ஜென்டில்மேன் - மதுபாலா



டைட்டில்ஸ் டாக்-111

நான் எந்த மாதிரி எண்ணம் உள்ள பெண் என்பதை வெளிப்படுத்தினால்தான் நான் யாரை ஜென்டில்மேனாக பார்க்கிறேன் என்று சொல்ல முடியும். என்னுடைய கேரக்டர் எப்படி என்றால்  ஒருவரையும் நெகட்டிவ்வாக பார்க்க மாட்டேன். எல்லோரையும் பாசிட்டிவ் ஆங்கிளோட இது அவங்களோட நேச்சர், இது அவங்களோட டைப் என்றுதான் பார்ப்பேன்.

இவர் சொல்வது சரி, அவர் சொல்வது தவறு என்று அவசரப்பட்டு முடிவு எடுக்கமாட்டேன். ஆனால் இவர்களையும் தாண்டி என்னுடைய வாழ்க்கையில் சிலர் தங்கள் மனிதநேயத்தால் ஜென்டில்மேனாக தெரிகிறார்கள். அவர்களை ஜென்டில்மேன் என்று சொல்வதை விட தெய்வப்பிறவியாக நினைக்கிறேன்.

என்னை அதிகமாக இம்ப்ரஸ் பண்ணிய ஜென்டில்மேன்களில் ஒருவர் என்னுடைய தம்பி. என்னை விட ஆறு வயது இளையவர். உண்மையைச் சொல்
வதானால், என்னுடைய தம்பி மனிதநேயமிக்க நல்ல மனிதன்.

அவனுக்கு திருமணமானதும் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டான். திருமணத்துக்குப் பிறகு முதன்முறையாக இந்தியா வந்த போது என் தம்பி மனைவி என்னிடம்  சொன்னது... ‘‘உங்க தம்பி என்னை நல்லா பார்த்துக் கொள்கிறார். பல சமயங்களில் நான் செய்ய வேண்டிய வேலைகளை அவர் தான் செய்கிறார். பொதுவா மனைவி ஸ்தானத்தில் இருப்பவர் பெட் காப்பியோடு கணவனை தூக்கத்திலிருந்து எழுப்பவதை பார்த்துள்ளோம். ஆனால் என் வீட்டில் உங்க தம்பிதான் என்னை பெட் காப்பியோடு எழுப்புகிறார்’’ என்று சொல்லி தம்பி புராணம் பாடினார்.

இந்தியக் கலாச்சாரத்தில் பெண்கள்தான் ஆண்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற விஷயம் ஊறிப் போயுள்ளது. மனைவிக்கு பணிவிடையோ உதவி செய்வதோ தரக்குறைவான செயலோ அல்லது கேலி, கிண்டல் பண்ணி மட்டம் தட்டும் விஷயமோ இல்லை. ஜென்டில்மேன் ரேட்டிங்கில் முதல் இடம் என்னுடைய தம்பிக்கே.

அடுத்து என்னுடைய அப்பா. அமைதியானவர். அரசுத்துறையில் வேலை பார்த்தவர். நேர்மையானவராக இருந்தாலும் தன் அதிகாரத்தை வைத்து ஏராளமானவர்களுக்கு உதவி செய்திருக்கிறார். ஆனால் எந்தக் கட்டத்திலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணியதில்லை.  அப்பா, அம்மா தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுப்பார்கள்.

பிள்ளைகள் அந்த வயதில் அதை ஞாபகம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் நாம் பெரியவர்கள் ஆனதும் அவர்கள் சொல்லிக் கொடுத்த நல்ல பழக்க வழக்கங்கள் நம்மையும் அறியாமல் அதை வெளியே கொண்டு வந்துவிடும்.
எல்லாப் பெண்களுக்கும் அவர்களுடைய அப்பாதான் ரோல் மாடலாக இருப்பார்கள். அவர் போலவே நானும் நேர் கொண்ட பார்வையுடன் வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் அப்பா மனம் திறந்து சொன்னது  ‘என் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆசீர்வாதம் நீதான் ’ என்றார்.

என் வீட்டில் இன்னும் சில ஜென்டில்மேன்கள் இருக்கிறார்கள். என் வீட்டில் எதையும் பூட்டி வைக்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஒரு பொருளை நான் எங்கு வைத்தேனோ அது நான் திரும்பி வரும் வரை அதே இடத்தில் இருக்கும். என் ஊழியர்கள் பல வருடமாக என்னுடன் இருக்கிறார்கள். இருக்கிற வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்குச் சென்றதில்லை. எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை உண்டு. அவர்களுக்கு என் மீது நம்பிக்கை உண்டு. நான் உலகம் முழுதும் சுற்றி வருகிறேன். என் வீட்டை விட்டுவிட்டு என்னால் நிம்மதியாக வெளியே வர முடிகிறது என்றால் அதற்குக் காரணம் என்னுடய ஊழியர்கள். அவ்வளவு பேரும் ஜென்டில்மேன்களாக உயந்து நிற்கிறார்கள்.

சினிமாத் துறையிலும் என்னைக் கவர்ந்த ஜென்டில்மேன்கள் இருக்கிறார்கள். உண்மையை சொல்வதாக இருந்தால் என்னுடைய முதல் படம் ‘ரோஜா’ தொடங்கி சமீபத்தில் வெளியான ‘அக்னி தேவி’ வரை மணிரத்னம், அரவிந்த்சாமி போன்ற ஏராளமான ஜென்டில்மேன்களை சந்தித்துள்ளேன். இப்போ ‘காலேஜ் குமார்’ படம் பண்றேன். பிரபு சாருடன் நடிக்கிறேன். அவருடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் ‘ஜென்டில்மேன்’ என்று உச்சரிக்க வைக்கிறது.

