GANGS OF மெட்ராஸ்



பெண் என்றால் பேயும் பயப்படும்!

சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பலால் தனது கணவனை இழந்த பெண், பழிக்குப் பழி வாங்குவதுதான் படத்தின் மையக்கரு.கல்லூரியில் படிக்கும் சக மாணவரான அசோக்கை நாயகி பிரியங்கா காதலிக்கிறார்.
இருவேறு மதத்தைச் சேர்ந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பை மீறி திருமணம் செய்து  கொள்கிறார்கள். போதை மருந்து கடத்தல்காரரான வேலுபிரபாகரனிடம் வேலைக்குச் சேரும் அசோக், ஒருக்கட்டத்தில் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்படுகிறார்.

அப்பாவியான தனது கணவரை கிரிமினல் என்று கூறி என்கவுண்டர் செய்த போலீஸையும் அதற்கு உடந்தையாக இருந்த கயவர்களையும் பழிவாங்கத் துடிக்கிறார் பிரியங்கா. அவருடைய அந்த முயற்சிக்கு உதவி செய்தது யார், பிரியங்காவின் திட்டம் நிறைவேறியதா என்பது  மீதிக் கதை.

இந்தப் படமும் மற்ற கேங்ஸ்டர் படம் போல் இருந்தாலும், அவற்றிலிருந்து இந்தப்படத்துக்கு உள்ள பெரிய வித்தியாசம், இந்தப்படம் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை.பெயருக்குத்தான் அசோக் நாயகன். மற்றபடி முழுப்படத்தையும் தூக்கிச் சுமப்பவர் பிரியங்கா ரூத்.

மென்மையே பெண்மையின் அடையாளமாக இருக்கையில், அதிரடியான முரட்டுத்தனத்தைத் காட்டும் பிரியங்கா, ஆண்களுக்கு நிகராக அடி வாங்குவது, அடிப்பது என்று ரொம்பவே உழைத்திருக்கிறார். லைஃப் டைம் கேரக்டர் என்பதாலேயே சிறப்பாக நடித்து லைக் வாங்குகிறார்.

மெயின் வில்லனாக வரும் வேலுபிரபாகரனை பீடிப் புகையை வைத்தே பகையை வளர்த்து பழி வாங்குவது சிறப்பு. எந்த வேடமாக இருந்தாலும், சிறப்பாகப் பண்ணி விடுவார் என்ற பெயரை இந்தப் படத்திலும் தக்க வைத்துள்ளார் டேனியல் பாலாஜி. ‘ஆடுகளம்’ நரேன், பகவதி பெருமாள், ஈ.ராமதாஸ் உட்பட மற்ற பாத்திரங்களும் சிறப்பு.

ஹரி டஃப் உசையாவின் இசையில் வரும் கல்லூரிப் பாடல் ரசிக்க வைக்கிறது. ஷியாமலங்கத்தின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. படம் முழுக்க சிவப்பு டோன் பயன்படுத்தி தன் பங்கிற்கு கலங்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே. தில்லை.

யார் அடிச்சாலும் திருப்பி அடிக்கும் சுபாவம் கொண்ட ஒரு பெண், கணவரின் கொலைக்கு பழிவாங்க கிளம்புவதை ராம்கோபால் வர்மா பாணியில் சொல்லி அசத்தி இருக்கிறார் இயக்குநர் சி.வி.குமார்.