ஊக்கத்தொகையுடன் அறிவியல் படிப்புகள்!



ஸ்காலர்ஷிப்

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும், அடிப்படை அறிவியல் பிரிவுகளை பட்டப்படிப்பில் எடுத்து கற்பதோடு மட்டுமின்றி, தொடர்ந்து ஆய்வில் ஈடுபடும் உற்சாகமும், உத்வேகமும் உள்ள மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை அறிவித்துள்ளது கிஷோர் வைக்யானிக் புராட்சகன் யோஜனா(KVPY) நிறுவனம். இத்திட்டத்திற்கான பொருளாதாரத்தை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தருகிறது. பெங்களூரில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

KVPY திட்டத்துக்கு நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறும் அறிவியல் படிப்புகளான B.Sc., B.S., B.Stat., B.Maths M.Sc.(Integrated),M.S.(Integrated) ஆகிய படிப்புகளில் வரும் கல்வி ஆண்டில் முதல் ஆண்டில் இடம்பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்படும். மேலும் ஆண்டுதோறும் இவற்றில் நான்கு மடங்கு கண்டிஜென்சி தொகையும் (Contingency Fund) வழங்கப்படும்.

Stream A

2018-19 கல்வியாண்டில் +1-ல் அறிவியல் பாடங்களில் சேர்ந்திருந்து பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பொதுப்பிரிவினர் 75 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் 65 விழுக்காடும் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். இவர்கள் இம்முறையில் தகுதி பெற +2-ல் பொதுப்பிரிவினர் குறைந்தது 60 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 50 விழுக்காடும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
+1, +2 படிக்கும் இடைப்பட்ட காலத்தில் இவர்கள் விஜியோஸ் (Vijyosh) எனப்படும் தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்படுவார்கள். இதற்கான பயணம், உறைவிட, உணவு செலவுகளை KVPY ஏற்றுக்கொள்ளும்.

Stream SX

இத்திட்டம் 2018-19 கல்வியாண்டில் +2 படிப்பவர்களுக்கான திட்டமாகும். இவர்கள் பத்தாம் வகுப்பு கணிதம், அறிவியல் பாடங்களில் பொதுப்பிரிவினர் குறைந்தது 75 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் 65 விழுக்காடும் எடுத்து, +2-ல் அறிவியல் பாடங்களில் பொதுப்பிரிவினர் குறைந்தது 60 விழுக்காடும்; ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 50 விழுக்காடும் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். Stream SB இத்திட்டம் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கானது. இதில் முதல் ஆண்டு இளநிலை அறிவியல் மற்றும் முதல் ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் பட்டம் படிப்பவர்களுக்கான திட்டமாகும். இவர்கள் +2 அறிவியல் பாடங்களில், பொதுப்பிரிவினர் குறைந்தது 60 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் 50 விழுக்காடும் எடுத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : குறிப்பிட்ட வகுப்புகளில் அரசுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் அறிவியல் பாடங்களில் KVPY-யின் நுண்ணறிவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் இவற்றின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்? தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.kvpy.iisc.evnet.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர் ரூ.1,000 மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 31.8.2018

தேர்வு நடைபெறும் நாள் 4.11.2018. முழு விவரங்கள் அறிய http://www.kvpy.iisc.evnet.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தமிழக காவல்துறையில் டெக்னிக்கல் எஸ்.ஐ. பணி!

309 பேருக்கு வாய்ப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம், தமிழகத்தில் காவலர்களுக்கான தேர்வினை நடத்தி தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்துவருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 309 காவல் சார்பு ஆய்வாளர் (Technical SI) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தற்போது வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷனில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷனில் பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
உடல் தகுதி: ஆண்கள் குறைந்தது 163 செ.மீ. உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 154 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் மட்டுமே உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் 10.8.2018.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு http://www.tnusrbonline.org/SI%20(Tech)%20Notification.pdf என்ற இணையதள லிங்க்கை பயன்படுத்தவும்.