அதே அளவு, வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது உதாரணமாக 150 கிராம் கடலை  எடுத்தால் 150 கிராம் வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெல்லத்தினை தண்ணீர் சேர்த்து காய்ச்சி நன்கு கிளற வேண்டும். தேவைக்கேற்ப நெய் சேர்த்துக் கொள்ளவும். வெல்லம் காய்ச்சும்போது அடுப்பினை  மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளவும். வெல்லப்பாகு கம்பிபதம் வரும் வரை காய்ச்சவும். பிறகு உடைத்த நிலக்கடலையை வெல்லப்பாகுடன்  சேர்த்து, நெய் தடவிய தட்டு வடிவ பாத்திரத்தில் வைத்து சமன்படுத்தவும். பிறகு அதனை துண்டுகளாக வெட்டி எடுத்தால் சுவையான கடலை  மிட்டாய் சாப்பிடத் தயாராகிவிடும். வாசனையாக வேண்டுமென நினைத்தால் சிறிதளவு ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம்.