தீபாவளி ரிலீஸ்!
தீபாவளி என்றாலே பட்டாசு, புதுத்துணி, பலகாரம், பட்டிமன்றம்…இந்தப் பட்டியலை அவரவர் தனிப்பட்ட ரசனை மற்றும் தேர்வுகளின் அடிப்படையில் நீட்டிக்கொண்டே போகலாம்.ஆனால்-நீங்கள் தமிழராக இருப்பின் நிச்சயமாக உங்கள் தீபாவளி பட்டியலில் ‘தீபாவளி ரிலீஸ்’ இடம்பெறும். ஏனெனில்-தமிழ் பேசிய முதல் திரைப்படமான ‘காளிதாஸ்’ (1931) கூட தீபாவளி ரிலீஸாகத்தான் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஒரு வாரம் முன்னதாகவே 31-10-1931ல் சென்னை சினிமா சென்ட்ரல் தியேட்டரில் (முருகன் தியேட்டர்) படம் திரையிடப்பட்டிருக்கிறது.
தீபாவளி பர்ச்சேஸ் அரிபரி யில் இருந்த சென்னைவாழ் மக்கள் செலவோடு செலவாக தமிழின் முதல் பேசும் படத்தை பார்த்து அதிசயித்தார்கள் என்று செவிவழி தகவல். அதுவரை ஊமைப்படம் என்று சொல்லப்பட்ட மவுனப்படங்களையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு திரையில் பேசும் பாத்திரங்களைக் கண்டதுமே, படத்திலிருந்த சிறுசிறு குறைகளையும் தாண்டி கொண்டாடித் தள்ளிவிட்டார்கள்.
இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ (1931) தயாரித்த இம்பீரியல் மூவிடோன் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. எட்டு நாட்களில் தயாரான இந்தப் படத்தின் அந்நாளைய பட்ஜெட் ரூ.8,000. அதுவே அப்போது பிரும்மாண்ட தயாரிப்புதான். ‘காளிதாஸ்’ தொடங்கி, தீபாவளி ரிலீஸ் என்றாலே தமிழ்த் திரையுலகத்துக்கு கொண்டாட்டம்தான். பொங்கல், சித்திரைத் திருநாள் ஆகிய தேதிகளிலும் கூட படங்களை ரிலீஸ் செய்வது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் விருப்பம் என்றாலும் தீபாவளி என்றால் ஸ்பெஷல் கவனத்தைச் செலுத்துவார்கள்.
ஏனெனில், போனஸ் வாங்கிய மக்கள் தாராளமாக செலவு செய்வார்கள். அவர்களது தீபாவளி செலவில் சினிமாவுக்கும் இடம் கொடுப்பார்கள். எனவேதான் தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு குறைந்தபட்ச வெற்றி உத்தரவாதம் எப்போதுமே உண்டு.
தமிழின் முதல் நூறு நாள் திரைப்படமான ‘ஆர்யமாலா’வும் ஒரு தீபாவளி ரிலீஸ் படமே. இத்திரைப்படத்தை பட்ஷிராஜா ஃபிலிம்ஸ் ராமுலு நாயுடு தயாரித்தார். பொம்மன் இரானி இயக்கம். பி.யூ.சின்னப்பா ஹீரோ. இயக்குநர் டி.ஆர்.ரகுநாத்தின் மனைவி எம்.எஸ்.சரோஜா, ஆர்யமாலா வேடத்தில் நடித்திருந்தார். பி.யூ.சின்னப்பாவின் மனைவி ஏ.சகுந்தலாவும் சொர்ணமாலை என்கிற கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்துக்கு இன்னொரு சிறப்பு உண்டு. ‘தசாவதாரம்’ (2008) படத்தில் கமல்ஹாசன், பத்து வேடங்களில் நடித்து சாதனை புரிந்தார் இல்லையா? இந்த சாதனையை ‘ஆர்யமாலா’ படத்திலேயே பத்து வேடங்கள் ஏற்று பி.யூ.சின்னப்பா செய்திருக்கிறார். எனினும் இவரது சாதனையை ‘திகம்பர சாமியார்’ (1950) படத்தில் பதினோரு வேடங்கள் ஏற்று நம்பியார் முறியடித்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனேகூட ‘நவராத்திரி’ (1964) படத்தில் ஒன்பது வேடங்கள்தான் ஏற்றார். ‘ஆர்யமாலா’வின் நூறு நாட்கள் சாதனையை அடுத்து எட்டிய ‘மனோன்மணி’ (1942) படமும் தீபாவளி ரிலீஸ்தான்.
