Medical Trendsரிலாக்ஸ்

 மாரடைப்பைத் தடுக்கும் சாக்லேட்

ஒரு மாதத்திற்கு 3 சாக்லேட் பார் சாப்பிடுவது மாரடைப்பைத் தடுக்க உதவும் என்கிறது ஒரு புதிய ஆய்வு. 10 லட்சம் பேரிடம் மேற்கொண்ட இந்த ஆய்வில், சாக்லேட் சாப்பிடாதவர்களோடு ஒப்பிடும்போது, மாதத்தில் 3 சாக்லேட் பார் வரை சாப்பிட்டவர்களுக்கு இதய செயலிழப்பின் ஆபத்து 13% குறைவாக இருந்தது என்கின்றனர். சாக்லேட் பாரில் உள்ள ஃப்ளேவனாய்டுதான் இதற்கு காரணம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

மனநலனுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்!

‘உடல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதைப் போல, மனநலம் பாதித்தவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயம்’ என்கிறது மத்திய அரசின் மனநல பராமரிப்பு சட்டம் 2017. இந்த சட்டத்தின் கீழ் சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டியது ஒவ்வொரு மாநில அரசுகளின் கடமை. அதனை உடனே அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சிக்கிமுக்கு ஐ.நா விருது

சிக்கிமில் முழுமையாக ரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைப் பாராட்டி ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின்  சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக ஃப்யூச்சர் கவுன்சில் மற்றும் ஐ.எஃப்.ஓ.ஏ.எம் சர்வதேச ஆர்கானிக்ஸ் அமைப்புகள் இணைந்து இந்த விருதை அறிவித்துள்ளன.

‘உலகிலேயே முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் தேர்வாகியுள்ளது. இதன்மூலம் சிக்கிம் மாநிலம் 100 சதவிகிதம் இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளதோடு, 66 ஆயிரம் விவசாய குடும்பங்கள் இதுவரை பலன் அடைந்துள்ளது’ என்றும் இதுகுறித்து ஐ.நா பாராட்டியிருக்கிறது.   

புகையிலையை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம்!

புகையிலை என்றாலே ஆபத்து என்ற மனநிலை வந்துவிட்டது. அந்த அளவுக்கு புற்றுநோயை உண்டாக்கும் மூலக்காரணியாக புகையிலையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய முடியுமா என்று ஆராய்ந்த விஞ்ஞானிகள் நல்ல முடிவையும்
கண்டறிந்திருக்கிறார்கள்.

புகையிலைப் பூக்களில் இருக்கும் NaD1 செல் மூலக்கூறு கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த NaD1 மூலக்கூறுகளை வைத்து ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உருவாக்கினால் எச்.ஐ.வி. முதல் டெங்கு  வரை பல கிருமிகளை தடுக்க முடியும் என்கின்றனர். ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இதயம் காக்கும் பல் சுத்தம்

ஆரோக்கியமான ஈறுகள் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதும், ரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் விரைவாக வேலை செய்வதையும் இத்தாலியின் L’Auila பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளாதவர்களிடத்தில் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

குழந்தைகள் முன் சண்டை வேண்டாமே...

பெற்றோரின் சண்டை, சச்சரவுகளை அடிக்கடி பார்க்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மனநல பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் உளவியலாளர்கள். இது பல்வேறு விதங்களில் உறுதி ஆகியிருப்பதாகவும், எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் முன் வாக்குவாதமோ, சண்டையோ வேண்டாம் என்றும் கூறுகிறார்கள்.

புதிய வகை வீல் சேர்

உடலியக்கமற்ற நோயாளிகள் பயன்படுத்தும் வீல் சேரில் அழுத்தம் கொடுக்காத புதுவகை குஷன் ஒன்றை அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக என்ஜினியரிங் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். வீட்டுக்குள் எந்நேரமும் வீல்சேரில் ஒரேநிலையில் அமர்ந்திருப்பதால் அழுத்தம் ஏற்பட்டு, அங்கு இவர்களுக்கு அடிக்கடி புண் ஏற்படும். இதை தவிர்க்கும் வகையில், உடலின் அழுத்தத்துக்கேற்றவாறு வளையும் தன்மையுள்ள குஷனை இந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

உணவை தேர்ந்தெடுக்கும் ப்ரெய்ன் சிக்னல்

ஹோட்டலுக்கு சென்றால் நம் விருப்ப உணவை தேர்ந்தெடுக்க, மூளையின் சமிக்ஞைகள் (Brain signal) உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பாராட்டு மற்றும் மகிழ்ச்சியோடு தொடர்புடைய மூளையில் உள்ள Ventral Pallidum என்ற பகுதியில் செயல்படும் நியூரான்களிலிருந்து வெளிப்படும் சிக்னல்கள் நம்முடைய உணவுத்தேர்வுக்கு காரணமாகின்றன.

பெண்களின் கண்ணீருக்குக் காரணம்

கண்ணீர் பெண்களின் ஆயுதம் என்பார்கள். ஆண்களைக் காட்டிலும், பெண்கள் அடிக்கடி அழுவதற்கு உயிரியல் ரீதியான காரணம் இருக்கிறது. பெண்களின் உடலில் ஆண்களைவிட 60 சதவீதம் அதிகமான Prolactin என்னும் புரதம் அதிகமாக உள்ளது. இந்த புரோலாக்டின் புரதமானது எண்டோகிரைன் சிஸ்டத்தை பாதிப்பதால், பெண்கள் அடிக்கடி அழுபவர்களாக இருக்கிறார்கள்.

மகிழ்ச்சி சம்பளத்தில் இல்லை!

பொதுவாக சம்பள உயர்வு கிடைக்கும்போது பணியாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியுற்று வேலையில் திருப்தியுடன் செயல்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நடத்தையியல் பொருளாதார கோட்பாட்டின்படி, (Behavioural-economic theory) பணியாளர்களுக்கு, சம்பள உயர்வால் அடையும் வேலை திருப்தியோ அல்லது சம்பள குறைப்பால் வரும் அதிருப்தியோ இரண்டுமே தற்காலிகமானது’ என ஒரு புது ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஒருவருக்கு கிடைக்கக்கூடிய வேலைத் திருப்தி, சம்பள உயர்வையும் தாண்டி நிறைய விஷயங்களை உள்ளடக்கியது என்கிறது இந்த கோட்பாடு.

 நீரிழிவைத் தூண்டும் காற்று மாசு

காற்று மாசுபாடு, அழற்சியைத் தூண்டி இன்சுலின் சுரப்பை குறைப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலக அளவில் கடந்த 2016-ம் ஆண்டு கணக்குப்படி காற்று மாசினால் 32 லட்சம் புதிய நீரிழிவு நோயாளிகள் உருவாகியுள்ளதாக புள்ளிவிவரம் சொல்கிறது.

உலக சுகாதாரமையத்தின் தகவலின்படி உலகின் மாசடைந்த டாப் 20 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளது. மேற்கத்திய நாடுகளைக்காட்டிலும் இந்தியர்கள் அதிக அளவில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவர் என்பது கூடுதல் கவலை தரும் விஷயம்.

தொகுப்பு : குங்குமம் டாக்டர் டீம்