சிவப்பு... மஞ்சள்... பச்சை...



கேமரா 576 மெகாபிக்ஸல்

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்துள்ளீர்களா?

அதில் உங்கள் கண்களை ஒரு கருவியால் படம் பிடித்திருப்பார்கள். கிருஷ்ணபடலத்தின் ரத்தக்குழாய் அமைப்பே அதில் படம் பிடிக்கப்படுகிறது. ஐரிஸ்(Iris) என்ற இந்த கிருஷ்ணபடலம் இரண்டு விதமான மெல்லிய தசைகளால் ஆனது. வெளிச்சம் அதிக அளவில் படும்போது சுருங்கிக் கொள்ள ஒரு வகை தசைகளும், குறைவான வெளிச்சம் இருக்கும்போது விரிந்து அதிக  அளவில் ஒளியை உள்வாங்கிப் பார்க்க உதவும் ஒரு வகை தசையையும் பெற்றுள்ளது. இந்த தசைகள் இரண்டும்  ஒளியின் அளவிற்குக்கு ஏற்ப சுருங்கி விரிந்து, கிருஷ்ண படலத்தின் நடுவே இருக்கும் வட்ட வடிவிலான சிறு துளையான கண்மணி(Pupil) வழியே சீரான ஒளியை அனுப்புகின்றன.

கருவிழி என்று அழைக்கப்படும் பகுதி உண்மையில் கருமையாக இருப்பதில்லை. பூவிதழ் அளவிற்கு மெலிதான கருவிழி கண்ணாடி போன்ற அமைப்பை உடையது. உண்மையில் உள்ளிருக்கும் கிருஷ்ணபடலத்தையே நாம் கருவிழியின் வழியே காண்கிறோம். இந்த கிருஷ்ணபடலமானது தேவையான வெளிச்சத்தை மட்டும் உள்ளே அனுப்பும் வகையில் கேமராவின் இடைத்திரையை(Diaphragm) ஒத்திருக்கிறது. சருமத்தின் நிறத்திற்கும் கிருஷ்ணபடலத்தின் நிறத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் சருமம் கருப்பு அல்லது மாநிறமாக இருப்பது போல, கிருஷ்ணபடலமும் கருப்பு நிறத்தில்(கிருஷ்ண என்றால் கருமை என்று பொருள்) அமைந்திருக்கும்.

இதுவே குளிரான தட்பவெப்பம் கொண்ட நாடுகளில் கண்ணின் கிருஷ்ணபடலம் பழுப்பு நிறத்தில் இருக்கலாம். இந்த பழுப்பு நிறத்தை ஒளி ஊடுருவி, பின் பிரதிபலிக்கும்போது பச்சை, நீலம் போன்ற நிறங்களிலான கண்களை நாம் காண்கிறோம். கிருஷ்ணபடலத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளன. கைரேகையைப் போன்றே ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ரத்தக்குழாய்களின் அமைப்பு தனித்துவமானது. மருத்துவர் உங்கள் கண்களில் டார்ச் அடித்துப் பார்த்த நினைவிருக்கிறதா? அப்போது நம் கண்களில் உள்ள கண்மணி போதுமான அளவு சுருங்கி விரிந்தாலே கண்களில் பல வேலைகள் சீராக நடப்பதாகப் பொருள்.

கிருஷ்ண படலத்தின் பின்புறம் விழி முன்னறைப் படலம் என்றழைக்கப்படும் அக்வஸ் ஹியூமர்(Aqueous humor) என்ற திரவம் அமையப்பெற்றுள்ளது. இது கண்ணின் உட்பகுதிகளுக்கு ஊட்டம் அளிக்கவும், கண்ணிலுள்ள நீர் அழுத்தத்தை சீராக வைக்கவும், கழிவுகளை அகற்றவும் மிகவும் அவசியமான ஒன்று. கண்களின் உட்பகுதியில் சுரக்கும் இந்த நீரானது தன் பணிகளைச் செவ்வனே முடித்து கிருஷ்ணபடலத்தின் ஓரங்களில்  அமைந்திருக்கும் அலசல் போன்ற சிறு துளைகளின் வழியே வெளியேறி ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. Vitreous humor அமைந்துள்ளது கண்ணின் லென்ஸ்.

உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் வாழ்வில் ஒரு முறையாவது கண் மருத்துவரிடம் அழைத்து வரும் பெருமை இந்த லென்ஸையே சாரும். சிறிய பட்டன் அளவிலான கண்ணாடி போன்ற லென்ஸ், ஒரு பாதுகாப்பான பைக்குள் அமைந்துள்ளது. பிறவி முதல் இறப்பு வரை கண்ணின் லென்ஸில் வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். இதன் இயல்பான நெகிழ்வுத் தன்மையால் தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை என்று தேவைக்கு ஏற்ப நம்மால் பார்க்க முடிகிறது. மனிதனுக்கு 40 வயது நெருங்கும்போது இந்த லென்ஸின் நெகிழ்வுத்தன்மை குறையும். அதேபோல் வயதிற்கேற்ப 60 வயது நெருங்குகையில் லென்ஸின் ஒளி ஊடுருவும் தன்மையும் குறையும்.

இந்த நிலையில்தான் பார்வையில் குறை ஏற்பட்டு மருத்துவரைப் பலரும் அணுகுவார்கள். லென்ஸின் பின்பகுதியில் ஜெல்லி போன்ற அமைப்பு ஒன்று உண்டு. இதற்கு விழிப்படிம நீர்மம்(Vitreous humor) என்று பெயர். இது கண்களின் பந்து போன்ற அமைப்பைத் தக்க வைக்க உதவுகிறது. கருவிழி, லென்ஸ், முன்னறை நீர்ப்படலம்,  விழிப்படிம நீர்மம் ஆகிய அடுக்குகள் அனைத்தும் ஒளி ஊடுருவும் தன்மை உடையவை. இந்தப் பகுதிகளைத் தாண்டி ஊடுருவும் ஒளி, விழித்திரையைச் சென்றடைகிறது. விழித்திரையை வந்தடையும் வெவ்வேறு அளவிலான ஒளிக்கதிர்கள் விழித்திரையில் நடக்கும் ஒரு உன்னதமான சுழற்சியால் உருவமாக மாற்றப்படுகின்றன.

இதற்கு விஷுவல் சைக்கிள் (Wald’s visual cycle) என்று பெயர். இந்தப் பணியில் விழித்திரையில் இருக்கும் சுமார் 12 மில்லியன் ராடுகள்(Rod cells- கோல் செல்கள்) மற்றும் ஆறரை மில்லியன் கோன்கள்(Cones- கூம்பு வடிவ செல்கள்) ஈடுபட்டுள்ளன. இருட்டு நேரப் பார்வைக்கு கோல் செல்களும், பகல் நேரப் பார்வை மற்றும் வண்ணங்களை பிரித்தறிதல் ஆகிய பணிகளுக்கு கூம்பு வடிவ செல்களும் உதவுகின்றன. இவை இரண்டிலும் நடக்கும் வேதியியல் மாற்றங்கள், இரவு மற்றும் பகலில் சற்று மாறுபடுகின்றன. இரண்டு வேதிவினைகளிலும் வைட்டமின் ‘ஏ’ மூலப்பொருளாக பயன்படுகிறது.

இந்தச் சுழற்சியை மேற்கொள்ளும்போது கோன்கள் மற்றும் ராடுகள் தம் எரிபொருளை இழக்கின்றன. ஆச்சரியத்தக்க விதமாக வெகுவிரைவில் இந்த வேதிப்பொருட்கள் மீண்டும் உருவாகி செல்கள் உயிர்த்தெழுகின்றன. இந்த இயற்கை வேதியியல் மாற்றங்களை எவ்வளவு முயன்றாலும் ஆராய்ச்சியாளர்களால் செயற்கையாக உருவாக்க இயலவில்லை. இந்த இரு செல்கள் மட்டுமின்றி விழித்திரையில் 10 அடுக்குகளாக அமையப்பெற்றுள்ள நரம்புகளின் பகுதிகள் விழித்திரையை உறுதியாக வைக்க உதவுகின்றன. விழித்திரையில் நடக்கும் இத்தகைய மாற்றங்களால் நாம் காணும் காட்சி கட்டமைக்கப்பட்டு கண்ணின் வழியே மூளைக்குள் பயணிக்கத் துவங்குகிறது.

