கீ



ஸ்மார்ட்போன் விபரீதம்!

கல்லூரி மாணவர் ஜீவா. நவீன தொலைத்தொடர்பு சாதனங்களை ஹாக்செய்வதில் கில்லாடி. தனக்குத் தெரிந்த வித்தை மூலம் பெண்களின் ரகசியத்தை அறிந்து அவர்களுடன் ஜாலியாக கடலை போடுகிறார். அந்த ரூட்டில் பத்திரிகை நிருபரான அனைகாவின் நட்பு கிடைக்கிறது. சிட்டியில் நடைபெறும் கொலைகளைக் கண்டுபிடிக்க ஜீவாவிடம் உதவி கேட்கிறார் அனைகா.

இதற்கிடையே, நிக்கி கல் ராணியைப் பார்த்ததும் காதல் வசப்படுகிறார் ஜீவா. காதலில் பிஸியாக இருப்பதால் அனைகாவுக்கு உதவ மறுப்பதோடு, ஹாக் செய்வதையும் விட்டுவிடுகிறார். இந்த நிலையில், மர்ம கும்பல் தங்களது தொழில்நுட்பம் மூலம் அனைகாவை கொலை செய்துவிடுவதோடு, ஜீவாவையும் கொலை செய்ய முயற்சிக்க, அப்போதுதான் அவருக்கு பொறி தட்டுகிறது.

அனைகா பற்றியும், அவர் சொன்ன அந்த மர்ம போன் கால் பற்றியும் தெரிந்து கொள்ள களத்தில் இறங்கும் ஜீவாவுக்கு பல அதிர்ச்சித் தகவல்கள் தெரியவர, அந்த மர்ம கும்பலை களை எடுக்க களத்தில் இறங்கிறார். அதில் வெற்றி பெறுகிறாரா,  மர்ம கும்பலின் நோக்கம் என்ன என்பது தான் இந்த ‘கீ’.

வழக்கம் போல் துருதுரு கேரக்டரில் தூள் கிளப்புகிறார் ஜீவா. நாயகிகளுக்கு பெரிதாக வேலை இல்லை. அழகுக்கு நிக்கி கல்ராணி, கவர்ச்சிக்கு அனைகாவும் இருக்கிறார்கள். சீனியர்களான ராஜேந்திரபிரசாத், சுஹாசினி ஆகியோர் சிறப்பு.

நண்பராக வரும் ஆர்.ஜே. பாலாஜி வழக்கமான நக்கல், நையாண்டி பண்ணி ஸ்கோர் பண்ணுகிறார். நடிப்பிலும் எல்.கே.ஜி.யிலிருந்து யு.கே.ஜி. போயிருக்கிறார். டபுள் மீனிங் டயலாக்கை தவிர்த்தால் மீண்டும் ஹீரோவாதற்கு டபுள் புரோமோஷன் கிடைக்க வாய்ப்பு இருக்கு. வில்லனாக வரும் கோவிந்த பத்மசூர்யா ஸ்மார்ட்டாக இருக்கிறார். கண்களிலேயே வில்லத்தனத்தைக் காண்பித்து மிரட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜனின் கேமரா கதைக்குத் தேவையான விறுவிறுப்பைக் கொடுத்துள்ளது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம். ‘காதோரம்’ என்ற பாடல் அருமை.

உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வரும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இண்டர்நெட் தொழில்நுட்பத்தில் எந்த அளவுக்கு வசதிகள் இருக்கிறதோ அதை விட பல மடங்கு ஆபத்தும் இருக்கிறது என்பதை ‘கீ’ மூலம் இளைஞர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குநர் காளீஸ்.