1944ல் தீபாவளிக்கு வெளியான ‘ஹரிதாஸ்’, 1945 தீபாவளி மற்றும் 1946 தீபாவளியை எட்டி மூன்று தீபாவளிக்கு ஓடிய திரைப்படம் என்று யாராலும் இன்றுவரை நினைத்துப் பார்க்க முடியாத சாதனையைப் படைத்தது. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்கிற பெருமையை ஹீரோ தியாகராஜ பாகவதருக்கு வழங்கியது.
‘ஹரிதாஸ்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் அடுத்த தீபாவளிக்கு வெளிவந்த ‘மீரா’ (1945) படமும் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. இசைமேதை, பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த இந்தப் படத்தை அவரது கணவர் டி.சதாசிவம் தயாரித்தார். அமெரிக்க இயக்குநரான எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கம்.
தமிழின் முதல் வெள்ளிவிழாப் படமான ‘ஏழை படும் பாடு’, 1950 தீபாவளி ரிலீஸாக அமைந்தது.1952 தீபாவளிதான் தமிழ்த் திரையுலகம் என்றென்றும் நினைவில் நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டிய தீபாவளி. ஏனெனில் நடிகர் திலகம் என்கிற கலையின் தலைமகன் சிவாஜியை அறிமுகப்படுத்திய ‘பராசக்தி’, தீபாவளி ரிலீஸாக இந்த ஆண்டுதான் வெளியானது. படத்தின் நாயகன் பெயர் குணசேகரன் என்பதால், அப்போது தமிழகத்தில் பிறந்த ஏராளமான ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இப்படத்துக்கான கலைஞரின் கனல் தெறிக்கும் கதை வசனம் இன்றளவும் போற்றப்படுகிறது.
1954 தீபாவளிக்கு எம்.ஆர்.ராதா நடித்த ‘ரத்தக்கண்ணீர்’, 1957 தீபாவளிக்கு திரைக்கு வந்த எஸ்.எஸ்.ஆர் நடித்த ‘முதலாளி’ ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாகும். 1959ன் தீபாவளி ரிலீஸாக சிவாஜி நடித்த ‘பாகப்பிரிவினை’, இருநூறு நாள் ஓடிய வெற்றிப்படமாக அமைந்தது.
1961ல் ‘தாய் சொல்லை தட்டாதே’, 1963ல் ‘கற்பகம்’, ‘அன்னை இல்லம்’, 1964ல் ‘நவராத்திரி’, ‘படகோட்டி’ ஆகியவை வெற்றி பெற்ற தீபாவளிப் படங்கள். தீபாவளி ரிலீஸாக முதன்முதலாக திரையிடப்பட்ட வண்ணப்படம் என்கிற பெருமையை ‘படகோட்டி’ தட்டிச் செல்கிறது. 1967 தீபாவளிக்கு வெளிவந்த ‘ஊட்டிவரை உறவு’, ‘இரு மலர்கள்’ இரண்டும் வெற்றிப்படங்கள் ஆயின. ‘நான்’, வெள்ளிவிழா கண்டது. ஒரே தீபாவளியில் வெளியான மூன்று படங்கள் வெற்றி காண்பது என்பது அபூர்வமான ஒரு நிகழ்வே.
