வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன் வையாபுரி
டைட்டில்ஸ் டாக் 60
சொந்த ஊர் தேனி. ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால், வேலைன்னு வந்துட்டா அந்தத் தொழிலுக்கு நேர்மையா இருப்பேன். படிக்கும் காலத்திலேயே மாலை நேரத்தில் மெடிக்கல் ஷாப் வேலைக்குப் போவேன். சில காலம் ஒரு பரோட்டா கடையில் பில் போடும் வேலை பார்த்துள்ளேன்.
எங்கள் பரம்பரையில் யாருக்குமே சொந்த வீடு கிடையாது. என் தலைமுறையிலாவது சொந்த வீடு வாங்கி செட்டிலாக வேண்டும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவோடுதான் சென்னைக்கு வந்தேன். அப்போ கையில் மொத்தமே ஐம்பது ரூபாய்தான் இருந்தது. நாற்பது ரூபாய் டிக்கெட் போக மீதம் பத்து ரூபாய்தான் வெச்சிருந்தேன்.
ஏற்கனவே இயக்குநர் பாரதிராஜாவின் அப்பா, “என் மகனை போய்ப்பாரு, ஏதாவது ஒரு வேலை கொடுப்பான்” என்று சொல்லி சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தார். தேனியில் பாரதிராஜா வீடும் எங்கள் வீடும் அருகில் இருந்தது.
பாரதி ராஜாவைத் தவிர அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எங்கள் குடும்பத்துக்கு பழக்கம். கடிதத்துடன் பாரதிராஜா அலுவலகத்துக்கு போனேன். அங்கு போனபோது என்னை மாதிரியே பல பேர் கடிதங்களோடு கும்பல் கும்பலாக காத்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்தவர் ‘‘இது என்ன வேலை வாய்ப்பு நிறுவனமா? வேலையெல்லாம் இல்லை’’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். போகும்போது அவர் ஒரு ஐடியா சொன்னார். “சினிமா வாய்ப்பு தேடுவதாக இருந்தால் ஏதாவது ஒரு ஓட்டல் வேலைக்கு போ... சாப்பாடு, தங்கும் வசதி பிரச்சினை இருக்காது” என்றார். அவர் கொடுத்த ஐடியா வின்படி ஓட்டல் வேலையில் சேர்ந்தேன்.
எங்கள் சமுதாயத்துக்கும் அசைவத்துக்கும் ரொம்ப தூரம். ஆனால் மிலிட்டரி ஓட்டலிலும் நான் வேலை பார்த்துள்ளேன். ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டே லீவு சமயத்தில் சினிமா வாய்ப்புத் தேடினேன். கிடைத்த சம்பளத்தில் கே.கே.நகரில் ரூம் எடுத்து தங்கி வாய்ப்புத் தேடினேன். எவ்வளவு முயற்சி எடுத்தும் சினிமா வாய்ப்பு கிடைக்கலை. ஒரு கட்டத்தில் கல்யாண வேலைக்குப் போனேன்.
மாசத்துல நாலு நாள் கல்யாண வேலைக்கு போனால் கையில் கொஞ்சம் காசு நிற்கும். வாடகைக் பிரச்சினை இருக்காது. கல்யாண வேலை இல்லாத நாட்களில் சினிமா வாய்ப்புத் தேடினேன்.
அப்போது என்னுடன் கல்யாண வேலை பார்த்தவர்கள் பிற்காலத்தில் இயக்குநர்களாகவும், பாடலாசிரியர்களாகவும் உயந்திருக்கிறார்கள். பாடலாசிரியர் கலைக்குமார், ரைட்டர் பாலு, இயக்குநர் பாபுசிவன் அன்றைய காலகட்டத்தில் என்னுடன் வேலை பார்த்தவர்கள்தான். நாங்களெல்லாம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ இல்லையா?
நான் தங்கியிருந்த ரூமுக்கு அருகில் இயக்குநர் பாரதிராஜாவின் எடிட்டர் மோகன்ராஜாவின் அலுவலகம் இருந்தது. அவரிடம் என் சினிமா ஆசையைச் சொன்னபோது ‘‘சினிமாவில் நடிக்கணும்னா கொஞ்சம் கொழுக் மொழுக்னு இருக்கணும்.
