செயற்கை பல்...யாருக்கு? எப்படி?!



ஸ்மைல் ப்ளீஸ்

அழகைத் தீர்மானிப்பதிலும், ஆரோக்கியத்தை அளிப்பதிலும் பற்களின் அவசியம் பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. சில தவிர்க்க முடியாத காரணங்களால் பற்களை இழக்க நேரிடும்போது பல் கட்டுவது முக்கியமாகிறது. இயற்கையாக அமைந்த பற்களை இழந்த பின்,பல் மருத்துவரால் செயற்கை பல் பொருத்தப்படுகிறது. இந்த செயற்கை பல் பற்றிய சிறப்பு அம்சங்களை பற்றி விவரிக்கிறார் பல் மருத்துவர் ஆனந்தி.

செயற்கை பல் கி.மு 700-ம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருந்துள்ளதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.அப்போது இதற்கென மனித பற்களுடன், மிருகங்களின் பற்களும் உபயோகப்படுத்தப்பட்டது. காலப்போக்கில் இம்முறைமாறி1800ம் ஆண்டில் இருந்து பல் போன்ற தோற்றத்தில் செயற்கை பல் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் உபயோகிக்கப்பட்டது. இதன் பின் பல மாற்றங்களை அடைந்து பற்களின் நிறத்திற்கேற்ப Ceramic, Acrylic போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டுபயன்பாட்டிற்கு வந்தது.

செயற்கை பல் ஏன் அவசியம்?

பற்கள் அழகிற்காக மட்டுமல்ல நல்ல உடல்நலத்திற்கு அவசியமானதும்கூட. பற்களைப் பற்றிய விழிப்புணர்வு இந்திய மக்களிடம் இன்றும் கூட குறைவாகவே காணப்படுகிறது.சிறு வயதிலிருந்தே பற்களை ஆரோக்கியமாக வைப்பதில் ஒவ்வொருக்கும் கவனம் தேவை. கவனிக்கப்படாதபல் சொத்தையும், ஈறு நோய்களும் பற்களை இழப்பதற்கான மிக முக்கிய காரணமாகும். இது தவிர விபத்து,பிறவிக்குறைபாடு போன்ற சில காரணங்களாலும் பற்களை இழக்க நேரிடுகிறது. இப்படி எந்த ஒரு காரணத்திற்காகவும் பற்களை இழக்க நேரிட்டால் முகஅமைப்பும் முகத்தோற்றமும் மாற்றமடைந்து அழகுகுறையும். இதைத் தவிர சில பற்கள் குறைவதால் உணவை சரியாக மெல்ல முடியாது.

உணவின் செரிமானம்வாயின் வழியாகத்தான் ஆரம்பமாகிறது. சரியான வகையில்உணவை மெல்ல முடியாமல் போனால் செரிமானக் குறைபாடும், வயிற்றுப் பிரச்னையும் தோன்றும்.இதனால் ஆரோக்கிய சீர்கேடும், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்பு அதிகம்உள்ளது. ஒரு சில பற்களை இழப்பதால் வாயில் உள்ள மற்ற பற்களும் சரியான பிடிமானம்இல்லாமல் வலுவற்றுப் போகும். இயல்பாகவே பற்கள்நகரக்கூடிய தன்மை வாய்ந்தவை. எனவே, ஏதேனும் ஒரு பல் இல்லாமல் போனால் மற்ற பற்களும் நகரும்.சேதமடைந்த இடத்தில் அல்லது பற்களுக்கு இடையே பல் பொருத்தப்படாமல் போனால் மற்ற நல்ல பற்களையும் கொஞ்சம் கொஞ்சமாகஇழக்க நேரிடும்.

12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பற்கள் விழுந்தால் புதிய பற்கள்முளைப்பதில்லை. 6 மாதத்திலிருந்து 2 ½ வயதிற்குள்ஒரு குழந்தைக்கு 20 பற்கள் முளைக்கும். இந்த 20 பற்களும் பால் பற்கள் எனப்படும். இவை6 வயது முதல் 12 வயதிகுள் விழுந்து 28 நிரந்தரபற்கள் முளைக்கும். 17 வயதிலிருந்து 24 வயதிற்குள் கடைசி 4 பற்கள் முளைக்கும். இந்த32 (28+4) பற்களில் எந்த பல் விழுந்தாலும் மறுபடியும் இயற்கையாக முளைக்காது. ஆகையால்செயற்கை பல் கட்டுவது கட்டாயமாகிறது.

யாருக்கெல்லாம் செயற்கை பல் பொருத்தலாம்?

