ஃபுட் பால் விளையாடுறதுல இவ்ளோ நன்மையா?!



Centre Spread Special

‘தோட்டத்தில் மண்வெட்டி எடுத்து வேலை செய்வதைவிட, கால்பந்தாட்டம் ஆடுவது உங்களைச் சொர்க்கத்தில் விரைவாக சேர்க்கும். கால்பந்தாட்டத்தில் கடவுளைக் காணலாம்’ என்றார் விவேகானந்தர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கால்பந்து விளையாட்டு, நீரிழிவு நோய் மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புக்களைக் குணப்படுத்த உதவுகிறது என்பதை புதிய ஆய்வு ஒன்றில் நிரூபித்திருக்கிறார்கள்.

கால் பந்தாட்டம் என்றதும் கை மற்றும் கால்களை உடைத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் நிறைந்த அபாயகரமான விளையாட்டு என்பதுதான் பெரும்பாலானோர் நினைவுக்கு வரும். ஆனால், கால் பந்து விளையாடுவதால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம் என்கிறது தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் முடிவு. அதில் கால்பந்தாட்டம் ஆடுவதால் நீரிழிவு நோய்க்கு முன் நிலையால்(Prediabetes) பாதிக்கப்பட்ட நடுத்தர மற்றும் முதுமைப் பருவத்தினரின் இதயம், எலும்பு மண்டலம் ஆகியவை திடகாத்திரமாகவும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த ஆராய்ச்சி குறித்து, தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியாகப் பணியாற்றி வரும் மக்னி மோர் அழுத்தமான சில கருத்துகளை முன் வைத்திருக்கிறார். ‘நீரிழிவு நோய்க்கு முன் நிலை, இரண்டாம் வகை நீரிழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு அடர்த்தி குறைதல் மற்றும் எலும்பு முறிவு முதலான பாதிப்புகளின் தாக்கம் அதிகளவில் இருக்கும். எனவே, இத்தகைய நோயாளிகளுக்குச் சிகிச்சைமுறைகள் பற்றிய நெறிமுறைகளை முன்னெடுத்துச் செல்வது மிகவும் அவசியமாகிறது.

நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், எலும்புகளின் ஆரோக்கியத்தை முழுமையாகப் பேணுவதில், கால் பந்தாட்டம் மற்றும் உணவுமுறை தொடர்பான ஆலோசனைகள் பலன் கொடுக்கக் கூடிய தரவுகளாக இருப்பது தெரிய வந்தது. எங்களுடைய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கால்பந்தாட்ட குழுவினர், கால்கள் மற்றும் சிறுநீரக நாளங்களில் மருத்துவரீதியாக குறிப்பிடத்தகுந்த வகையில் பயனுள்ள விளைவுகளைப் பெற்றனர். மேலும், இந்தப் பரிசோதனை முயற்சியில் பங்கேற்றவர்களுக்குக் கால்பந்தாட்டம் எலும்புகளை உருவாக்குவதில் பயனுள்ளதாக திகழ்ந்தது. எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்பந்தாட்டம் என்று கூட வர்ணிக்கலாம்’ என்கிறார். ஹலோ...  எங்கே கிளம்பிட்டீங்க... கால்பந்து விளையாடவா!?

- விஜயகுமார்