இவர்தான் பழைய ஜோக்கு தங்கதுரை!



பழைய ஜோக்குகளைச் சொல்லியே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தங்கதுரை. வேகமாக முன்னேறி வரும் காமெடி நடிகர்களில் முக்கியமானவர். பேசலாமா என்று வாட்ஸ் அப் தட்டியதும் வாங்க பேசலாம் என்று உடனடியாக ரிப்ளை பண்ணினார். வடபழனி பஸ்நிலையம் அருகில் உள்ள பழரசக்கடையில் மீட்டிங் நடந்தது.

‘‘துரைக்கு எந்த ஊர்?’’

‘‘அப்பா அம்மாவுக்கு விழுப்புரம் சொந்த ஊர். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. என்னுடைய அண்ணன் சின்ன வயதில் பழைய பிலிம் ரோலை வைத்து பிலிம் காட்டுவார். தாத்தா கூத்துக் கலைஞர். இதுதான் ஆரம்பத்தில் எனக்குள் கலை ஆர்வத்தைத் தூண்டியது. பயோ டெக்னாலஜி, எம்.எஸ்ஸி மீடியா ஜர்னலிசம் முடித்துள்ளேன்.

விவேகானந்தா கல்லூரியில் படிக்கும்போதுதான் எனக்குள் சினிமா ஆர்வம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அப்போது நான் ரஜினி சார் மாதிரி பேசிக்காட்டுவேன். இன்னொரு நண்பன் ரகுவரன் சார் மாதிரி பேசிக்காட்டுவார். அப்போது ஒரு தொலைக்காட்சியில் காமெடி திறமையை வெளிப்படுத்தும் போட்டி நடந்தது.

எனக்குள்ளிருக்கும் திறமையை ஊக்குவிக்கும் விதமாக நண்பர்கள் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள சொன்னதோடு கல்லூரிக்கும் பெயர் கிடைக்கும் என்றார்கள்.

ஆடிஷனில் ரோபோ ஷங்கர், கோவை குணா, மதுரை முத்து போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். அவர்கள் அப்போதே ஸ்டேஜ் ஷோவில் தனியாவர்த்தனம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் ஒருவித அச்சம் இருந்தாலும் அந்த நிகழ்ச்சி யின் மூலம் சின்னத்திரையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.

அதுவரை சென்னையில் உள்ள காசநோய் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்தேன். நோயாளிகளுக்கு நோயின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் மெடிக்கல் இன்வெஸ்டிகேஷன் வேலை அது. நல்ல சம்பளத்தில் இருந்தாலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் வேலையை உதறிவிட்டேன்.’’

‘‘முகவரி கொடுத்த முதல் சினிமா?’’

‘‘கரெக்டா சொல்லணும்னா ‘ஜித்தன்’ ரமேஷ் நடித்த ‘மதுரை வீரன்’ படத்தில் ஹீரோ ஃப்ரெண்ட் கேரக்டர் பண்ணியது தான் என்னுடைய முதல் சினிமா அனுபவம். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அஞ்சலியை ஆறு வருடம் லவ் பண்ணும் கேரக்டர் கிடைத்தது. அந்தப் படம் அடுத்தடுத்து சில பட வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது. ‘இன்று நேற்று நாளை’, ‘ஜிகர்தண்டா’ என்று சில படங்களில் நடித்தேன். ‘நட்பே துணை’ படத்துக்குப் பிறகுதான் சினிமா வெளிச்சம் என் மீது முழுமையாக வீச ஆரம்பித்தது. சமீபத்தில் வெளிவந்த ‘ஏ ஒன்’, ‘ஜாக்பாட்’ படங்கள் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்தது.’’

‘‘இப்போது என்னென்ன படத்தில் நடிக்கிறீர்கள்?’’

‘‘நிறைய பண்ணுறேன் சார். குறிப்பா சொல்லணும்னா ‘பன்னிக்குட்டி’ யில் லீட் கேரக்டர் பண்ணியிருக்கிறேன். யோகிபாபு, கருணாகரன், சிங்கம் புலி ஆகியோரும் இருக்கிறார்கள். லைக்காவும் ‘காக்காமுட்டை’ மணிகண்டனும் இணைந்து தயாரிக்கிறார்கள். ‘கிருமி’ அனுசரண் இயக்கியுள்ளார். இந்தப் படம் எனக்கு பெரிய திருப்புமுனையாக அமையும்.

‘பார்ட்னர்’ படத்தில் ஆதியுடன் நடிக்கிறேன். பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ நடிக்கும் படத்தில் நல்ல கேரக்டர் கிடைத்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறேன். ஜி.வி. மாணவனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் கல்லூரி தாளாளராக கெளதம் வாசுதேவ்மேனன் பண்றார். மதிமாறன் இயக்குகிறார்.