ஜென்டில்மேன்களை உருவாக்குவதில் குடும்பத்துக்கு முக்கிய பங்கு இருக்கு. நிறைய வீடுகளில் ஆண் பிள்ளகள் படிப்பதற்காகவும் பெண் பிள்ளைகள் வீட்டு வேலை செய்வதற்காகவும் இருக்கிறார்கள் என்று நினைத்து வளர்க்கிறார்கள். இந்த மனப்பான்மை தவறு. இதில் மாற்றம் வேண்டும். இந்த விஷயத்தில் மொத்த சமூகமும் மாறணும். நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு என்ன சொல்லித் தருகிறோம் என்பது முக்கியம். பள்ளிக் கூடங்களில் சிலபஸ் என்னவோ அதைத்தான் சொல்லிக்கொடுப்பார்கள். அங்கு வாழ்க்கை நெறிமுறையை சொல்லித் தரமாட்டார்கள். முன்பு அப்படி சொல்லிக் கொடுத்த வாத்தியார்கள் இருந்தார்கள்.

தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது, வால் ஆட்டினா தோலை உரிச்சி எடுங்க என்று பெற்றோர் பிள்ளைகளை வளர்த்தெடுக்க ஆர்வம் காண்பித்தார்கள். இன்று ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க பிரம்பு எடுக்கவே தயங்குகிறார்கள். தப்பித்தவறி ஆசிரியர்கள் கண்டித்தால் மறுநாள் பள்ளிக்கூட வாசலில் பெரிய போராட்டம் வெடிக்கிறது.  அந்த வகையில் ஜென்டில்மேன்கள் உருவாவதை அவர்கள் குடும்ப சூழ்நிலை, மரபு என்று பல காரணிகள் தீர்மானிக்கிறது.

பெரிய குடும்பத்தில் பிறந்து கெட்டுப் போனவர்களும் இருக்கிறார்கள். அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து நட்சக்த்திரங்களாக மின்னுபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை ராணுவக் கண்டிப்புடன் சொல்லிதரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதே சமயம் செல்லம் கொஞ்ச வேண்டிய நேரத்தில் செல்லம் கொஞ்ச வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்கும் போது பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடப்பது லேசான காரியமாகிவிடும்.

மனிதாபிமானத்தை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதைப்பற்றிய விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும். மனிதர்களை கொடுமைப்படுத்துமளவுக்கு நம் மனம் எப்படி மாறியது என்று தெரியவில்லை. இரக்க குணம் எங்கே என்று தேட வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.
ஒட்டுமொத்த நாடே அதைப் பற்றி யோசிக்க வேண்டும். மனித நேயத்தை போற்ற வேண்டும். ஒரு தவறு செய்யும்போது அதற்கு என்ன தண்டனை என்று சட்டம் சொல்கிறது. என்னைப் பொறுத்தவரை அதற்கு தேவையே இருக்கக்கூடாது.

டெல்லி நிர்பயா தொடங்கி பொள்ளாச்சி, கோயமுத்தூர் என்று சமீப காலமாக மனதைக் கலங்கடிக்கும் பல செயல்கள் நடந்துள்ளன. இன்னும் சிலர் நாயை மாடியிலிருந்து தூக்கி வீசுகிறார்கள். எப்படி அவர்களால் பண்ண முடிகிறது என்று தெரியவில்லை. ஒரு உயிரைக் கொல்லத் துடிக்கும் அளவுக்கு வன்மம் எப்படி தலை தூக்குகிறது? இதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

வாழ்க்கையில் எதையும் பிரித்துப் பார்க்ககூடாது. ஆண், பெண் என்று பிரித்துப் பார்ப் பதால் தான் பிரச்சனை வருகிறது. இன்று பெண் பிள்ளைகள் வைத்துள்ள குடும்பத்தை கேட்டுப் பாருங்கள். அவர்கள் வலி அதிகமாக இருக்கும். பெண் பிள்ளையை பள்ளிக்கூடத்துக்கோ, கல்லூரிக்கோ, வேலைக்கோ அனுப்பிவிட்டு அவர்கள் அனுபவிக்கும் வலியையும் வேதனையையும் வார்த்தையால் விவரிக்க முடியாது.

ஏன்னா, ஒவ்வொரு பெண்ணின் மீதும் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கிறது. இன்றைய தேதி வரை பெண்கள் மீது தான் ஆசிட் ஊற்றப்படுகிறது. ஒரு பெண் மிகுந்த அச்சத்துடன் தான் வெளியே நடமாடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. காட்டில் கூட பயம் இல்லாமல் வாழ்ந்துவிடலாம். நாட்டில் வாழ்வதற்குதான் பெண்கள் அச்சப்படக்கூடிய சூழல் நிலவுகிறது.

சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களைவிட மனிதன் மோசமானவனோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாம் மனிதர்கள். நமக்கு மனிதநேயம் உண்டு. நம்மைப் பார்த்து நம் சக மனிதர்கள் பயப்படக்கூடாது. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு தேவை. நம் பிள்ளைகளை அறிவாளியாக மாற்றுவது எளிதான காரியம். சிறந்த பள்ளி அந்த வேலையைச் செய்துவிடும். ஆனால் ஜென்டில்மேனாக மாற்றுவதுதான் கடினம். முதலில் நம் வீட்டுப் பிள்ளைகளை ஜென்டில்மேன்களாக மாற்றுவோம். மனித நேயம் போற்றுவோம்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)