தண்ணீரில் இயங்கும் இருசக்கர வாகனம்..!



கண்டுபிடிப்பு

அரசுப் பள்ளி மாணவியின் அபார கண்டுபிடிப்பு!
    
மிக வேகமாக பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அத்யாவசிய பொருட்களின் தேவையும் அதிகரிப்பது இயற்கைதான் என்றாலும் மனித சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்னைகளில் முதன்மையானது தண்ணீர், மற்றொன்று எரிபொருள். இன்றைய இயந்திரகதியான வாழ்க்கைச் சூழலில் தங்கத்துக்கு அடுத்து நாளுக்கு நாள் விலை ஏற்றம் பெறுவது பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள்தான் என்று சொன்னால் மிகையாகாது. தேவை அதிகரிக்கும்போது அதனுடைய இருப்பு அளவு குறைந்துகொண்டேபோவது, தினம் தினம் இப்பொருள்களின் விலை அதிகமாவது இயற்கை.

அப்படி எரிபொருள் தட்டுப்பாடோ அல்லது விஷம் போன்ற விலை ஏற்றமோ ஏற்பட்டாலும் மாற்றாக உப்புநீரில் இருசக்கர வாகனத்தை இயக்கிக்கொள்ளலாம் என்று தனது கண்டுபிடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார் திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி யோகேஸ்வரி. இந்திய இளைஞர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்டும் பொருட்டு மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை ‘இன்ஸ்பையர்’ எனப்படும் Innovation in Science Pursuit for Inspired Research’ என்ற போட்டியை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

மாநில அளவில் மாணவர்கள் பங்குபெறும் அறிவியல் கண்காட்சி போட்டியில் எதிர்கால தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காத மற்றும் சமூக அக்கறையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்பு என்ற நன்மதிப்பை பெற்று மாநில அளவில் மூன்றாம் பரிசை வென்றிருக்கிறார் யோகேஸ்வரி. ‘‘தனியார் பிரின்டிங் நிறுவனத்தில் அம்மா கூலி வேலை செய்துவருகிறார். அப்பா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி எங்களை விட்டு விலகி வாழ்கிறார். அம்மாவின் சேமிப்பில்தான் எங்களுடைய குடும்பம் இயங்குகிறது. நான் திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறேன்.

எனக்கு சிறுவயதில் இருந்தே அறிவியலில் தீராத ஆர்வம் உண்டு. விடுமுறை காலத்தில் விவசாய நிலங்களுக்கு சென்று விளையாடும்போது கூட நெல் எப்படி விளைகிறது? பறவைகளுக்கு சிறகு எப்படி முளைக்கிறது? என்பது போன்ற கேள்விகள் எனக்கு தோன்றும். அதைப்பற்றி அறியவும் நான் தொடர்ந்து முயற்சிப்பதுண்டு. ஒரு நாள் எங்கள் பள்ளியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. நாமும் இக்கண்காட்சியில் பங்குபெறலாமே என நினைத்தேன். அதற்கான கான்செப்ட்டை உருவாக்கும் நேரத்தில்தான் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ‘பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகமாகுது.

வண்டி மட்டும் இப்ப தண்ணில ஓடுனா எப்படி இருக்கும்?’ என்று பேசிக்கொண்டிருந்தார் அதைக் கேட்டபோதுதான் எனக்கு ‘தண்ணீரில் இயங்கும் வாகனம்’ என்ற ஐடியா தோன்றியது. வாகன கழிவுகளால் மாசுபடும் சுற்றுச்சூழல், சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் பற்றாக்குறை, விலை ஏற்றம் என இன்றைய நாளில் எரிபொருளின் சாதக பாதகங்களைத் தெரிந்துகொண்டேன். ‘தண்ணீரில் இயங்கும் வாகனம்’ என்ற ஐடியாவை அம்மாவிடம் சொன்னேன்.‘என்ன…குடும்ப செலவு, படிப்பு செலவுக்குனு போக இனி அறிவியல் கண்காட்சிக்கும் தனியா செலவு செய்யணும் அவ்வளவுதானே.