6 வயது முதல் 100 வயது வரை பற்களை இழந்த அனைவருக்கும் செயற்கைப் பல்பொருத்துவது அவசியம். பால் பற்கள் விழுந்தாலும். நிரந்தர பற்கள் சரியான இடைவெளியில்முளைப்பதற்காகவும் செயற்கை பல் பொருத்தப்படும். 32 நிரந்தர பற்களில் முதலில் முளைக்கும்28 பற்களை இழந்தால் கண்டிப்பாக செயற்கை பல் பொருத்தப்பட வேண்டும் . 17 வயதிற்குமேல் முளைக்கும்4 கடைசி கடைவாய் பற்களுக்கு (Wisdom teeth)மாற்று பல் அவசியமல்ல.

யாருக்கெல்லாம் செயற்கை பல் பொருத்தக் கூடாது?

வலிப்பு நோய், புற்றுநோய், இதயத்தில் பேஸ்மேக்கர்(Pace maker) பொருத்தப்பட்டவர்களுக்கு செயற்கை பல் பொருத்தக் கூடாது. இதுபோன்ற உடல்நலக்
கோளாறுகள் கொண்டவர்கள் தவிர, மற்ற பல் இழந்த அனைவருக்கும், முதிர்ந்த (தள்ளாத) வயதினருக்கும் செயற்கை பல் அவசியம்.

செயற்கை பல் எப்படி பொருத்தப்படுகிறது?

பற்களை இழந்த அல்லது நீக்கிய பின் காயம் ஆற வேண்டும். காயம் ஆறியபின்பு ஈறுகளும் பக்கத்தில் உள்ள பற்களும் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்போதுதான்செயற்கை பல் பொருத்தப்படுகிறது.  செயற்ைக பல் பொருத்துவதற்கு தாடையின் அளவு அல்லதுவாயின் அளவு எடுத்து உங்கள் முகத்தோற்றத்திற்கும் பற்களின் அளவிற்கும் ஏற்றவாறு செயற்கைபல் தயாரிக்கப்படும். இதற்கான கால அளவு 4 நாட்கள் முதல் 2 வாரம் வரை பற்களின் வகையைப் பொறுத்து மாறுபடும்.

செயற்கை பல், ஒரு பல் மட்டும் இல்லையென்றாலும் அந்த ஒரு பல்லை மட்டும்பொருத்த முடியும். ஒரு சில பற்களை இழந்தவர்களுக்கும் அந்தந்த பற்களை பொருத்த முடியும்.அதேபோல் அனைத்து பல்லையும் இழந்தவர்களுக்கும் செயற்கை பல் பொருத்த முடியும். செயற்கைப்பல் மூன்று வகையாக பொருத்தப்படுகிறது. கழற்றிமாட்டும் முறை(Acrylic), நிரந்தரமாகப்பொருத்தும் முறை(Crown & bridge), இம்பிளான்ட்(Implant) எலும்பில் பொருத்துவது.

கழற்றிமாட்டும் முறை

Acrylic என்ற பிளாஸ்டிக் போன்ற பொருளால் இந்த செயற்கைப் பல் செய்யப்படுகிறது. இது செயற்கை பல் உபயோகிப்பவர்களாலேயே கழற்றி மாட்டக் கூடியவகையாகும். இது பல்லின் அளவிற்கு ஏற்றார்போல் செயற்கையான பல்லுடன் ஈறு நிறமுடைய Acrylic பொருளை வைத்து உருவாக்கப்படுகிறது. இதற்கு ஈறு வலுவாக இருக்க வேண்டும். இம்முறையில் செயற்கை பற்கள் 4-5 வருடம் வரை நீடித்து வரும். சில சமயம் பிடிப்பிற்காக கம்பியும் பொருத்தப்படும், இந்த வகை பற்களால் Full denture-ரும் செய்யப்படும்.வாயில் அனைத்து பற்களையும் இழந்தவர்களுக்கு பொருத்தப்படும். இம்மாதிரியான பற்களை தனியாககழற்றி சுத்தம் செய்து பின்பு மாட்டிக் கொள்ளலாம்.4-5 வருடம் வரை இந்த செயற்கை பற்கள் நீடித்து வரும்.

நிரந்தரமாகப்பொருத்தும் முறை

இவை பக்கத்தில் உள்ள பல்லை ஆதாரமாக கொண்டுபொருத்தப்படுபவை. இதில் ஒன்று முதல் சில பற்கள் வரை செய்ய (பொருத்த) முடியும். இவை பல்மருத்துவரால் பக்கத்துப் பற்களில் பசை போன்ற பொருளால் ஒட்டப்படுகிறது. இதை செயற்கை பல்உபயோகிப்பவரால் கழற்ற இயலாது. இயற்கையான பற்களைப் போன்று தோன்றும். இந்த வகை பற்கள் Ceramic, Zirconia போன்ற உயர் வகை கடினமான பொருட்களால் செய்யப்படுகிறது.