தீபாவளிக்கு பொதுவாக பக்திப் படம் வெளியாவது அரிது. அப்படி அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வு 1971ல் நிகழ்ந்தது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘ஆதிபராசக்தி’, இந்த தீபாவளிக்கு வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடியது. அடுத்த ஆண்டு, 1972 தீபாவளிக்கு தேவரின் ‘தெய்வம்’ வெளியாகி நூறு நாள் ஓடியது. 1973ல் ‘பூக்காரி’, ‘கெளரவம்’, 1974ல் ‘அவள் ஒரு தொடர்கதை’ ஆகியவை வெற்றிகரமான தீபாவளி ரிலீஸ்களாக அமைந்தன. 1977ல் ‘ஆட்டுக்கார அலமேலு’ தீபாவளி ரிலீஸாக வெளியாகி இருநூறு நாட்கள் ஓடியது.
இளையராஜாவின் 100வது படமான ‘மூடுபனி’ 1980ன் தீபாவளி ரிலீஸ் படமே. 1981 தீபாவளிக்கு வெளியான ஏழு படங்களுமே வண்ணப் படங்கள்தான். அதுவரை கருப்பு வெள்ளை படங்களும் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்த தீபாவளியில் இருந்து எல்லா தீபாவளியுமே வண்ணமயமாய்தான் அமைந்தது.
‘தண்ணீர் தண்ணீர்’, ‘கீழ்வானம் சிவக்கும்’, ‘அஞ்சாத நெஞ்சங்கள்’ ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாய் அமைய, பாக்யராஜ் நடித்த ‘அந்த ஏழு நாட்கள்’ வெள்ளிவிழா கொண்டாடியது. 1982 தீபாவளியில் மணிவண்ணன் இயக்குநராக அறிமுகமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ வெளியாகி இருநூறு நாட்கள் ஓடியது.
1983 தீபாவளிக்குத்தான் ரஜினி, கமல் போட்டி உச்சத்துக்கு வந்தது. ரஜினியின் ‘தங்க மகன்’, கமலின் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ இரண்டுமே இருநூறு நாட்களைக் கடந்து ஓடின. இதோடு ‘அபூர்வ சகோதரி கள்’, ‘தங்கைக்கோர் கீதம்’, ‘வெள்ளை ரோஜா’ ஆகிய படங்களும் போட்டி போட்டு ஓடி வெற்றியை எட்டின.
1984 தீபாவளி விஜயகாந்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ‘வைதேகி காத்திருந்தாள்’ வெளியாகி பெரும் வெற்றி கண்டது. 1985 தீபாவளி ரிலீஸாக பக்திப்படமான ‘சமயபுரத்தாளே சாட்சி’ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலச்சந்தரின் ‘சிந்து பைரவி’, ரஜினியின் ‘படிக்காதவன்’ படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின. 1986ல் ‘புன்னகை மன்னன்’, ‘அறுவடை நாள்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ படங்கள் தீபாவளிக்கு வெளிவந்து நன்கு ஓடின.
1987 தீபாவளிக்கு வெளியான ரஜினியின் ‘மனிதன்’, கமல்ஹாசனின் ‘நாயகன்’ மோதின. இரண்டுமே வெள்ளிவிழாப் படங்களாக அமைந்தாலும் ‘நாயகன்’, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய திரைப்படமாக அமைந்தது. ‘இவர்கள் வருங்காலத் தூண்கள்’, ‘இனிய உறவு பூத்தது’, ‘உழவன் மகன்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ‘புயல் பாடும் பாட்டு’, ‘மைடியர் லிசா’, ‘பூக்கள் விடும் தூது’, ‘மனதில் உறுதி வேண்டும்’ ஆகிய படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் ‘வங்காளக் கடலே’ பாடலில் சுகாசினியோடு அப்போதைய டாப்-4 நடிகர் பட்டியலில் இடம்பெற்றிருந்த ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த் ஆகியோர் ஆடிப்பாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சுகாசினியின் சித்தப்பா என்பதால் கமல் மட்டும் அந்த டூயட்டில் கலந்துகொள்ளவில்லை. தமிழ் சினிமாவின் தலைசிறந்த தீபாவளியாக 1987ஐயே குறிப்பிட வேண்டும்.1989ல் ரஜினியின் ‘மாப்பிள்ளை’, கமல்ஹாசனின் ‘வெற்றிவிழா’ இரண்டுமே சக்கைப்போடு போட்டன. 1990 தீபாவளிக்கு ரஜினியின் போட்டியின்றி கமல் களமிறங்கினார்.
