பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!



ஆராய்ச்சி

பெண்களை அச்சுறுத்தி வரும் காரணிகளில் Cervical Cancer என்கிற கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் ஒன்று. சராசரியாக ஓர் ஆண்டில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இதனால் பாதிப்புக்குள்ளாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் Jo’s cervical cancer அறக்கட்டளை ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது.

பெரும்பாலும், கர்ப்பப்பை புற்றுநோயானது HPV(Human papillomavirus) என்கிற வைரஸால் உண்டாகிற தொற்று காரணமாகத்தான் பெண்களைப் பாதிக்கிறது. இது வைரஸின் பிரிவுகளில் காணப்படுகிற பொதுவான நோய்க்கிருமி ஆகும். HPV தவிர பிறப்புறுப்பில் காணப்படும் மருக்கள், தலை மற்றும் கழுத்து போன்ற இடங்களில் ஏற்படுகிற புற்றுநோய் ஆகியவையும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கின்றன.

இங்கிலாந்து உட்பட பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற 14 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தப் புற்றுநோயைத் தடுக்கும் விதமாக 12, 13 வயதுடைய பெண்களுக்கு HPV தடுப்பு மருந்து ஊசி மூலம் இரண்டு தடவை செலுத்தப்பட்டது. ஹெச்.பி.வி தடுப்பு மருந்து பெண்களுக்குக் கொடுக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில், 15-லிருந்து, 19 வயதுக்குட்பட்ட பெண்களில் 66%-மும், திருமணமான மகளிரில் சராசரியாக, 20-லிருந்து 24% வரை கர்ப்பைப்பை புற்றுநோய் அபாயம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியை மேற்கொண்ட டாக்டர் டேவிட் மெஷ்ஷர், ‘நாங்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதைப் பார்த்து வருகிறோம். எனவே, எங்களுடைய ஒவ்வொரு தீர்மானமும் இந்தப் புற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் ஆற்றல் உடையதாகத் திகழும்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். லான்செட் மருத்துவ இதழிலும் இந்த ஆராய்ச்சி முடிவுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

- விஜயகுமார்