உற்சாகம் தரும் உறவு!



தம்பதியர் கவனத்துக்கு...

தாம்பத்ய உறவானது குழந்தைகளை உருவாக்கவும், இன்பம் துய்க்கவும் மட்டுமே இல்லை. அதற்கு உடல் மற்றும் மனரீதியான பல பயன்களும்  உண்டு என்று செக்ஸாலஜிட்டுகள் பரிந்துரைக்கிறார்கள். முதல் நாள் இரவு நிகழும் தாம்பத்ய உறவு, அடுத்த நாள் காலையில் உங்களை உற்சாகமாக  செயல்பட ஆற்றலைத் தரும் என்றும் கூறுகிறார்கள்.

பொதுவாக 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதால் 0.05 ரத்த ஆல்கஹால் அளவிற்கு உங்களுடைய செயல்திறன் குறைகிறது. அதே  நேரத்தில் வழக்கமாக தூங்கச் செல்லும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக படுக்கைக்குச் செல்வதன் மூலம் அடுத்த நாள் 2 கப் காபியிலிருந்து  கிடைக்கும் ஆற்றலைப் பெறலாம். சீக்கிரமே தூங்கச் செல்லும் பழக்கத்தால் இதுபோல் ஆற்றலைப் பெறுவது போலவே, இரவில் தாம்பத்ய உறவு  கொள்வதும் அடுத்த நாள் காலையில் புத்துணர்வுடன் எழ வைக்கும்.  

மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும், இதயநலனின் வலுவினை அதிகரிக்கச் செய்வதற்கும் உதவுகிறது. உங்களுடைய உடல்  நோய்களைப் போக்க உதவுவதோடு ரத்த சுழற்சியை அதிகரிக்கச் செய்கிறது. உறவு கொள்வது எண்டோர்பின்களின் வெளியீட்டை ஊக்குவிக்கிறது. இது  மனச்சோர்வைத் தடுக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அடுத்த நாள் தூக்கத்திலிருந்து எழும்போது இளமையான உணர்வினைப்  பெறுவதாகவும் பல தம்பதியர் ஆய்வில் கூறியிருக்கிறார்கள். முக்கியமாக சிறப்பான தாம்பத்ய உறவில் இருக்கும் தம்பதியர் அன்பு, அன்னியோன்யம்  உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று பல ஆராய்ச்சிகள் கூறியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள் என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள்!

- க.கதிரவன்