நீ பண்ணுமா, என் சத்துக்கு முடிஞ்ச வரைக்கும் உன்கூட இருக்கேம்மா!’ என அம்மா உத்வேகம் கொடுத்தாங்க” என தன் கண்டுபிடிப்பின் ஆரம்பப் புள்ளியை விளக்கிய யோகேஸ்வரி தன் கண்டுபிடிப்பின் சிறப்பையும் செயல்படும் விதம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.‘‘நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளது. வீடுகளில் நீரை சூடுபடுத்த ஹீட்டர் பயன்படுத்துவதுபோல், உப்பு நீரில் மின்சாரம் செலுத்தும்போது அது ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் என இரு அயனிகளாக தனித் தனியாக பிரியும். அப்படி பிரியும்  ஹைட்ரஜனை வாகனத்திற்கு எரிபொருளாக பயன்படுத்தலாம்.

ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட கண்டெய்னரில் உள்ள உப்பு நீரில் கிராபைட் கம்பிகளை வைத்து விட்டு, வண்டி பேட்டரியின் உதவியால் மின்சாரம் செலுத்தும்போது அங்கு எலக்ட்ரோலிசிஸ் எனும் வேதிவினை நடைபெறுகிறது. இப்படி சூடுபடுத்தும்போது உப்பு நீரிலிருந்து ஹைட்ரஜன் நீர்க்குமிழிகள் அதிக அளவில் வெளியேறும். இதனோடு இணைந்து பிரியும் ஆக்ஸிஜனை வெளியே விட்டுவிட்டு ஹைட்ரஜன் நீர்க்குமிழிகளை மட்டும் வாயு சேகரிக்கும் சிலிண்டரில் சேகரிக்க, டியூப் ஒன்றை உப்பு நீரில் போட்டேன். ஹைட்ரஜன் நீர்க்குமிழிகளிலிருந்து வெளியேறும் தூய ஹைட்ரஜன் வாயுவை சிலிண்டரில் சேகரித்தேன்.

இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோல் செல்லும் டியூப்பை நீக்கி விட்டு, சிலிண்டரில் இருந்து மற்றொரு டியூப் மூலம் ஹைட்ரஜன் வாயுவை பைக்கில் செலுத்த வாகனம் இயங்க தொடங்கியது. இச்சோதனையில் தொடர்ந்து நான்கு முறை தோல்வியடைந்து ஐந்தாவது முறையில் பைக்கை இயக்கினேன்.’’ என்ற யோகேஸ்வரி தனது கண்டுபிடிப்பின் சிறப்பம்சங்களை விளக்க தயாரானார். ‘‘உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற விளைவுகளுக்கு காரணமாகும் இன்றைய எரிபொருள்களுக்கு சிறந்த மாற்றாக ஹைட்ரஜன் வாயு எரிசக்திமுறை அமையும்.

உலகில் அதிக பரப்பளவில் பரந்து கிடக்கும் கடல்நீரை பயன்படுத்தி அதிலுள்ள ஹைட்ரஜன் வாயுவை பிரித்து எடுத்து, அதனை கொண்டு வாகனங்களை இயக்கினால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை பாதியாக குறைக்கலாம். இத்தொழில்நுட்பம் மூலம் ஒரு லிட்டர் உப்பு நீரை பயன்படுத்தி சுமார் 35 முதல் 40 கி.மீ தூரம் வரை வாகனத்தில் பயணிக்கலாம்.’’ என்றவர் இத்தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்தவும், இத்திட்டத்தை நடைமுறைபடுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கும் அரசின் உதவியை கோரியுள்ளார். மேலும்  தொழிற்சாலை அமைத்து முறையாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே தனது லட்சியமாக கொண்டுள்ளார் சாதனை மாணவி யோகேஸ்வரி.

- வெங்கட்