கொழுப்பு மட்டுமே காரணம் இல்லை!!



அறிந்துகொள்வோம்

இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகம் பயப்படுவது Heart attack. இந்த மாரடைப்பு நோய்க்கு ஒரே காரணம் கொலஸ்ட்ரால்  என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதய ரத்த நாளங்கள் அடைத்துக் கொள்வதற்கும், சில நேரங்களில் மாரடைப்பிற்கும்,  உடலிலுள்ள அதிக கொழுப்புதான் காரணம் என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டுமிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. கொழுப்பைத் தாண்டி,  பல காரணிகள் இதயநோயை ஏற்படுத்துகின்றன.

உண்மையில் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் கொழுப்புப் பொருள் ஆயிரக்கணக்கான உடல் செயல்பாடுகளைச் செய்ய பயன்படுகிறது. 75 சதவீத  கொழுப்பு கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீத கொழுப்பு மட்டுமே நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படுகிறது. கொழுப்பு,  உடலில் சவ்வுகளை உருவாக்க பயன்படுவதோடு, போதுமான ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு  இரண்டும் இருக்கிறது. ஆனால், நாம் கொலஸ்ட்ரால் என்ற வார்த்தையை கெட்ட கொழுப்பை குறிப்பிட பயன்படுத்துகிறோம். அதுவே நம்முடைய  இதயநோய் பலவற்றிற்கும் காரணமாக கற்பித்துக் கொள்கிறோம்.

இதய பிரச்னைகளுக்கு இதய அடைப்பு, இதய வீக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் இருந்தாலும், 30  சதவீதம் மட்டுமே பங்களிக்கக்கூடிய கொழுப்பை முழு குற்றவாளியாக்குகிறோம். எனவே, கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் வெறுமனே கவனம்  செலுத்துவதற்குப் பதிலாக, இதயத்தை முழுமையாக கவனிப்பதற்கான நடவடிக்கைகளை ஒருவர் சிறுவயது முதலே மேற்கொண்டால் மட்டுமே  ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

ஆரோக்கியமான உணவு

குழந்தைப் பருவத்தில் இருந்தே நிறைவுற்ற கொழுப்புகள், சோடியம் சேர்க்கப்பட்ட மற்றும் அதிக இனிப்பு உணவுகள் எடுத்துக் கொள்வதை  கட்டுப்படுத்த வேண்டும். அதற்குப் பதில், ஃப்ரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகளை சாப்பிட்டு வருவதால், இதய நோயை  வரவழைக்கக்கூடிய ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களை தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான எடை பராமரிப்பு மற்றும் உடற்பயிற்சிகள்

அளவுக்கதிகமான உடல் எடையும், உடல்பருமன் நோயும் இதய நோயை வரவழைக்கக் கூடியன. உடல்பருமனானது உயர் ரத்த கொழுப்பு மற்றும்  ட்ரைகிளிசரைடு அளவுகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ள இதய நோய் ஆபத்து காரணிகளோடு இணைக்கப்பட்டுள்ளது. உடல் எடையை  கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்துகளை குறைத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சிகள் உங்கள் இதயத்தை பலப்படுத்துவதோடு இதயத்துக்கு  செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. மேலும், கொழுப்பின் அளவை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உடற்பயிற்சிகள்  உதவுகின்றன. இதன் மூலம் உங்கள் இதய நோய்க்கான ஆபத்தையும் குறைத்துக் கொள்ள முடியும்.

மன அழுத்தத்தை நிர்வகித்தல்

மன அழுத்தமும், இதய நோயோடு தொடர்புடையது. மன அழுத்தம் உள்ள ஒருவருக்கு ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதிதீவிர மன அழுத்தம், ஹார்ட்  அட்டாக்கை தூண்டக்கூடியது. மன அழுத்தத்தை சமாளிப்பதற்காக ஒருவர் அதிகப்படியான உணவு உட்கொள்தல், குடிபோதைக்கு அடிமையாதல்  மற்றும் தொடர் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கும் உள்ளாவது, இதயத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. இந்த கொடிய பழக்கங்களுக்கு பதில்,  மன அழுத்தத்தை சமாளிக்க உடற்பயிற்சிகள், இசை கேட்பது, தியானம் போன்ற நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

போதுமான தூக்கம்

எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கு போதிய தூக்கம் இல்லையெனில் தானாகவே உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு போன்ற அழையாத  நோய்கள் வந்துவிடுகிறது. இந்த 3 நாள்பட்ட நோய்கள்தான் இதயநோய்க்கான முக்கிய காரணிகள். பெரியவர்களுக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம்  அவசியம். அதனால், இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்குவது, அதிகாலையில் எழுவது போன்ற நல்ல தூக்க பழக்கங்களை வழக்கப்படுத்திக்  கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு தூக்கக் குறைபாடு இருந்தால் மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டாலே  இதய நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

- உஷா நாராயணன்