இரண்டு கண்களின் நரம்புகளும் கண்களின் பின்புறம் பிட்யூட்டரி சுரப்பிக்கு சற்றுக் கீழே சந்திக்கின்றன. பின் அங்கிருந்து இரண்டு பாதைகளாக தனித்தனியே பிரிந்து, வழியில் ஒரு நிறுத்தத்தில் தாமதித்து, பின் மூளையின் பின்பகுதியில் இருக்கும் பார்வைக்கான பகுதிகளை வந்தடைகின்றன. இடது மற்றும் வலது மூளையை வந்தடையும் காட்சிப் படிமங்களை மூளை ஒன்றிணைத்து ஒரே தொடர் காட்சியாக, முப்பரிமாண வடிவில் நம்மை உணரச் செய்கிறது. இவை அனைத்தும் எவ்வளவு விரைவாக நடக்கிறது என்றால் ஒரு வினாடியில் 16 காட்சிகளை நாம் உள்வாங்க முடிகிறது.  

இதுவே காட்சியில் நடைபெறும் மாற்றங்கள் ஒரு திரைப்படம் போல நம் விழி முன்னே ஓடுவதற்குக் காரணம். மனிதக் கண்களில் மூன்று வகைக் கோன்கள் (சிவப்பு - பச்சை, நீலம், மஞ்சள்) இருக்கின்றன. இவற்றின் மூலம் நம்மால் வானவில்லில்  உள்ள வயலட் முதல் சிவப்பு வரையிலான (VIBGYOR) நிறங்களை வேறுபடுத்திப் பார்க்க இயலும். சிலருக்கு இரண்டு வகை கோன்களும் வேறு சிலருக்கு ஒரு வகைக் கோன்களும் மட்டும் இருக்கும். அந்தந்த குறைபாட்டிற்கு ஏற்ப சில நிறங்களை அவர்களால் காண முடியாது.

இவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்!

* மேன்டிஸ் ஷ்ரிம்ப் என்ற கடல்வாழ் உயிரினத்தின் கண்களில் 16 வகைக் கோன்கள் இருக்கின்றன. அவற்றால் நாம் காண்பதை விடவும் பல மடங்கு வண்ணங்களை உணர முடியும்.
* ஆடு, மாடுகளின் கண்மணிகள் கிடைவாக்கிலான கோடுகளைப் போல்(Horizontal pupil) இருக்கும்.
* இரவில் வேட்டையாடும் பூனை, நரி, பாம்பு போன்றவற்றிற்கு செங்குத்தான வடிவில் கண்மணிகள்(Vertical pupil) அமைந்துள்ளன.
* ஆந்தைகளால் கண்களைச் சுழற்ற முடியாது. ஆனால், தலையை முழு சுற்றுக்கும் திருப்பிப் பார்க்க முடியும். இவை பெரும்பாலும் இரவில் வேட்டையாடுவதால் மனிதனை விட பல மில்லியன் ராடுகளை அதிகம் பெற்றுள்ளன.
* சில பூச்சிகளால் புற ஊதாக் கதிர்களைக் கூடக் காண முடியும். பூக்களிலுள்ள மகரந்தம் புற ஊதாக் கதிர் நிறத்தில் இருப்பதால் மகரந்தச் சேர்க்கைக்கு இந்தத் தன்மை உதவுகிறது.
* மலைப்பாம்புகளால் (Infrared கேமராவைப் போல) அகச்சிவப்புக் கதிர்களைக் காண முடியும்.

(தரிசனம் தொடரும்!)