இதுபற்களை பிடிப்பாக (ஆதாரமாக) கொண்டு செய்யப்படுவதால் முழு பற்களையும் இழந்தவர்களுக்குஇதை பொருத்த முடியாது. இதை பொருத்துவதற்கு இழந்த பற்களை தவிர மற்ற பற்கள் ஆரோக்கியமாகஇருக்க வேண்டும். Ceramic & Zirconia செயற்கைப் பற்கள் 10 முதல் 15 வருடம் வரை நன்றாக உழைக்கக்கூடியவை. இவை பராமரிப்பதற்கு வெகு எளிமையானதாகும். நமது இயற்கை பற்கள்பாதுகாக்கப்படுவது போலவே, இவையும் பாதுகாக்கப்பட வேண்டும். தினமும் 2 முறை பல் தேய்ப்பதால் இப்பற்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

இம்ப்ளான்ட் முறை

எலும்பின் உள்ளே ஒரு திருகை(Screw) பொருத்து அதன் மேல் பல் கட்டப்படும். இவை நிரந்தரமானவை. ஒரு பல் அல்லது பல பற்களும் பொருத்தலாம். Full denture என்ற பற்களின் முழு அமைப்பாகவும் செய்யமுடியும். சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் பிரச்சனை உள்ளவர்கள் அவர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்துமுடிவு செய்யலாம். இம்முறை சற்று விலை அதிகம் 20,000 முதல் 2,00,000 வரையிலும் ஆகும். முறையாகபராமரிப்பது அவசியம். 10 முதல் 15 வருடம் வரைநன்றாக உழைக்கக் கூடியவை. Dental implant பொருத்துவது சுலபமாக (இலகுவாக) செய்யக் கூடியதாகும். இதை பற்றிய பயம் அவசியம் தேவையில்லை.

இதற்கு Titanium implants உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. Implant பொருத்திய பின் அதன் மேல் செயற்கை பல் பொருத்தப்படும். Implant என்பது ஒரு பல்லில் வேர்போல் செயல்படும். இந்த முறையால் பக்கத்தில் உள்ள நல்லபற்களுக்கு எந்த சேதமும் ஏற்படுவது கிடையாது. நன்றாக மென்று சாப்பிட ஏதுவாக இருக்கும். இதை நமது பற்களைப்போல் எளிதாகப் பராமரிக்கலாம். இதைத் தவிர செயற்கை பல் பொருத்திய அனைவரும் பல் மருத்துவரை 6 மாதத்திற்குஒரு முறை சந்திக்க வேண்டியது கட்டாயமாகும்.

செயற்கை பல் பொருத்தப்பட்டவர்கள் ஈறு மற்றும் இயற்கை பற்களை மிகவும் ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும். செயற்கை பல் பொருத்தப்பட்டவர்கள்மிகவும் கடினமான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். அந்த பற்களை மெல்லுவதற்குப் பதிலாகவேறு எதற்கும் உபயோகிக்கக் கூடாது. சாதாரணமாக எல்லா உணவு வகைகளையும் மெல்ல முடியும் சப்பாத்தி,முறுக்கு, கடலை, காய்கறிகள் போன்ற அனைத்தும் சாப்பிட முடியும். பற்கள் முழுமையாக இருப்பது ஆரோக்கியமாகவும் அழகாகவும் தோற்றம் தரும்.மிகவும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பார்ப்பவர்களுக்கு உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம்ஏற்படுத்தும்.

இதைத் தவிர, செரிமானம் சீராக இருப்பதால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.பல் இழந்த அனைவரும் பல் மருத்துவரை அணுகி உங்களுக்கு ஏற்றார் போல செயற்கை பல் பொருத்திக்கொள்வது சாலச்சிறந்தது. செயற்கை பல் பொறுத்துவதுமிகவும் விலையுயர்ந்தது என்று நினைக்க வேண்டாம்.ரூ1000 முதலே இவ்வகையான சிகிச்சைகள் ஆரம்பிக்கும். தேவைக்கும் தரத்திற்கும் ஏற்றவாறு விலை மாறுபடும். பல் என்பது நமது உடலின் ஒரு பாகம் ஆகும். முடிந்தவரை நாம் அதை இழக்காமல்பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இழந்தால் செயற்கை பல் பொருத்துவது மிகவும் அவசியமாகும்!

- அ.வின்சென்ட்