இந்தப் படம் ஜி.வி.பிரகாஷுக்கு திருப்புமுனையாக இருக்கும். சந்தானத்துடன் நடிக்கும் ‘டிக்கிலோனா’, கல்யாண் இயக்கத்தில் ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன் படம் என்று கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன.’’

‘‘ஹீரோவாக நடிக்கணும்னு ஆசை இருக்கிறதா?’’

‘‘காமெடியனாக வரணும் என்றுதான் ஆசை என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். எல்லோருக்கும் வானத்தைத் தொடணும் என்கிற ஆசை இருக்கும். அவ்வகையில் எனக்கும் ஹீரோ ஆசை உண்டு . எனக்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் ஹீரோவாக நடிக்கலாம். மற்றவர்கள் நடிக்கிறார்கள் என்பதால் நடிக்கமாட்டேன்.

எனக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற சூழல் உருவாகும்போதும் ஹீரோவாக பண்ணுவேன். அதுவரை என்னுடைய டிராக் காமெடி மட்டுமே. விவேக் சார் மாதிரி நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடங்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும்.’’

‘‘ரோல் மாடல் ?’’

‘‘ரோல் மாடல் யாரும் கிடையாது. வடிவேலு சாரின் முகபாவம், வாய்ஸ் மாடுலேஷன் பிடிக்கும். விவேக் சார் காமெடி மூலம் சமூகக் கருத்து சொல்வது பிடிக்கும். சந்தானம் சாரின் டைமிங், நண்பர்களுக்கு உதவும் மனப்பான்மை பிடிக்கும். இப்படி.... ஒவ்வொருவரிடமும் இருக்கும் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருகிறேன். என்னுடைய வளர்ச்சியில் பங்குள்ளவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அந்தவகையில் சக நடிகர்கள், இயக்குநர்களுக்கு என் நன்றி எப்போதும் இருக்கும்.’’

‘‘ஜோதிகாவை வர்ணித்து ‘ஜாக்பாட்’ மேடையில் கவிதை வாசித்தீர்களே! சினிமாவுக்கு பாட்டெழுதும் உத்தேசம் இருக்கிறதா?

‘‘முதலில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பு எனக்கும் தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கும் கொடுக்கப்பட்டது. அதற்காக கவிதை ரெடி பண்ணினேன். கடைசி நேரத்தில் பிளான் மாறியது. எனவே, நான் எழுதிய கவிதையை வாசிக்க மட்டு மாவது பர்மிஷன் கேட்டேன். கவிதை வாசித்து முடித்ததும் சிவக்குமார் சார், ஜோ மேடம் என்று எல்லோரிடமிருந்தும் பாராட்டு கிடைத்தது. சிறப்பு விருந்தினராக வந்த சூர்யா சார் எதுவும் சொல்லவில்லை.

ஏதாவது ஏடாகூடமாகப் பேசி மாட்டிக்கிட்டோமோ என்று பயந்தேன். முதல் நாள் முதல் காட்சியில் சூர்யா சார் என் கரங்களைப் பற்றிக்கொண்டு ‘உங்கள் கவிதை அருமை’ என்றும், ஜனநெரிசலால் வாழ்த்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று சொன்னதும் நெகிழ்வாக இருந்தது. மற்றபடி காமெடியனாக பெயர் வாங்க வேண்டும், தமிழில் ஸ்ட்ராங்கான இடத்தைப் பிடிக்கணும் என்பதுதான் என்னுடைய லட்சியம். 2020ல் அது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.’’

‘‘உங்கள் வெற்றியின் ரகசியம்?’’

‘‘என் அன்பு மனைவி அருணா. என்னுடையது அரேஞ்ஜ்ட் மேரேஜ். திருமணத்துக்குப் பிறகுதான் நாங்கள் காதலிக்கிறோம். மகன் பெயர் லிஜு கிருஷ்ணன். என்னுடைய வெற்றிக்கு முழுக் காரணம் என் மனைவி. அவர்தான் என்னுடைய எனர்ஜி. நெகடிவ்வாக பேசமாட்டார். எப்போதும் என்னுடைய முயற்சிகளுக்கு சப்போர்ட் பண்ணுவார். ஐ.டி.யில் வேலை செய்கிறார்.

அருமையாக சமைப்பார். விட்டுக் கொடுத்துப் போகக்கூடியயவர். எனக்கு பெயரில்தான் தங்கம் இருக்கும். அவருக்கு குணத்தில் இருக்கும். அவர்தான் உண்மையில் தங்கம்.’’கலகலன்னு பேசத் தொடங்கி, மனைவிக்கு பெருமை சேர்த்து முடிக்கிறார் தங்கதுரை.

சுரேஷ்ராஜா