புகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை?!



No Smoking

புகையிலையில் உள்ள நிக்கோட்டின் தீவிரமான போதைப் பழக்கத்தை உண்டாக்கும் ஒரு பொருளாக உள்ளது. அது சில நாட்களுக்கு உற்சாக  உணர்வைத் தரும். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இதயம், நுரையீரல், வயிறு மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒருவர் புகை பிடிப்பவராக இல்லாமல் இருந்தாலும், புகைப்பவர்களோடு தொடர்பு உண்டாகலாம். அது எதிர்மறை புகைத்தல்(Passive smoking) என்று  அழைக்கப்படுகிறது. இதுவும் பல பிரச்னைகளை உருவாக்கலாம். புகைப்பிடிக்கத் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே ஒருவர் உடல் மற்றும் உணர்வு  ரீதியாகவும் நிக்கோட்டினுக்கு அடிமையாகிவிடுகிறார். நிக்கோட்டின் என்பது அந்த அளவுக்கு மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு போதைப் பொருள்.  இதனால்தான் புகையிலைப் பழக்கத்தைக் கைவிட முடியாமல் பலரும் சிரமப்படுகிறார்கள்.

ஆனால், சரியான அணுகுமுறை மூலம் எல்லோராலும் இதைச் சாதிக்க முடியும். புகையிலைப் பழக்கத்தைக் கைவிட மிகுந்த பொறுமையும் மன  வலிமையும் தேவை. ஒரு நாளில் முடியாவிட்டாலும் படிப்படியாக முடியக்கூடியதே. இதன் முதல் கட்டமாக புகைப்பதை கைவிடுவதால் ஏற்படும்  பின் விளைவுகளையும் நன்மைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இருமல், தொண்டை புகைச்சல், வாய் துர்நாற்றம், தோலில் படை, பற்கள்  நிறமிழத்தல், நிமோனியா, மாரடைப்பு போன்ற பல எண்ணற்ற பிரச்னைகளும் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் புகையிலையால் உள்ளது. இதை  முதலில் சிந்தித்தாலே போதும்.

மேலும் புகைப்பிடிக்கும் நபர்களிடமிருந்து விலகியிருத்தல், புகையிலைப் பயன்படுத்தப்படும் சூழ்நிலைகளைத் தவிர்த்தல், ஆரோக்கியமான  உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் போன்றவையும் மனமாற்றத்தை ஏற்படுத்தும். முழு நம்பிக்கையோடு முயற்சி செய்வது  மிகவும் அவசியம். தேவைப்படும் பட்சத்தில் உளவியல் மருத்துவரின் ஆலோசனையும் பெற்று புகையிலையைக் கைவிடலாம்.

- கௌதம்.