நடுத்தர வயதினருக்கு நல்ல செய்தி!



மகிழ்ச்சி

‘இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல’ என்பார்களே, அதுபோல ஒரு மகிழ்ச்சியான முடிவை புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தி இருக்கிறது. பல்லாண்டு காலம் உடற்பயிற்சிகள் இன்றி நாட்களைக் கழித்த நடுத்தர வயதினரும் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட உடல் நல பாதிப்புகளை இல்லாமல் போக்கிக் கொள்ள முடியும் என்பதுதான் அந்த செய்தி.

எப்படி என்பதைப் பார்ப்போம்....

அமெரிக்க இதய சங்கத்தின் உடற்பயிற்சி வழிகாட்டல்கள் அடிப்படையில் ஓர் இரண்டாண்டு காலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொண்ட நடுத்தர வயதினரின் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதாகவும், மாரடைப்பு அபாயம் குறைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெஞ்சமின் லெவின்.

நடுத்தர வயதினர் முறையான உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். அப்படி முறையான உடற்பயிற்சிகளின் மூலம், முந்தைய பாதிப்புகளை நீக்கி புதுப்பொலிவைப் பெறலாம். நடுத்தர வயதினரிடம் பொதுவாக ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது. அதாவது உடற்பயிற்சிகள் இல்லாமல் தொப்பையும் பருத்த உடலும் கொண்டவர்கள் இனிமேல் தம்மால் பழைய உடலமைப்பைப் பெற முடியாது என நினைக்கின்றனர். உண்மையில் இது தவறான கணிப்பு.

முறையான உடற்பயிற்சியும், சரியான உணவுப்பழக்கத்தையும் தொடங்கினால் எந்த வயதினரும் தங்களின் இளமையான தோற்றத்தை மீட்டு விடலாம் என்பதையே இதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது என்கிறார்கள் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் வல்லுநர்கள்.

தமது உடலமைப்பு குறித்து நடுத்தர வயதினர் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கைகள்தான் அவர்களின் முதுமையையும், மரணம் அடைவதையும் வேகப்படுத்துகிறது. எனவே, நம்பிக்கை நிறைந்த மனதோடு எளிய பயிற்சிகளைத் தொடங்கினால் அது எந்தக் காலத்திலும் உறுதியான பலன்களைத் தரும் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்!

- அஜி