திருமணம் பால சரவணன்



டைட்டில்ஸ் டாக்-115

நான் காதல் திருமணம் செய்தவன். என்ஜினியரிங் இரண்டாமாண்டு படிக்கும் போதுதான் காதலிக்க ஆரம்பித்தேன். ஏழுவருட காதலுக்குப்பிறகுதான் காதலியின் கரம் பிடிக்க முடிந்தது.காதல் திருமணத்தில் ஏதோ ஒரு வகையில் நட்பு கலந்திருக்கும். என்னுடைய நெருங்கிய தோழி  சூர்யா. நானும் அவரும் பள்ளி நாட்களிலிருந்து நண்பர்கள். ஒருவகையில் ரத்த சம்பந்தமில்லாத உறவினர் என்று கூட சொல்லலாம். இப்போதும் சூர்யா எங்கள் குடும்பத்துடன் மாறாத அதே நட்புடன் பழகி வருகிறார்.

சூர்யா வழியாகத்தான் என் காதல் மனைவியின் அறிமுகம் கிடைத்தது. சூர்யா கல்லூரியில் படிக்கும் போது ஹாஸ்டலில் தங்கிப் படித்தார். அப்போது நோக்கியா 1100 மாடல் செல்ஃபோன் ஒருவரிடம் இருப்பது என்பதே கவுரவமாக பார்க்கப்பட்டது.

நானும் அப்படி ஒரு ஃபோன் வைத்திருந்தேன். ஆனால் அந்த ஃபோனுக்கு இன்கம்மிங் அவுட் கோயிங் கம்மியாகவே இருக்கும். எனக்கு நண்பர்கள் வட்டாரம் என்பது குறைவு. மிஞ்சிப் போனால் பத்து  நண்பர்கள் இருந்திருப்பார்கள். அதில் நான்கு பேருக்கு ஃபோன் கிடையாது.  அந்த நிலையில் வாரத்துக்கு ஓரிருமுறை சூர்யாவுக்கு போன் பண்ணுவேன். அப்படி ஒரு முறை ஃபோன் பண்ணும் போது மறுமுனையில் இனிமையான குரலில் ‘யார் பேசறீங்க’ என்ற குரல் ஒலித்தது.

புதுக்குரலாக இருக்கிறதே என்று நினைத்து ‘நீங்க யார் பேசறீங்க’ என்று கேட்டேன். ‘நான் சூர்யாவின் ரூம்மேட். சூர்யா கேண்டீன்ல இருக்கிறார்’ என்ற  கூடுதல் தகவலோடு பதில் வந்தது. ‘அவசரமா சூர்யாவிடம் பேச வேண்டும். அழைத்து வரமுடியுமா’ என்று கேட்டேன். மறுமுனையில் ‘அதெல்லாம் முடியாது. அவர் சீக்கிரம் வந்துவிடுவார். வந்ததும் உங்களுக்கு பேச சொல்கிறேன்’ என்ற பதில் வந்தது.

‘என்னங்க... நான் அவசரம் கொஞ்சம் கூப்பிடுங்க என்கிறேன். நீங்க அதெல்லாம் முடியாது என்கிறீர்கள். ஒரு ரூம்மேட்டுக்கு இதுதான் நீங்க செய்ற உதவியா’ என்று கன்னாபின்னான்னு பேச ஆரம்பித்து ஒருகட்டத்தில் வாடி போடி என்று பேசுமளவுக்கு பொங்கிவிட்டேன். மறுமுனையில் போன் உடனடியாக கட்டாகிவிட்டது.

பிறகு கொஞ்ச நேரத்தில் சூர்யா லைன்ல வந்தார். என்னிடம் பேசியது ஹேமா என்ற ரூம்மேட் என்றும் நான் பேசியதற்காக அழுவதாகவும் சொன்னார். ‘நான் தேவையில்லாமல் பேசவில்லை’ என்று விளக்கம் கொடுத்தேன். சூர்யாவோ ஒரு ஸாரி கேட்க சொன்னார். நானும் ஹேமாவிடம் சமாதானம் பண்ணும் விதமாக ஸாரி கேட்டுவிட்டு, நான் ரொம்ப நல்லவன். இல்லேன்னா சூர்யா எங்கூட இவ்வளவு பழகி இருக்க முடியுமா என்று எனக்கு நானே காண்டக்ட் சர்டிபிக்கேட் கொடுத்து ஒரு ஸாரிக்காக முக்கா மணி நேரம் பேச ஆரம்பித்தேன்.

