ஊர் சுத்துறவங்களுக்கு ஆயுள் அதிகம்!Centre Spread Special

‘வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுற்றுலா செல்லுங்கள். உங்களின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஆயுளும் அதிகரிக்கும்’ என்று பரிந்துரைக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதிலும் ஆண்களுக்கு இதில் பலன் அதிகம் என்ற கூடுதல் தகவலும் உண்டு.

European Society of Cardiology அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில்தான் மேற்கண்ட சுவாரஸ்யமான ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. இதற்காக வேலைக்குச் செல்லும் நடுத்தர வயதுள்ள ஆண்கள் 1,222 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

முதல் குழுவில் இருப்பவர்களுக்கு வாய்வழி மற்றும் எழுதப்பட்ட ஆலோசனைகள் ஒவ்வொரு 4 மாதத்திற்கு ஒரு முறையும் வழங்கப்பட்டது. அதோடு அவர்கள் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சிகள் செய்வது, எடையைப் பேணுவது, புகைப்பழக்கத்தை நிறுத்துவது போன்ற பழக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இரண்டாவது குழுவில் இருக்கும் ஆண்கள் வழக்கமான, சாதாரண உடல்நல பாதுகாப்புகளைப் பெற்றதோடு, அவர்கள் இந்தக் குழுவால் அதிகம் கண்காணிக்கப்படவில்லை. முதல் குழுவில் குறைவான விடுமுறைகள் அதிகமான இறப்புகளுடன் தொடர்புடையதாக இருந்தது.

இரண்டாவது குழுவில் விடுமுறை காலமானது மரணம் ஏற்படும் அபாயங்களை ஏதும் பாதிக்கவில்லை. இதய அழுத்த நோய்களின் ஆபத்துகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் மன அழுத்தம் குறைப்பு என்பது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் ஆய்வு முடிவுகள் கிடைத்தது.

அதேபோல், குறைவான விடுமுறை எடுத்துக் கொண்டவர்கள் குறைவாகவே தூங்கும் பழக்கம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். இந்த தூக்கப் பிரச்னையால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய நீண்ட ஆயுளையும் பாதிப்பிற்கு உள்ளாக்கியிருந்தது. வருடாந்திர விடுமுறையை மூன்று வாரங்களுக்கு மேலாக எடுத்தவர்களுடன் ஒப்பிடும்போது, அதற்குக் குறைவாக விடுமுறை எடுத்த ஆண்களில் அதிகபட்சமாக 37 சதவிகிதம் பேர் சீக்கிரமாகவே இறப்பதற்கும் வாய்ப்பிருந்தது.

‘‘கடினமான வேலை நாட்களுக்கு இடையிலும் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்வது பல வழிகளிலும் பயன் தரக்கூடியதாக இருக்கும். புதிய இடங்களுக்குச் செல்லும்போது புதுவிதமான சிந்தனைகளுடன், வாழ்க்கை முறையும் சிறப்பாக மாறும். இதனால் மனநலம், உடல்நலம் மேம்படுவதுடன் உங்கள் வேலையிலும் தரத்தை அதிகரிக்கும்’’ என்றும் இதுபற்றி கூறியிருக்கிறார் ஆராய்ச்சியாளரான ஹெல்சின்கி பல்கலைக்கழக பேராசிரியர் டிமோ ஸ்ட்ரான்பெர்க்.

- அஜி