‘மைக்கேல் மதன காமராஜன்’, ஏ, பி, சி என்று அனைத்து வட்டாரங்களிலும் சக்கைப்போடு போட்டது. 1991 தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் கமலின் நடிப்புக்கு பெருமை சேர்க்கும் படமாக ‘குணா’ அமைந்தாலும், வசூலில் சோடை போனது. ஆனால், ரஜினியின் ‘தளபதி’, வட்டியும் முதலுமாக வசூலித்தது. மணிரத்னம்- இளையராஜா கூட்டணி இந்தப் படத்துக்குப் பின்னர் மீண்டும் அமையவில்லை.
1992லும் ரஜினி, கமல் போட்டி தொடர்ந்தது. இம்முறை ரஜினியின் ‘பாண்டியன்’ சுமாராகிவிட, கமலின் ‘தேவர் மகன்’ வீறுகொண்டு எழுந்தது. ‘செந்தமிழ்ப் பாட்டு’, ‘திருமதிபழனிச்சாமி’, ‘ராசுக்குட்டி’ ஆகியவை இந்த தீபாவளி ரிலீஸில் குறிப்பிடத் தகுந்தவையாய் அமைந்தன.
ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என்று புதிய திறமைகள் துளிர்விட்ட நிலையிலும் 1993 தீபாவளியை முழுமையாக கைப்பற்றினார் ஜாம்பவான் பாரதிராஜா. அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்குச் சீமையிலே’ வெள்ளிவிழா கொண்டாடியது. சரத்குமாரின் ‘கட்டபொம்மன்’, கார்த்திக்கின் ‘சின்ன ஜமீன்’, மணிரத்னம் இயக்கிய ‘திருடா திருடா’ ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தன. ரஜினி, கமல் போட்டி படங்கள் எதுவும் அமையவில்லை என்பது ரசிகர்களை சோர்வடைய வைத்தது.
ரஜினியின் போட்டியின்றி 1994 தீபாவளிக்கு வெளியான கமலின் ‘நம்மவர்’, அவருக்கு நன்மை செய்துவிடவில்லை. வெறும் ஆறு படங்களே வெளியான இந்த தீபாவளியில் தன்னந்தனியாக மகுடம் சூடியவர் சரத்குமாரின் ‘நாட்டாமை’. வெள்ளிவிழா கண்ட படமாக இது அமைந்தது. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ரஜினி, கமல் மோதும் தீபாவளியாக 1995ல் அமைந்தது.
ரஜினியின் ‘முத்து’ வெள்ளிவிழா கொண்டாட, கமலின் ‘குருதிப்புனல்’ வெற்றிப்படமாக அமைந்தது. தவிர்த்து மம்முட்டி நடித்த ‘மக்களாட்சி’க்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இளம் நடிகராக ‘சந்திரலேகா’ மூலம் தீபாவளி கோதாவில் அப்போதுதான் விஜய் குதித்திருந்தார். 1996 தீபாவளியும் கமல் தீபாவளிதான். ‘அவ்வை சண்முகி’ வெள்ளிவிழா கண்டது.
1999 தீபாவளிக்கு வெளிவந்த ஷங்கரின் ‘முதல்வன்’ பெரும் வெற்றி பெற்றது. 2000 தீபாவளிக்கு கமலின் ‘தெனாலி’தான் ஹைலைட்டாக அமைந்தது. தவிர்த்து ‘பிரியமானவளே’ மூலம் தன் முதல் தீபாவளி வெற்றியை விஜய் எட்டினார். 2001 தீபாவளிக்கு வெளிவந்த கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’, ஹாலிவுட் பாணியில் எடுக்கப்பட்ட படமென்று விமர்சகர்களால் கொண்டாடப்பட்டாலும் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
இந்த தீபாவளிக்கு வென்றது விஜயகாந்தின் ‘தவசி’ மற்றும் விஜய்யின் ‘ஷாஜஹான்’, பாலாவின் ‘நந்தா’. விக்ரமின் ‘காசி’ பெரும் பாராட்டுதல்களை அள்ளின. மொத்தம் பதினோரு படங்கள் வெளியான இந்த தீபாவளியில் பாலச்சந்தரின் ‘பார்த்தாலே பரவசம்’ தோல்வியடைந்தது யாருமே எதிர்பாராதது.
