இது சேரனின் பாட்ஷா!
கதையின் நாயகனாக சேரன் நடித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. இந்தப் படத்தை சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இவர் ‘ஜெயம்’ரவி நடித்த ‘மழை’ படத்தை இயக்கியவர். அவருடன் பேசினோம்.
“அதென்ன சார் ‘ராஜாவுக்கு செக்’ வைக்கு றீங்க?”
“இது திரில்லர் கலந்த எமோஷனல் படம். ‘பாபநாசம்’,‘கொலைகாரன்’ என்று எத்தனையோ படங்கள் திரில்லர் படங்களாக வந்துள்ளது. ஹாலிவுட்டில் ‘டேக்கன்’ என்ற படம் ரொம்ப பிரபலம். இது அந்தப் படங்களிலிருந்து மாறுபட்ட திரில்லர் படமாக இருக்கும். மிக முக்கியமாக எமோஷனலுக்கு முக்கியத்துவம் இருக்கும்.”
“சேரன் என்ன சொல்கிறார்?”
“சேரன் சாரிடம் இந்தப் படத்துக்காக முதலில் பேசும்போது அவர் பிடிகொடுத்துப் பேசவில்லை. ஆனால் நான் அவரை விடவில்லை. ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி சாரை ரீபிளேஸ் பண்ணிட்டு இன்னொரு ஹீரோவை நினைத்தே பார்க்க முடியாது.
அதேபோல் இதில் சேரனைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது. இப்போதுள்ள ஹீரோக்களை நடிக்கவைத்தால் அவர்கள்மீது இருக்கும் ஆக்ஷன் இமேஜ் கதையோட்டத்துக்கு பொருந்தியிருக்காது. அதுமட்டுமல்ல, பதினெட்டு வயது மகளுக்கு அப்பாவாக நடிப்பார்களா என்பதும் சந்தேகமே.” “மற்ற நடிகர்கள்?”
“இர்பான் நெகட்டிவ் கேரக்டர் பண்ணியிருக்கிறார். சிருஷ்டி டாங்கே முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். படம் வெளியானபிறகு அவருடைய கேரக்டர் பற்றி பேசுவார்கள். படத்தில் அவர் மிக முக்கியமான சீன் பண்ணியிருக்கிறார். அப்படியொரு காட்சியில் ஒரேயொரு நடிகைதான் நடித்துள்ளார். அதன்பின் சிருஷ்டிதான் அப்படி நடித்துள்ளார்.”
“பாடல்கள்?”
“கதையின் விறுவிறுப்பைக் கெடுக்காதபடிக்கு ஒரு பாடலை மட்டும் வைத்துள்ளோம். தெலுங்கில் 300 படங்களுக்கு மேல் கீ-போர்டு அரேஞ்ஜ்மென்ட் செய்து கொடுத்துள்ள விநோத் எஜமான்யா மியூசிக் பண்ணியிருக்கிறார். இந்தப் படத்தை, இரண்டு சண்டைக் காட்சிகள், ஒரு பாடல் காட்சி உள்பட முப்பது நாட்களில் எடுத்து முடித்துள்ளோம். குறுகிய காலத்தில் எடுத்துமுடிக்க முக்கிய காரணம்...
ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபுவின் ஸ்பீட் ஒர்க். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக்குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். இந்தப் படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் கையைப் பிடிப்பதைப் போல் உணர்வு வரும்.”
சுரேஷ்
|