உன்னதமானது ஆசிரியர் மாணவர் உறவு!



சமூகப் பார்வை

அடுத்த தலைமுறையினரை பண்பாளர்களாக, பொறுப்பானவர்களாக உருவாக்கும் மிக உன்னதமான பணி ஆசிரியர் பணி. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்திற்கு முன்னதாக ஆசிரியரைக் குறிப்பிட்டார்கள். குறைகளைக் களைபவரே ஆசிரியர். ஒருசில சம்பவங்கள் ஆசிரியர் மாணவர் உறவில் விரிசல் நிறைந்ததாகவும், பல இடங்களில் அன்பு நிறைந்ததாகவும் காணப்படுகிறது. புது வகுப்புகளில் மாணவ, மாணவியர் சேர்ந்திருப்பார்கள் இவர்களுக்குள் உறவை பலப்படுத்த சில வாரங்கள் அல்லது சில மாதங்கள்கூட ஆகலாம். ஆனால், ஆசிரியர் மாணவர் உறவு என்பது ஓர் உன்னதமான நிலையயை உடையது.

இவன் என் மாணவன் என்பதில் ஆசிரியரும், இவர் எங்கள் ஆசிரியர் என மாணவரும் பெருமைகொள்ளும்படியாக இருக்க வேண்டும். சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியரைப் பிரிய முடியாமல் மாணவர்கள் கட்டிப்பிடித்து கதறி அழுத வைரல் வீடியோ ‘இவர்போல் ஓர் ஆசிரியர் கிடைக்க மாட்டாரா?’ என ஒவ்வொரு பள்ளி மாணவரையும் நினைக்கவைத்தது. நான்கு ஆண்டுகளில் ஒரு 28 வயது ஆசிரியர் பகவான் தனது மாணவர்களுடன் நீண்ட ஓர் உன்னத உறவுப் பாலத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கற்றல் கற்பித்தலில் மாணவர்களுடன் உரையாடுவதற்கு கதைகள், அவர்களின் குடும்ப பின்னணியைப் புரிந்துகொண்டு, எதிர்காலத்தைப் பற்றி அவர்களிடம் பேசினேன். அவற்றை ப்ரொஜெக்டர் மூலம் காண்பிப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டேன். இந்தப் புதிய விஷயங்கள் எனக்கும் அவர்களுக்கும் ஓர் உண்மையான பிணைப்பை உருவாக்கியது. ஆசிரியர் என்பதைவிட நல்ல நண்பன், அவர்கள் வாழ்க்கையில் நானும் ஒரு சகோதரன் என்று சொன்னாரே பகவான், அந்தப் புரிதல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தேவை.

வகுப்பறையில் ஒவ்வொரு மாணவராக தினமும் பாசிட்டிவ் வாக்கியத்துடன் வகுப்பை ஆரம்பிக்க வைக்கும்போது, எல்லா மாணவர்களுக்கும் சமஉரிமை கிடைப்பதுடன், அவர்களின் அன்றாட நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளவும் முடியும். கல்வியறிவு மட்டும் இன்றி வாழ்க்கை முறை (life skill lesson) பாடமும் மிக அவசியம். உதாரணத்திற்கு, நீர் ஜாடியில் தண்ணீர் அருந்தும் காகத்தின் கதை எதை கற்பிக்கிறது? காக்கா தனது தேவைக்காக தனக்கு கிடைத்த பொருளை வைத்து, யோசித்து நிதானமாக தனது தாகத்தை தீர்த்துக்கொள்கிறது.

இதுமாதிரியான வாழ்க்கை முறை பாடத்தை கற்பிக்கும் கதைகள் மாணவர்களின் கவனம் கூர்மையாகும். மனநல ஆராய்ச்சியில் புதிதாக “Flynn Effect” ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, இப்போது உள்ள குழந்தைகளுக்கு IQ அதிகமாக இருக்கிறது. தலைமுறைக்கு தலைமுறை திறனறிவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகவே, ஆசிரியர்கள் அதிக அளவில் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனநல ஆரோக்கியம் தேவைப்படும் குழந்தைகளுக்கு பள்ளியில் பலவிதமான உதவிகள்  தேவைப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு குழந்தை ADHD (Attention-deficit hyperactivity disorder) என்ற பாதிப்பு உள்ள குழந்தை தினசரி தன் வகுப்பறையில் சில வேலைகளைச் செய்யச் சொல்வதன் மூலம் அந்தக் குழந்தையின் திறனை மேம்படுத்தலாம். இது மாதிரியான சிக்கலைத் தீர்க்க முடியவில்லை என்றால், சிறப்புப் பள்ளி ஊழியர்களின் உதவி அல்லது மனநல சுகாதார சேவைகளைக் கூடுதலாகப் பெறலாம். மாணவரின் நுண்ணறிவை புரிந்துகொண்டு ஆலோசனை வழங்க முடியும். இதில் பெற்றோர்களின் பங்கும் மிக முக்கியம். இணையதளத்தில் நல்லதும் கெட்டதுமான ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