அடுத்த நாளிலிருந்து சூர்யாவுக்கு பதில் ஹேமாவுக்கு ஃபோன் பண்ண ஆரம்பித்தேன். மூணு நாலு மாசம் முகம் பார்க்காமலேயே பேசுகிறேன். சூர்யா மீது மரியாதையும் மதிப்பும் இருந்ததால் நட்புக்கு கலங்கம் வந்துவிடக்கூடாது என்பதால் கொஞ்சம் அடக்கியும் வாசித்தேன். அதன் பிறகு என்னால் ஹேமாவிடம் பேசாமலும் மெசேஜ் அனுப்பாமலும் இருக்க முடியவில்லை. எனக்குள் ஹேமா மீது காதல் இருப்பதாக உணர்ந்தேன். ஒரு நாள் ஹேமாவை நேரில் அழைத்து காதல் சொல்ல முடிவு எடுத்து அழைப்பு கொடுத்தேன்.

அப்போது என் நண்பர்கள், ஆளைப் பார்க்காமலே காதல் வளர்க்காதே. ஆள் நல்லா இல்லைன்னா அப்புறம் கஷ்டப்படுவே என்றார்கள். எனக்கு என் ஆளு நல்லா இருப்பாங்க என்று நம்பிக்கை இருந்தது. தைரியமா சந்திப்புக்கு புறப்பட்டேன். வார விடுமுறையில் ஹேமா தேவகோட்டையில் உள்ள தன் அப்பா, அம்மாவைப் பார்க்கச் செல்வதுதான் வழக்கம். எனக்காக அந்த வாரம் தேவகோட்டை புரோகிராமை கேன்சல் பண்ணினார்.

ஹேமாவை முதன் முதலாக நேரில் சந்தித்தபோது எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன். நான் நினைத்ததைவிட ஹேமா தேவதை மாதிரி இருந்தார். முதல் சந்திப்பிலேயே ஹேமாவைப் பிடித்திருந்தது. ஆனால் உள்மனசு அவசரப்படாதே என்று சொல்லியதால் முதல் சந்திப்பில் காதல் சொல்லவில்லை. ரெகுலர் நலம் விசாரிப்புக்குப் பிறகு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஹேமாவோ எதுக்கு அழைத்தீர்கள் என்று கேட்க ஆரம்பித்தார். ஏதோ ஏதோ சொல்லி அந்த சந்திப்புக்கு விடை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

மணந்தால் ஹேமாதான் என்று முடிவானதும் எனக்குள் இருந்த காதலை உறுதிப்படுத்திக் கொண்டேன். பிறகு நானும் ஹேமாவும் பரஸ்பரம் பரிசுகளை பரிமாறுவது ஒருவரை ஒருவர் விசாரிப்பது என்று உரிமையோடு பழக ஆரம்பித்தோம். ஆனால் காதலை சொல்ல மட்டும் தைரியம் வராததால் அந்த நல்ல நாளுக்காக காத்திருந்தேன். கொஞ்ச நாளில் அதற்கு வேளை வந்தது. எனக்கு சூர்யாவைப் போல் இன்னொரு தோழி அகஸ்தியா. அவங்க வீட்ல என்னை ரொம்ப நாளாக சாப்பிடக் கூப்பிடுவாங்க. அதற்கான சந்தர்ப்பம் அமையாததால் நான் போகாமல் இருந்தேன்.

ஹேமாவையும் சந்திக்கணும், அகஸ்தியா வீட்டாரின் அழைப்பையும் ஏற்கணும் என்பதற்காக ஹேமாவை அங்கு வரச் சொன்னேன். மதியம் சாப்பாடு முடிந்தது. அந்தி சாயும் வேளையில் மெதுவாக ஹேமாவிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

‘இந்த ஃப்ரெண்ட்ஷிப் எனக்கு லைஃப்லாங் வேணும் ஹேமா’ என்றேன். ‘அதனால் என்ன... நம் நட்பு எப்போதும் தொடரும்’ என்றார். ‘திருமணத்துக்குப் பிறகு அதுக்கெல்லாம் வாய்ப்பு இருக்காது. உன் புருஷன், குடும்பம் அதை அனுமதிக்காது. நான் நினைத்த நேரத்துல உங்ககிட்ட பேசணும்’ என்றேன். ‘அதுக்கு என்ன பண்ணணும்’ என்று ஹேமா யோசிக்க ஆரம்பித்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று, ‘அதுக்கு கல்யாணம்தான் ஒரே வழி’ என்று ஒரே போடு போட்டேன்.