நல்லா வெயிட் போடு. அதுவரை எங்கிட்ட வேலை பாரு. அங்க நிறைய இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் வருவார்கள். அந்த தொடர்பு மூலம் சினிமா வாய்ப்பு பெறலாம்’’ என்று சொன்னார். அவருடைய ஆலோசனை பிடித்துப் போகவே அங்கேயே வேலைக்கு சேர்ந்தேன். ரீல் சுத்தும் வேலையை கொடுத்தார்கள். ஒரு நாளைக்கு பத்து ரூபாய் பேட்டா. சாப்பாடு இலவசம்.
நான் வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் பாரதிராஜாவின் பட வேலைகள் நடந்து கொண்டிருந்தது. யாரிடம் வேலைக்கு சேர வேண்டும் என்று நினைத்தேனோ அவருடைய படத்திலேயே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணியபோது மனசுக்குள் சின்னதா ஒரு பூரிப்பு. என்னுடைய சுறுசுறுப்பைப் பார்த்துவிட்டு ஒரு நாள் பாரதிராஜா சார் என்னைப் பற்றி விசாரித்தார்.
நான் ஃப்ளாஷ்பேக் சமாச்சாரங்களை சொன்னேன். ‘‘பரவாயில்லை, யார்கிட்ட வேலை பார்க்கணும்னு நினைத்தாயோ அவர் படத்துலேயே உனக்கு வேலை கிடைத்திருக்கு’’ என்று சொல்லி என்னை தட்டிக் கொடுத்தார். அந்தத் தொடர்பு மூலம் பாரதிராஜா சார் நெருக்கமானார்.
‘கடல் பூக்கள்’, ‘கருத்தம்மா’ உள்பட சில படங்களில் அவருடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ‘மாணிக்கம்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற படங்கள் மூலம் நடிகராக பிரேக் கிடைத்தது.
2014க்குப் பிறகு சொல்லுமளவுக்கு பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டேன். சீரியல் பக்கம் போகலாம் என்றாலும் மீண்டும் சினிமாவில் கூப்பிடமாட்டாங்க என்ற பயம் இருந்தது. ஒரு கட்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அழைத்தார்கள். எதிர்க்கட்சிக்காரர்களை கேவலமாகத் திட்ட வேண்டுமென்று சொன்னார்கள். எனக்கு அப்படி பேசவராது என்றதுமே என்னை கழட்டி விட்டுவிட்டார்கள்.
அது மிகவும் சிரமமான நேரம். என் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் கட்டத்தில் இருந்ததால் கல்லூரி சேர்க்கை, மற்ற செலவுகள் என பெரிய தேவைகள் இருந்தது. அப்போதான் அந்த தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான ஷோவில் கலந்துக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அதில் கிடைச்ச பிரபலத்தால் மீண்டும் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவோம் என்று நினைத்தேன்.
ம்ஹூம். அந்த நிகழ்ச்சி மூலம் சம்பாதித்த பெரிய தொகைக்கும் ஜி.எஸ்.டி அது இதுன்னு வரிகளை பிடிச்சி அரசாங்கம் என்னை சோதனைக்கு உள்ளாக்கிடிச்சி. நான் சினிமாவில் லட்சங்களில் சம்பளம் வாங்கினதே இல்லை. இந்த டிவி ஷோவில் கிடைக்குதுன்னு நெனைச்சப்போ, இந்த வரிகள் என் கனவை கானலாக்கிடிச்சி.முன்னாடி வேலை தேடி அலைந்தேன். இப்போ வேஷம் தேடி அலையுறேன்.
எந்த வேலையா இருந்தாலும் வெள்ளைக்காரன் மாதிரி பக்காவா செஞ்சுடுவேன். தேடிக்கிட்டே இருக்கேன். ‘தேடல் உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்’னு பாட்டு இருக்கு. ருசி இருக்கோ இல்லையோ, பசி நிச்சயமா இருக்கு.
தொகுப்பு : சுரேஷ்ராஜா
(தொடரும்)
|