இன்றையக் குழந்தைகள் செல்போன் மற்றும் கணினியில் அதிக அறிவுடன் விளங்குவதால், அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனெனில், ஒரு நாளில் 8 மணிநேரம் ஆசிரியர்களுடன்தான் அவர்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள். தொடுதலில்கூட நல்லதையும், கெட்டதையும் அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கிக் கூற வேண்டும். ஏனெனில், மாணவர்களுக்கான முதல் ஆலோசகர் ஆசிரியர் மட்டுமே. ஒரு வகுப்பில் எல்லோருமே நன்றாகப் படிப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

அதில், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை எவ்வளவு சீக்கிரம் அடையாளம் காண்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களை மீட்டெடுக்கலாம், அதேபோல் நடத்தை சிக்கல்கள் உள்ள குழந்தைகளை அடையாளம் காணவேண்டும். ஆசிரியர்கள் ஓர் உளவியலாளர் அல்லது கூகுள் போன்று பிறவற்றின் மூலம் குறிப்பிட்ட கோளாறு பற்றி அறிந்துவைத்திருக்க வேண்டும். அப்படி அறிந்து வைத்திருப்பதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும். எப்படி உதவ முடியும் என்றால், குற்றம் அல்லது குற்றம்சாட்ட வேண்டாம்.

குழந்தையை நீங்கள் அன்போடு கவனித்துக் கொள்ளும் விதத்தில் கேளுங்கள். ஒரு மோசமான நடத்தையைக்கூட தைரியமாக வந்து சொல்லும். மதிய உணவு நேரத்தில் அல்லது பள்ளி முடிந்து செல்கையில் அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு சிக்கலைத் தீர்ப்பதற்க உதவ வேண்டும். குறைந்தபட்சம் குழந்தை ஏற்கத்தக்க சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.
சில அசாதாரணமான நடத்தையை கவனிக்கும்போது குழந்தை மிகவும் வெட்கப்படுகிறதா என்பது பற்றி தெரிந்துகொள்ள சில அடிப்படை உரையாடல்கள்:
* உன்னைப் பற்றி எனக்குத் தெரியாத ஒன்றை கூறு?
* இந்த வாரத்தின் சிறப்பம்சம் என்ன?
* நான் உன்னை... கவனித்தேன், அதைப் பற்றி சொல்லுங்கள்!
* உன் பிரச்னை என்ன? என்னிடம் சொல் நான் உதவி செய்கிறேன்?

-என்பது போன்ற வார்த்தைகளால் கவனம் செலுத்த வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு எது சரி? எது தவறு? என்பதில் குழப்பம் இருக்கும். சமூக ஊடகம் தற்போதைய பரபரப்பு செய்திகளை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறது. அது ஆசிரியர் மாணவர் சார்ந்த தவறான செய்தியாகக்கூட இருக்கலாம். அது மாணவர்களின் மனதில் எதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது;  வகுப்பு அறையில் அதன் வெளிப்பாடு எப்படி உள்ளது என்பதையெல்லாம் நன்கு ஆராய்ந்து வைத்திருக்க வேண்டும்.

மாணவர்கள் எந்தவிதமான தகவல்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதிலும் ஆசிரியர்களுக்கு கவனம் இருக்க வேண்டும். எல்லாவற்றையுமே கல்வியுடன் தொடர்பு படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சமூகம் சார்ந்தும், வேலைவாய்ப்பு சார்ந்தும், திறன் சார்ந்தும் இரு மாணவர் அணி அமைத்து விவாதம் நடத்தலாம். இது போன்ற பல்வேறு முறைகள் மூலம் ஒரு ஆசிரியரால் வாழ்க்கைத் திறன் வியூகத்தை விளக்க முடியும். ஒரு வாரம் புதிர்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் கல்வியை தொடர்புபடுத்தலாம்.

புதிர் போன்ற விளையாட்டுகள் கேட்கப்படலாம் அல்லது ‘புவி வெப்பமடைதல்’ போன்ற பாடம் மூலம் மாணவர்கள் மத்தியில் அவர்களின் அறிவுத்திறனை வளர்க்கலாம். மொத்தத்தில் மாணவ, மாணவிகளுக்கு தோழனாகவும், ஆற்றுப்படுத்துநராகவும், தாயாகவும், வழிகாட்டியாகவும், நல்ல ஆசிரியராகவும் முன்மாதிரியாக விளங்க வேண்டும். இந்த உறவே, வாழ்நாளில், இவன் என் மாணவன் என்பதை ஆசிரியராலும், இவர் என் ஆசான் என மாணவனாலும் சொல்ல வைக்கும்.

- வந்தனா, உளவியல் ஆலோசகர்