2002 தீபாவளி ரிலீஸின்போதுதான் சிம்பு நாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ வெளிவந்தது. விஜய், அஜித் மோதிய தீபாவளி இது. விஜய்யின் ‘பகவதி’, அஜித்தின் ‘வில்லன்’ இரண்டுமே வெற்றிப்படங்களாக, விஜயகாந்தின் ‘ரமணா’ மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. 2003 தீபாவளியில் அஜித்தின் ‘ஆஞ்சநேயா’ சொதப்ப, விஜய் ‘திருமலை’ மூலம் வீறுகொண்டு எழுந்தார். பாலாவின் ‘பிதாமகன்’ வெற்றிப்பட வரிசையில் இணைந்தது. சிம்புவின் ‘மன்மதன்’, அஜித்தின் ‘அட்டகாசம்’ என்று வெற்றிகரமாக அமைந்த தீபாவளி 2004. ‘ட்ரீம்ஸ்’ மூலமாக தீபாவளி ரேஸில் அட்டெண்டன்ஸ் போட்டார் தனுஷ்.
2005ல் ‘சிவகாசி’ மூலம் சீறினார் விஜய். விக்ரமுக்கு ‘மஜா’, வெற்றிப்படமாய் அமைந்தது. அஜித்தின் ‘வரலாறு’, ஜீவா நடிப்பில் ‘ஈ’ என்று 2006 தீபாவளி ரிலீஸில் செமத்தியான வசூல் வேட்டை. பெரிதும் எதிர்பார்த்த விஜய்யின் ‘அழகிய தலைமகன்’ பொய்த்துவிட்ட தீபாவளி 2007 தீபாவளி. எனினும் கருப்புக் குதிரையாக கடைசியில் ஓடிவந்து முதலிடம் பிடித்தது தனுஷின் ‘பொல்லாதவன்’. வெற்றிமாறன் என்கிற திறமையான இயக்குநர் இந்தப் படம் மூலமாகத்தான் தமிழுக்கு கிடைத்தார். சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய ‘வேல்’ வெற்றிப்பட வரிசையில் இணைந்தது.
யாருமே எதிர்பாரா வண்ணமாக இயக்குநர் பிரபுசாலமனின் ‘மைனா’ பெரும் வெற்றியை எட்டிய தீபாவளியாக 2010ல் அமைந்தது. 2012 தீபாவளியில் விஜய்யின் ‘துப்பாக்கி’தான் வெடித்துக்கொண்டே இருந்தது. 2013ல் அஜித் நீண்டகாலத்துக்குப் பிறகு தீபாவளி கோதாவில் குதித்து ‘ஆரம்பம்’ மூலம் வசூலை அள்ளுஅள்ளென்று அள்ளினார். விஷாலின் ‘பாண்டிய நாடு’ ஹிட் ஆகி இன்ப அதிர்ச்சி அளித்தது.
2014ல் ஹரியின் இயக்கத்தில் விஷாலின் ‘பூஜை’ ஹிட்டடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ‘கத்தி’ மூலம் சூப்பர்ஹிட் கொடுத்தார். 2015ல் விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ஹீரோதான்’ வெற்றி பெற்றது.2017-ல் ‘மெர்சல்’, 2018-ல் ‘சர்கார்’, 2019-ல் ‘பிகில்’ என்று தீபாவளியை தன்னுடைய கோட்டையாக மாற்றிக் கொண்டிருக்கிறார் விஜய். 2016ல் ‘காஷ்மோரா’வில் தவறவிட்ட தீபாவளி வெற்றியை ‘கைதி’யில் கார்த்தி கைப்பற்றுவார் என்பது இண்டஸ்ட்ரி டாக்.Happy Diwali Folks!
யுவகிருஷ்ணா
|