நச்சுக்களை நீக்குமா Detox Foot Pads?!



சர்ச்சை

உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முறையை ஆங்கிலத்தில் Detox என்கிறார்கள். டீடாக்ஸ் என்பது பல முறைகளில் செய்யப்படுகிறது. அதில் புதிதாக இணையத்தில் மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்து வருவது Detox Foot Pads. இது உண்மையில் நம் உடலுக்கு நன்மை பயக்கிறதா?!

டீடாக்ஸ் ஃபுட் பேட்ஸ் வெள்ளை நிறத்தில் பட்டையாக இருக்கும். இந்த ஃபுட் பேடை இரவு முழுதும் நம் பாதத்தில் ஒட்டி வைக்க வேண்டும். இரவு முழுதும் நம் பாதத்தில் இருக்கும் அந்த பேட் காலையில் நிறம் மாறி கருப்பாகிவிடும். நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி அந்த பேடில் தங்கிவிடுவதால் அந்த பேட் நிறம் மாறும். அதாவது, நம் உடலின் நச்சுக்களை டீடாக்ஸ் ஃபுட் பேட் உறிஞ்சி எடுத்துவிடும். நம் உடலில் எந்த அளவு நச்சு இருக்கிறதோ அந்த அளவு அந்த பேடு நிறம் மாறும். தொடர்ந்து இந்த ஃபுட் பேடை பயன்படுத்தி வரும்போது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காலையில் பார்க்கும்போது அந்த பேட் சுத்தமாக இருக்கும்.

இதன் மூலம் நம் நச்சுக்கள் முழுவதுமாக வெளியேறி, உடல் சுத்தமாகிவிட்டது என்று பொருள் என்கிறார்கள். 10 நாட்கள் செய்து முடித்தால் ஒரு டீடாக்ஸிஃபிகேஷன் தெரபி முழுமையடையும். தேவையைப் பொறுத்து 2, 3 டீடாக்ஸிஃபிகேஷன் தெரபியை பயன்படுத்தலாம். கால்களில் டீடாக்ஸிஃபிகேஷன் தெரபியை முடித்த பின்னர் இதனை கைமூட்டு, கால் மூட்டு, முதுகுப் பக்கமும் பயன்படுத்தலாம். ஆண், பெண் இருவருமே இதனை பயன்படுத்தலாம். இதில் இஞ்சி, உப்பு மற்றும் மூங்கில் வினிகர், மர வினிகர் போன்றவற்றோடு வேறு சில இயற்கைப் பொருட்களையும் பயன்படுத்துகிறார்கள். நச்சு வெளியேறுவதால் கால் மூட்டு வலிகளும் குறையுமாம்.

டீடாக்ஸ் ஃபுட் பேட்ஸ் நல்லதா?!

விளம்பரங்களின் மூலம் கேள்விப்படுகிறோம் தவிர இதில் அறிவியல் பூர்வமான உண்மை எதுவுமில்லை என்றே நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஃபுட் பேட்ஸ் டீடாக்ஸ் செய்வதற்கான சிறந்த வழி என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. இந்த ஃபுட் பேடை பயன்படுத்துவதால் இத்தகைய நன்மைகள் அல்லது தீமைகள் ஏற்படும் என்பதற்கான அறிவியல் ஆய்வறிக்கைகளும் எதுவுமில்லை. இந்த பேடை பயன்படுத்துவதால் டீடாக்ஸ் நடக்கும் என்பதெல்லாம் பொய் என்றும் சிலர் கூறுகின்றனர்.

அந்த ஃபுட் பேடில் பயன்படுத்தப்படும் வினிகர் அல்லது சில கலர் ஏஜென்ட்டுகளால் அவை நிறம் மாறுகின்றன என்றும் இதனை பயன்படுத்துவதால் எந்தவிதமான நற்பலனும் இல்லை, பாதிப்பு வேண்டுமானால் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். நம் முகத்தைப் போலவே பாதங்களும் துளைகள் நிறைந்த ஒரு உறுப்பு. அதனால் இரவு முழுதும் அந்த பேடினை பயன்படுத்தும்போது அந்த துளைகள் மூடப்பட்டு அந்த இடத்தில் வியர்த்துப் போகும், அத்துடன் அந்த பேடில் இருக்கும் வினிகர் வியர்வையை அதிகரிக்கச் செய்வதாலும் அந்த பேடு நிறம் மாறுகிறது.

அதில் காணப்படும் நிறம் வியர்வை மற்றும் வினிகரால் தோன்றுகிற ஒன்றுதான். டிஸ்டில்டு வாட்டர் பயன்படுத்தினால் கூட இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கின்றனர். எல்லா கருத்துக்களையும் தாண்டி, இதுவும் எந்த அளவு உண்மை என நமக்குத் தெரியாது. டீடாக்ஸ் ஃபுட் பேடை பயன்படுத்துவதினால் பெரிய அளவில் ரிஸ்க் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஒருவேளை எடை குறைப்பு விளம்பரங்களைப் போல இவையும் பொய்யான விளம்பரங்களாக இருக்கும் பட்சத்தில் இவை நம் பாக்கெட்டுக்கு கட்டாயம் சேதாரம் விளைவிக்கும். எனவே மக்களே உஷார்... அதற்கு பதில் நீங்களே இரவில் உங்கள் கால்களை தேய்த்து கழுவி சுத்தப்படுத்தலாம். வெந்நீரில் கல் உப்பு, மஞ்சள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பாதங்களை சுத்தப்படுத்தலாம் என்று சரும நிபுணர்களே பரிந்துரைக்கிறார்கள். இதுவும் டீடாக்ஸ் இல்லை; பாதங்களை தூய்மையாக
வைத்திருக்க மட்டும்!

நலம் காக்கும் இரண்டு!

டீடாக்ஸ் பற்றியும், அதற்கான வழிகள் பற்றியும் இன்று பலவிதங்களில் பேசுகிறார்கள்; முயற்சி செய்கிறார்கள். இதையே நம் முன்னோர்கள் ‘இரண்டு’ என்ற வழிமுறையாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள். தினம் இரண்டு... வாரம் இரண்டு... மாதம் இரண்டு... வருடம் இரண்டு... என்பது பழமொழி மூலம் வெளிப்படும் தமிழர்களின் வாழ்வியல் முறை என்றே சொல்லலாம். அதாவது நம் உடலை முறையாகப் பராமரிக்க தினமும் இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும். வாரம் இருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். மாதம் இரண்டு முறை தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும்.

வருடம் இரண்டு முறை பேதி மருந்து சாப்பிட்டு குடலை சுத்தம் செய்ய வேண்டும் என்று எளிதான வழிமுறையை சொல்லிச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இவற்றில் குடலைச் சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் முறை பிரபலமாக இருக்கிறது. குடலை சுத்தப்படுத்துவதன் மூலம் உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறும். அதனால் சருமப் பிரச்னைகள், செரிமானப் பிரச்னைகள் உட்பட பலவும் சரியாகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. அதுவே இன்று உடலை முறையாக பராமரிப்பதன் மூலம் நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்பது மருத்துவரீதியான உண்மையாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

- சக்தி