டியர் டாக்டர்



* ஆசிரியர் முதல் சீஃப் டிசைனர் வரை உள்ள பொறுப்பான அனைவருக்கும் குங்குமம் டாக்டரின் ஆறாம் ஆண்டின் நல்வாழ்த்துக்கள். கடந்த 5 ஆண்டுகளாக செய்து சாதித்த மருத்துவ ஆலோசனைகள் மகத்தானவை, மற(று)க்க முடியாதவை. அசல் மருதாணியின் பயன்கள் அழகும் ஆரோக்கியமும் மிக்க விஷயங்கள் என்பதனை வெளியிட்டது நன்று. ரவுண்ட்ஸ் ‘தஞ்சாவூர்’ - ஊர் கதம்பப்பூ மாதிரி மணம் வீசியது!
- சிம்மவாஹினி, வியாசர் காலனி.

* நரம்பியல் நலம், பாரம்பரியம், நாட்டு நடப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு, கண்களின் ரகசியம், டயட் என 6 புதிய தொடர்களும் ஆறு ரத்தினங்கள். அனைத்துமே நிகழ்காலத் தேவைக்கான விஷயக்களஞ்சியங்கள். ‘குங்குமம் டாக்டருக்கு’ ராயல் சல்யூட். மொத்தத்தில் 6-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில், வாசகர்களுக்கு பயனுள்ள புதிய தொடர்களைத் தந்தமைக்கு நன்றி.
- பொ.நாராயணன், பாண்டி.

* மறந்துபோன பாட்டி வைத்தியத்தில் அதன் அருமை பெருமைகளை இன்றைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்திருந்தார் சித்த மருத்துவர் திருநாராயணன். நல்லதொரு முயற்சி!
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* சரியான தருணத்தில் ஒரு வில்லிலிருந்து புறப்பட்ட கூர்மையான அம்பு போன்ற ஒரு கவர் ஸ்டோரி. ‘வயாகரா சொல்வதெல்லாம் உண்மையல்ல’ கவர் ஸ்டோரியில் பல நுணுக்கமான விஷயங்களை எடுத்துக்காட்டி தெளிவுபடுத்தியதை வாயார பாராட்டியே ஆக வேண்டும். நரம்பியல் நலத்தில் கேள்விகளும் அதற்கேற்ற பதில்களும் எல்லோருக்கும் அடிக்கடி எழும் ஐயங்களைப் போக்கின. ‘எது எனக்கான டயட்’ மிகவும் சிந்திக்க வைத்துவிட்டது. ம(ப)றந்துபோன பாட்டி வைத்தியத்தின் மகத்துவம் பலம் வாய்ந்தது என புரிந்துவிட்டது.
- சுகந்தி நாராயணன், வியாசர்பாடி.

* Fresh Dates என்று விற்கப்படும் பேரீச்சையைப் பல இடங்களில் பார்த்துவிட்டு குழப்பத்துடன் கடந்திருக்கிறேன். அதன் மகத்துவங்கள் தெரியுமா? எனக் கேட்டு பேரீச்சையின் மருத்துவ குணங்கள் அனைத்தையும் விரிவாக விளக்கி சந்தேகத்தைப் போக்கிவிட்டீர்கள். IVF தொடர்பாக பலருக்கும் இருக்கும் சந்தேகங்களையும் போக்கியிருந்தீர்கள்.
- எல்ஜின் ஜோசப், செங்குன்றம்.

* பெண் இனத்தின் நலனைப் பாதுகாக்க, ‘பஞ்ச சூத்திரம்’ எவ்வாறு பயன்படுகிறது? என்பது தொடர்பாக, உணவியல் நிபுணர் சிவப்பிரியாவின் பேட்டி பல அரிய தகவல்களைத் தந்தது. கால்சியம் அனைவருக்கும் தேவை என்று புரிய வைத்தது கடந்த இதழின் ‘எலும்பே நலம்தானா’ அத்தியாயம்.
- வளர்மதி, திருச்சி.

* ‘பர்ஃபெக்‌ஷனும் பக்கவிளைவும்’ தகவல்கள் அருமை. பர்ஃபெக்‌ஷன் பேர்வழி என்ற பெயரில் மன அழுத்தம், ப்ளட் பிரஷர் என உடல் நலனைக் கெடுத்துக் கொள்பவர்களுக்கு நவீன உளவியல் வல்லுனர்களின் எச்சரிக்கைகள் நல்ல சாட்டையடியாக இருந்தன.
- வாசுதேவன், வடபழனி.

* இந்தியாவின் தேசிய மலர் தாமரையின் மருத்துவப் புதையலை தோண்டியெடுத்து தந்திருந்தார் சித்த மருத்துவர் அபிராமி. செல்லப்பிராணிகள் பற்றிய கட்டுரையைப் படித்ததும், எனக்கும் நாய், முயல் வளர்க்கும் ஆசை தோன்றியது.
- பாபு, ஈரோடு