TNPSC தேர்வு தனியாரிடம் ஒப்படைப்பது சரியா?



சர்ச்சை

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரி முதல் அட்டண்டர் வரையிலான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித் தேர்வு களை நடத்தி ஆட்களைத் தேர்வு செய்துவருவது நாம் அறிந்ததுதான். ஆனால், இனி இத்தேர்வுகளை ஆன்லைன் முறைக்கு மாற்றவும், தனியாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முடிவு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என தேர்வாளர்கள் அச்சம் தெரிவித்துவருகின்றனர். போட்டித்தேர்வு, தகுதித் தேர்வு என அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டால் கல்வி, வேலைவாய்ப்பு என்னவாகும் என கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தியிடம் பேசியபோது அவர் நம்மோடு பகிர்ந்துகொண்ட கருத்துகளைப் பார்ப்போம்…

‘‘அரசுப் பணி பெறவேண்டும் என்பது இன்றைக்கு எல்லோருடைய பெரும் தவிப்பாக உள்ளது. மிகக்குறைத்த வாய்ப்புகளுக்காக மிக அதிகமானவர்கள் போட்டி போடும் நிலை. ஆளுநர் முதல் கடைநிலை ஊழியர் வரை இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மொத்தமாக 25 லட்சம். தொகுப்பூதிய, பகுதிநேர ஊழியர்களும் இதில் அடங்குவர். பிரிவு ஒன்று என்று சொல்லப்படும் துறையின் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் முதற்கொண்டு பிரிவு நான்கு என்று கூறக்கூடிய கிராம நிர்வாக அலுவலர் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வு முறைகளும் பணிநிலையைப் பொறுத்து பின்பற்றப்படுகின்றன. அரசு ஊழியர்களை நியமிக்கும் தேர்வை நடத்தும் நிறுவனமே இனி தேர்வை நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத அரசாங்க நடவடிக்கையாக உள்ளது.’’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ‘‘தனியார் நிறுவனம் என்பது லாப நோக்கம் ஒன்றை மட்டும் கொண்டு செயல்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அரசுப் பணிக்கான தேர்வுகளை அரசு அலுவலர்களைக் கொண்டு நடத்தும்போதே ஊழல் தலைவிரித்தாடும் நிலையில் தனியாரைக்கொண்டு நடத்துவது சீர்கேடுகளை மேலும் அதிகப்படுத்தும்.

தேர்வுக் கட்டணங்களும் அதிகமாகும். இன்றைய போட்டி உலகில் ஒருவர் பத்து முறைக்கு மேல் தேர்வெழுதியும் அரசுப் பணியை எட்டிப்பிடிக்க முடியாத நிலையில் அதிகமான தேர்வுக் கட்டணத்தால் மேலும் பாதிக்கப்படுவார்கள். வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களுக்கு அரசு செய்வது மிகப்பெரிய கொடுமை என்றுதான் இதைக் கூறவேண்டும். கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உயர் அலுவலர்களுக்கான பிரிவு ஒன்று தேர்வு மூலம் 74 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

டி.என்.பி.எஸ்.சி. பிரிவு ஒன்று  தேர்வில் முறைகேடாக 62 பேர் பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த முறைகேட்டில் தேர்வாணைய அலுவலர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள், தனியார் பயற்சி மைய இயக்குநர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றிய வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் தேர்வு நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க இருப்பது மிகத்தவறான செயல். தேர்வுகளை ஆன்லைன் என்று சொல்லப்படும் இணைய வழியில் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் உள்ளன.

இதற்காக தனியார் மென்பொருள் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் வெளி
மாநிலத்தவர்கள் அதிகம் நுழையும் வாய்ப்பு ஏற்படும். ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பறிபோவதோடு போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டு முறைகள் பயனற்றுப் போகும்’’ என்கிறார் மூர்த்தி. மேலும் அரசுத் துறை அவலங்கள் சிலவற்றையும் பட்டியலிட்டபோது, ‘‘அரசுப் பணியாளர் தேர்வு முறைகளில் முறைகேடுகள் நடப்பதால் பணம் உள்ளவர்கள் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். பணம் இல்லாதவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். திறமையற்றவர்கள் பதவிக்கு வருவார்கள். பணம் கொடுத்தால் வேலை கிடைத்தால் ஏழைகள் ஏமாற்றப்படுவார்கள்.
தவறான வழியில் அரசுப் பணிக்கு சிலர் இப்படி தேர்வாவதால் அரசு நிர்வாகமும் ஒட்டுமொத்தமாக சீர்கேடடைகிறது. இன்று பல துறைகள் சீர்கெட்டுப் போனதைப் பார்க்கிறோம். அதேசமயத்தில் சில துறைகளுக்கு நேர்மையானவர்கள் வரும்போது அத்துறைகளில் தலைகீழ் மாற்றங்கள் நடப்பதைப் பார்த்தோம். நட்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் என்ற கைத்தறிதுணிகளை விற்பனை செய்யும் தமிழக அரசின் நிறுவனம் உ.சகாயம்  அத்துறையின் இயக்குநராக இருந்த காலங்களில் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது.

இப்படி பல அரசுத்துறைகளில் நேர்மையான அதிகாரிகளால் நல்ல மாற்றங்கள் நடப்பதைப் பார்க்கிறோம். நேர்மையற்ற வழியில் பதவிக்கு வருபவர்களால் மக்களும் பாதிப்புக்கு ஆளாக்கப்படுவார்கள். அரசின் நிர்வாகச் சேவைகள் உரியவருக்கு உரிய காலத்தில் சரியாகக் கிடைக்காது. இன்று முதியோர் உதவித்தொகை வழங்குவதிலும் ஊர்ப்புற ஏழைகளுக்கு மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி செய்பவர்களுக்கு ஊதியம் அளிப்பதிலும் மிகப்பெரிய அளவிற்கு முறைகேடுகள் நடந்துவருவதைப் பார்க்கிறோம். சுதந்திர நாடு என்பதைவிட திருடர்கள் நாடாக ஆகிக்கொண்டுள்ளது.’’ என்று கவலையைத் தெரிவிக்கிறார் மூர்த்தி.

‘‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட தாமதம் ஆவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஆணையம் கூறும் காரணம் ஏற்புடையதல்ல. கால தாமதத்திற்கான காரணங்களை சரிசெய்யாமல் தனியாரிடம் தேர்வு நடத்தும் பொறுப்பைக் கொடுப்பது முட்டாள்தனமான முடிவு. தனியார் மென்பொருள் நிறுவனங்கள் இன்று மிகப்பெரிய ஆளுமை செலுத்தி அரசு நிர்வாகங்களின் பணிகளை படிப்படியாகக் கைப்பற்றிவருகின்றன. தனியார் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான இளைஞர்களும் இன்றைக்கு மிகக் குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.  

பணிப்பாதுகாப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படிப்பட்ட நிலையில் அரசுப் பணிக்கான தேர்வுகளையும் தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற பல்வேறு அரசு நிர்வாகப் பணிகள் தனியாரின் கைகளுக்கு வெளியில் தெரியாமல் போய்க்கொண்டுள்ளன. தமிழ்நாட்டின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிடவேண்டும். இளைஞர்கள் அதிகம் வாழும் நாட்டில் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவேண்டிய மாபெரும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது’’ என்றார். கல்வி மறுக்கப்பட்டது, அடுத்து வேலைவாய்ப்புகளும் இருட்டடிப்பு செய்யப்படப் போகிறது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ தெரியவில்லை. காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.

- தோ.திருத்துவராஜ்