‘நான் உன்னை லவ் பண்ணவில்லை... நட்பு வேணும் என்பதற்காகத்தான் கல்யாணம் என்ற ஆப்ஷனை சொன்னேன்’ என்று பிலிம் காட்டினேன். ஹேமா யோசிக்க ஆரம்பித்தார். ‘எனக்கு கொஞ்சம் டைம் வேணும்’ என்று கேட்டார். அவருடைய அந்த பதில் பாசிடிவ்வாக தெரிந்ததால் உடனே ‘ஐ லவ் யூ’ சொன்னேன். ஹேமா எந்த ரியாக்‌ஷனும் காண்பிக்காமல் அமைதியாக புறப்பட்டுவிட்டார்.

 இரண்டு நாள் கழித்து அவரே போன் பண்ணி காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் எங்கள் காதலுக்கு ஹேமா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். என் வீட்டுலே காதலுக்கு ஜே போட்டார்கள்.

நான் அப்போது சீரியலில் நடித்துக் கொண்டிருந்ததால் சென்னையில் தங்கியிருந்தேன். பதிவுத் திருமணம் என்றாலே ஒருவித பதட்டம் இருக்கும். ஆனால் நான் எந்தவித பதட்டமும் இல்லாமல்  திருமணத்துக்காக சென்னையிலிருந்து மதுரைக்கு கிளம்பிப் போனேன். ஹேமாவும் அவருடைய வீட்டிலிருந்து மதுரைக்கு கிளம்பி வந்தாங்க. என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஹேமாவை என்னுடைய பெரியம்மா வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்தார்கள். எங்கள் பதிவுத் திருமணத்தை நடத்தி வைத்த ஆபீஸர் மனதார எங்களை வாழ்த்தியதையும் மறக்க முடியாது. அதுக்கு காரணம், ரொம்ப நாளைக்குப் பிறகு பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணத்தை பார்க்க முடிந்தது என்றார்.

என்னுடைய திருமண விஷயத்தில் ஃப்ரெண்ட்ஸ் எப்படி உதவி செய்வார்களோ அதுபோல என்னுடைய அப்பா, அம்மா, அக்கா, அக்கா வீட்டுக்காரர் என்று குடும்பமே ஒன்று திரண்டு பதிவுத் திருமணம் செய்து வைத்தார்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம், எனக்கு மூன்று முறை திருமணம் நடந்தது.

முதல் முறை பதிவுத் திருமணம் நடக்கும்போதே அப்பா சொன்னது என்னன்னா சீக்கிரத்தில் உங்களுக்கு ஊரறிய கல்யாணம் செய்து வைக்கிறேன் என்பதுதான். திருமணமான ஒரு மாதத்துக்குப் பிறகு பெண் வீட்லே இருந்தும் பச்சைக்கொடி காட்டினார்கள். அவர்கள் சந்தோஷத்துக்காக பிள்ளையார் பட்டியில் உள்ள கோயிலில் எளிமையாக திருமணம் நடந்தது.

மூன்று மாதம் கழித்து அப்பா, தான் சொன்னபடியே ஊர் கூட்டி பத்திரிகை அடித்து, சொந்த பந்தங்களை அழைத்து அவர் சக்திக்கு ஏற்ப திருமணம் பண்ணிவைத்தார்.  இப்போ எங்க இரண்டு குடும்பங்களும்  எங்களுடைய வாழ்க்கை மீது அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். எங்களை வாழ்த்துகிறார்கள். மாமனாரும் என் அப்பா மாதிரி அன்பு காட்டுகிறார்.

கடவுள் புண்ணியத்துலே நல்ல குடும்பம் அமைந்துள்ளது. என்னுடைய திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்க காரணம் என் மனைவி. என்னுடைய மனைவியை முதலில் ஃப்ரெண்ட் ஸ்தானத்தில் வைத்துதான் பார்க்கிறேன். அப்புறம் தான் காதலி, மனைவி எல்லாமே. எங்கள் இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருக்கிறது. என் மனைவி எனக்கு முன்பே வேலையில் ஜாயின் பண்ணியிருந்ததால் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் அவரிடம் இருக்கிறது. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

காதலிக்கும் போது எதையும் எதிர்பார்க்காமல் காதலிக்க வேண்டும். எதிர்பார்ப்பு இல்லாத காதல் ஜெயிக்கும். ஒருவேளை நீங்கள் எதிர்பார்ப்பு உள்ளவராக இருந்தால் உங்கள் எதிர்பார்ப்பு அன்பாக மட்டுமே இருக்கணும். காதலிக்கும் போது பொன், பொருள், பணம் போன்றவைகளை எதிர்பார்க்காதீர். அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் காதல் திருமணத்தில் முடியும். அந்தத் திருமணம் நீடித்து நிலைக்கும்.

