சினிமாவும் சமையலும் ஒண்ணு! ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோ ஜாலி கமெண்ட்!



ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கைவரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள்.
ராஜுமுருகனின் படங்களும், எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டியவர் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன். முதன்முறையாக இயக்குநராக  ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்கிற படைப்போடு இன்று வந்திருக்கிறார் சரவண ராஜேந்திரன்.

‘மெஹந்தி சர்க்கஸ்’, டிரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின்  கனத்தை ரசிகர்களின் மனதுக்குள் கடத்துகின்றன. இவ்வகையான படங்களைத் தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ‘ஸ்டூடியோ க்ரீன்’ ஞானவேல்ராஜா.

படத்துக்கு ராஜுமுருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்கமும் ஆகப்பெரும் பலம் என்கிறது படக்குழு. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.‘‘இந்தப் படத்தில் நடித்தது ஒரு சுகமான அனுபவம்.

ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலைதான். அக்கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அந்த அவலத்தைத்தான் இந்தப் படம்  பதிவு செய்துள்ளது.

இந்தப்படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன், இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியிடும் சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இத்தனை செளக்கிதார் போடுகிறேன் என்றால் இப்படம் பேசும் அரசியலும், படத்தில் இடம்பெற்றிருக்கும் என் கேரக்டரும் அப்படி’’ என்று கலகலப்பாக பேசினார் ஆர்ஜே விக்னேஷ்.

படத்துக்கு ஷான்ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இளையராஜாவின் இசைதான் இந்தப் படத்துக்கு தன்னை இசையமைக்கத் தூண்டியது என்று நெகிழ்ச்சியாக பேச்சை ஆரம்பித்தார்.“ராஜா சாரோட இசை தான் இந்தப்படத்திற்கு இன்புட். என்னைப்பொறுத்தவரைக்கும் நல்ல மியூசிக் என்பது நல்லா இருக்கிற மியூசிக் தான்.

இளையராஜா சாரின் இசை இன்னும் 50 வருடம் கழித்தாலும் அப்படியே இருக்கும். ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு விஷயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும் படமாக இந்தப் படம் இருக்கும். என் படத்தின் பாடல்களில் 50% உழைப்பு இயக்குநரின் உழைப்பு’’ என்றார்.

இயக்குநர் சரவண ராஜேந்திரனின் பால்ய சினேகிதர் பாடலாசிரியர் யுகபாரதி. பள்ளிப் பருவத்தில் தஞ்சை மண்ணில் இருவருமே சேர்ந்து உருண்டு, புரண்டு விளையாடிய நெருங்கிய நண்பர்கள். ஒன்றாகவேதான் சினிமாவுக்காக சென்னைக்கு பஸ் ஏறினார்கள்.

‘‘ஒரு மகிழ்ச்சியான நெகிழ்வான மனநிலையை இந்தப் படம் கொடுத்தது. உண்மையான உழைப்புக்கு ஏற்ற மாதிரி படம் வந்திருக்கிறது. ரொம்ப சின்ன வயசுலே எங்க ஊர் ஆற்றங்கரையில் நான், சரவண ராஜேந்திரன் எல்லாம் அரசியல், இலக்கியம் என்று பேசிக்கொண்டிருப்போம்.

அப்போது சரவண ராஜேந்திரன் சொன்னது ஞாபகம் இருக்கிறது. ராஜுமுருகன் கதை எழுதி நீ பாட்டெழுதி நான் படம் இயக்கணும் என்றார். அன்று விளையாட்டாகப் பேசியது இன்று நிஜமாகியுள்ளது. இந்தப்படம் தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும்’’ என்றார் யுகபாரதி.

படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது, ‘‘எல்லோரும் ஏன் சமையல் பிசினஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்றுதான். இந்தப் படத்தில் சினிமா ஜாம்பவான்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடமிருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்’’ என்றார்.

படத்தின் கதை வசனம் எழுதிய ராஜு முருகன் பேசும்போது, ‘‘இந்தப்படம் ரொம்ப எளிமையான, நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி வித்தியாசமாக இருக்கும். இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்துதான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்பு
கிறேன்’’ என்றார்.

‘‘சினிமாவில் என்னுடைய காத்திருப்பு அதிகம். அது பிளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் கிடைத்திருக்கிறது. இந்தப்படத்துக்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. நாயகன் ரங்கராஜ் ப்ரோவை முதன் முறை பார்க்கும் போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார்.

இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார். அவர் சின்னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கு, ரொம்ப பெரியாளா இருக்கிறாரே என்ற டவுட் அவருக்கும் இருந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது. ஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா என்று கூட  நண்பர்கள் மத்தியில் ஜாலியாக பேசுவோம்.

அவர் ‘சூப்பர் டீலக்ஸ்’ க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரு ட்யூன் கொடுப்பார்... ஒரே ட்யூன்தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநேரத்தில் பாட்டாக்கிக் கொடுப்பார். நாயகி சுவேதா திரிபாதி மிகப்பிரமாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து, விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பைக் கொடுத்துள்ளார்கள்.

இந்தப்படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்தபின் என்னை வரச்சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்னபிறகுதான் நான் உயிர்த்தெழுந்தேன்’’ என்று கண்களில் நன்றி மின்ன பேசி நிகழ்ச்சியை முடித்துவைத்தார் இயக்குநர் சரவண ராஜேந்திரன்.

- எஸ்ரா