ஆட்டோ சங்கருக்கு மனைவியாக நடித்தவர் இவர்தான்!



சினிமாவில் கறுப்பு நிற அழகிகள் காலம் கடந்தும், நிலைத்து பெயர் பெற்றதுண்டு. அப்படி புகழ் பெற்றவர்கள் என்று சரிதா, ஷோபா, ராதிகா, நந்திதாதாஸ் என்று பெரிய பட்டியலே போட முடியும். அந்த வரிசையில் இணையும் கனவோடு வந்திருப்பவர் சரண்யா ரவிச்சந்திரன்.

அண்மையில் வெளிவந்து, இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘ஆட்டோ சங்கர்’ வெப் சீரிஸில் இவர் ஆட்டோ சங்கரின் மனைவியாக நடித்திருக்கிறார். ஓவர் செக்ஸ் என்று இந்த சீரிஸைப் பற்றி கோடம்பாக்கத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். சரண்யாவிடம் இந்த சலசலப்புகள் குறித்துப் பேசினோம். வீடியோ ஜாக்கியாக பணிபுரிந்தவர் என்பதால் படபடவென்று பொரிந்து தள்ளுகிறார்.

“என்னைப் பார்க்கும் எல்லோருமே ‘ஆட்டோ சங்கர்’ வெப்சீரிஸ் படத்தில் நான் நடித்தது பற்றித்தான் கேட்கிறார்கள். அதில் சர்ச்சைக்குரிய வசனங்களும், காட்சிகளும் இருந்தன. நீங்கள் எப்படி நடித்தீர்கள் என்று சண்டைகூட போடுகிறார்கள். வெப்சீரிஸ் என்பது வேற பிளாட்ஃபார்ம். ஆங்கிலம், இந்தியில் எல்லாம் பார்த்திருந்தீர்கள் என்றால் இப்படியெல்லாம் யாரும் கேட்கமாட்டீர்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் நடித்த காட்சிகள், சர்ச்சைக்கு உட்படவில்லை. நான் ஆட்டோ சங்கரின் மனைவியாக நடித்தேன். நான் நடித்த பகுதி நாகரிகமாகவே இருக்கும். நான் எந்த ஆபாச வசனத்தையும் பேசி நடிக்க வில்லை” என்று தன்னிலை விளக்கத்தோடுதான் ஆரம்பித்தார்.

“உங்களைப் பற்றி....?”
‘‘எனக்கு சொந்த ஊர் திருச்சி. பி.எஸ்ஸி மைக்ரோபயாலஜி படித்து முடித்திருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு மீடியா உலகம் ஒரு நுழைவிடம் என்று தோன்றியது. ஒரு தனியார் டிவியில் சேர்ந்தேன். நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியதன் மூலம் ஏராளமானவர்களை பேட்டி எடுத்துள்ளேன்.

 அப்போதுதான் வரிசையாக குறும்பட வாய்ப்புகள் வந்தன. ஏராளமான குறும்படங்களில் நடித்தேன். கிட்டத்தட்ட நூறு குறும்படங்களில் நடித்திருக்கிறேன். நல்ல பெயர் கிடைத்தது. குறும்படங்களுக்கான சிறந்த நடிகைக்கான விருதினை பத்து முறைக்கும் மேல் பெற்றுள்ளேன்.”
“சினிமாவுக்கு வந்தது எப்படி?”

“குறும்படங்களுக்கு அடுத்த நிலை சினிமாதானே? முதலில் நான் நடித்த படம் ‘காதலும் கடந்து போகும்’. அதில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல் தான் வருவேன். அதன்பிறகு ‘இன்று நேற்று நாளை’ படம்.

டி.வி.க்கு அனுமதி கொடுத்த பெற்றோர் சினிமா என்றதும் ஒப்புக் கொள்ளவில்லை. சிரமப்பட்டு பிடிவாதம் பிடித்து, ஒன்றரை வருஷம் வீட்டுக்கே போகாமல் அடம்பிடித்துதான் நடிக்க அனுமதி வாங்கினேன். சினிமாவில் நடிக்க ஆர்வம் மட்டும் போதாது என்று இரண்டரை ஆண்டுகளில் ஆறு இடங்களில் நடிப்புப் பயிற்சி பெற்றேன்.

பி.ஆர்.ஓ., புரொடக்‌ஷன் மேனேஜர் என்று எனக்குத் தெரிந்தவர்களிடம் வாய்ப்புக்கு உதவி செய்யும்படி கேட்பேன். ஒரு சினிமா விழாவும் மிஸ் பண்ணாமல் அழையா விருந்தாளியாக ஆஜர் ஆவேன். என் ப்ரொஃபைல் படங்கள் இல்லாத கம்பெனியே இருக்காது. அந்த அளவுக்கு விடாமுயற்சிகள். தொடர் முயற்சிகள். அதற்குப் பலன் கிடைத்தது. சின்ன சின்ன வேடங்கள் வந்தன.”
“எவ்வளவு படங்கள் நடித்திருப்பீர்கள்?”

“இருபத்தைந்துக்கும் மேலே இருக்கும். ‘வட சென்னை’, ‘இறைவி’, ‘டூலெட்’, ‘றெக்க’, ‘விசிறி’, ‘கடுகு’, ‘ 96’ உட்பட ஏராளமான படங்களில் நடித்து முடித்துள்ளேன். நான் சொல்லிய படங்களில் என்னை அடையாளம் காண்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஏன்னா, அந்தப் படங்களில் கூட்டத்தில் வருவது போல, மூலையில் நிற்பது போல, தோழியாக, நர்ஸாக இப்படி எங்கேயாவதுதான் இருப்பேன். இப்போது என்னைத் தெரியாமல் போகலாம். ஆனால் ஒரு நாள் என்னுடைய நடிப்பு பேசப்படும். யார் இந்தப் பெண் என்று கேட்கவைப்பேன்.”
“இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?”

“ஜான் கிளாடி இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘பைரி’ படம் எனக்குப் பெரிய வாய்ப்பு என்பேன். அப்புறம் ‘வர்மா’, ‘ஜெயில்’ படங்களிலும் நடித்திருக்கிறேன்.”“ஆனால், ‘வர்மா’ பிரச்சினை ஆகியிருக்கிறதே?”

“ஆமாம். பாலா சார் எடுத்த ‘வர்மா’ வெளிவராது. பாலா சார் இயக்கத்தில் நடித்ததையும், அவர் அலுவலகத்துக்கு அழைத்துப் பாராட்டியதையும் என்னால் மறக்கவே முடியாது. ஒருநாள் அவர் அழைத்ததாக எனக்கு போன் வந்தது.

என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சர்யத்துடன் போன எனக்கு, பாலா சார் சொன்ன வார்த்தைகள் சினிமா மீது மேலும் நம்பிக்கையைக் கொடுத்தது. ‘உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று சொல்லிப் பாராட்டினார். அன்பளிப்பாக ஒரு பணமுடிப்பைக் கொடுத்தார். அதில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது. பாலா சார் என் மீது காண்பித்த அன்பு என்னை நெகிழ வைத்தது.”

“எதிர்காலம்?”

“இப்போது நான் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் பெரிய வேடங்கள் என்னைத் தேடி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு ஏற்பதான் எனக்குவரும் வாய்ப்புகளில் என்னுடைய திறமையை வெளிப்படுத்துகிறேன். கண்டிப்பாக ஒரு நாள் பெயர் சொல்லும் பாத்திரங்களில் நடிப்பேன். அப்படி நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.’’

- எஸ்