பணத்தைப் பார்த்து காதலித்து பண்ணும் திருமணம் ரொம்ப நாள் நிலைக்காது. அப்படி நிலைத்தாலும் அதில் நிம்மதியற்ற சூழல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.‘திருமணம்’ படத்தில் சேரன் சார் சொன்னது போல் திருமணத்துக்கு எது அத்தியாவசியத் தேவையோ அதைச் செய்யணும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்து மிச்சம் பிடித்து பொண்ணு மாப்பிள்ளையிடம் கொடுத்தால் அந்தப் பணம் அவர்கள் எதிர்காலத்துக்கு யூஸாகும். தேவையில்லாத செலவுகளை  தவிர்க்கலாம் என்பதுதான் என்னுடைய ஆலோசனை.

இப்போ திருமணங்களில் ஒரு கலாச்சாரம் உருவாகியிருக்கிறது. அதாவது கான்சப்ட் போட்டோகிராபி என்ற பெயரில் எக்கச்சக்கமா செலவு செய்து போட்டோ எடுக்கிறார்கள். கல்யாண மண்டபத்துக்குள் கிரேன், ஹெலிகேம் பயன்படுத்துகிறார்கள். கிரேன் பயன்பாடு மைதானம் போன்ற இடங்களில் நடக்கும் விசேஷங்களுக்கு பயன்படுத்துவது தான் சரியாக இருக்கும்.

பரந்த நிலப்பரப்பு போன்ற இடங்களை காண்பிக்க ஹெலிகேம் உதவும்.  இப்போது அப்படி இல்லை. மண்டபத்துக்குள் கணக்கில்லாமல் எல்.ஈ.டி. இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். மணமக்களை நேரில் வாழ்த்த வந்த பிறகு எதுக்கு டி.வி? தாலி கட்டும் அந்த தருணத்தை ஆனந்தத்தோடு கண்களால் கண்டு வாழ்த்துவது எவ்வளவு சந்தோஷமான விஷயம்?

சில திருமணங்களில் செண்டை மேளம் காது சவ்வு கிழியுமளவுக்கு ஓவராக வாசிக்கிறார்கள். காதுக்கு இனிய நம்ம ஊர் நாதஸ்வர இசை மறைந்துவிட்டது. எதுக்காக கெட்டி மேளம் அடிக்கிறார்கள். அந்தச் சமயத்தில் எல்லாருடைய பார்வையும் கவனமும் மணமக்கள் மீது குவிந்து வாழ்த்த வேண்டும் என்பதற்காக கெட்டி மேளம் இசைக்கப்படுகிறது. கலைக்கு மாநிலம், மொழி இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதுக்காக நம்முடைய பாரம்பரியத்தை தொலைத்தால் எப்படி?

நிறைய திருமணங்களில் செல்ஃபி பூத் வைக்கிறார்கள். சில இடங்களில் வீடியோ பைட் கேட்கிறார்கள். அந்த வீடியோவை லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்கணும் சொல்றாங்க. அந்த வீடியோ மூலமா வாழ்த்து சொல்ல சொல்றாங்க. கை குலுக்கி வாழ்த்தும் வாழ்த்து வேறு. பேஸ்புக் மூலம் வாழ்த்துவதெல்லாம் வெட்டி பந்தா என்று சொல்வதைத் தவிர வேறொன்றுமில்லை.

இவையெல்லாம் அடுத்தவர்களை கவர்வதற்காக மட்டுமே.சில வருடங்களுக்கு முன் கல்யாணம் லைவ்வாக இருக்கும். உறவுகள் எல்லாரும் ஓடி ஆடி வேலை செய்வதை பார்க்க முடியும். இப்போ பேக்கேஜ் சிஸ்டம் வந்துவிட்டதால் திருமண வீடுகளில் செயற்கைத்தனம் இருப்பதை பார்க்க முடிகிறது.

எனக்கு மூன்று முறை திரு மணம் நடந்திருந்தாலும் மூன்று முறையும் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வீண் ஆடம்பரங்களை தவிர்த்துவிட்டோம். திருமணம் மூலம் நியாயமான செலவுகளை நாம் செய்துதான் ஆகவேண்டும். அந்த வேலை செய்பவர்களுக்கு அதுதான் பிழைப்பு. அந்த உழைப்பாளிகளின் ஆசீர்வாதமும் வாழ்த்தும் மணமக்களுக்குத் தேவை. திருமணங்களில் வாழ்வும் வாழ்த்தும் தேவை.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)