கூடி வாழ்ந்தால் கோடி நன்மை வீ.சேகர்



டைட்டில்ஸ் டாக் 41

கூட்டு வாழ்க்கை வீட்டுக்கும் வேண்டும் நாட்டுக்கும் வேண்டும். என்னுடைய படங்களின் டைட்டில் பழமொழியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். பழமொழி என்பது ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து அனுபவித்த முன்னோர்களின் முதுமொழி என்று சொல்லலாம்.

நான் கதாசிரியராக, இயக்குநராக சினிமாவுக்குள் வந்தபோது கதையை மையப்படுத்தி டைட்டில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

என்னுடைய பட டைட்டில் மக்களுடைய வாழ்க்கையில் தொடர்புடையதாகவும், அவர்கள் தினந்தோறும் காதில் கேட்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்று முடிவு பண்ணினேன். சிலர் தங்கள் படைப்புகளுக்கு சஸ்பென்ஸாக தலைப்பு வைப்பார்கள். சில தலைப்புகள் புதிராக இருக்கும்.

நான் இயக்கிய படங்களில் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ படம் முக்கியமான படம். இப்படியொரு தலைப்பு வைக்கக் காரணம், கூட்டு வாழ்க்கையின் நன்மைகளை நான் அறுவடை செய்திருக்கிறேன். அதேசமயம் என்னுடைய முன்னோர்கள் அதன் தீமையை அனுபவித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

என்னுடைய தாத்தாவுக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். என்னுடைய தாத்தா பண்ணையார். மிகப்பெரிய நிலச்சுவான்தார். முப்போகம் விளையக்கூடிய விவசாய பூமிக்கு சொந்தக்காரர். தன்னுடைய பிள்ளைகள் தன்னைப் போல் களத்து மேட்டில் கஷ்டப்பட வேண்டாமே என்ற எண்ணத்தில் பிள்ளைகளை நகரத்தில் பெரிய படிப்பு படிக்க வைத்தார்.

ஆனால் பிற்காலத்தில் நினைத்தது ஒன்று நடந்தது வேறு என்பது மாதிரி அமைந்துவிட்டது. என்னுடைய தாத்தாவின் வாரிசுகள் முழுமையாக வெஸ்டர்ன் லைஃபையும் வாழவில்லை, வில்லேஜ் லைஃபையும் வாழவில்லை, பிள்ளைகள் வளர்ந்து ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், என்னுடைய தாத்தா தனிமரம் போல் கடைசிக் காலத்தை கழித்தார். பல ஏக்கர் நிலமும் விவசாயம் இல்லாமல் பொட்டல் காடாக மாறிவிட்டது.பிள்ளைகளும் விவசாயத்தை விட்டு விலகி வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

என்னுடைய தாத்தா பிள்ளைகள் படித்து முடித்த பிறகு ஒரே குடும்பமாக கூடி வாழ்வார்கள் என்று நினைத்தார். அப்படி பிள்ளைகள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. படிக்கும் காலத்திலிருந்தே கூட்டு வாழ்க்கையின் மேன்மையைப் புரிய வைத்திருக்க வேண்டும். நாளடைவில் குடும்பம் நாலா பக்கமும் சிதைந்துவிட்டது. சுற்றுப்பட்டு கிராமங்களில் நெம்பர் ஓன் பண்ணையார் குடும்பமாக இருந்த எங்கள் தாத்தா குடும்பம் காலப்போக்கில் அதன் அடையாளத்தை இழக்க நேரிட்டது.

ஒரு கட்டத்தில் நான் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்தது. நகர வாழ்க்கைக்கு மாறினாலும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்று முடிவு பண்ணினேன். என்னுடைய தாய்மாமன் மகளை மணந்தேன். திருமணத்துக்குப் பிறகு என்னுடைய குடும்பம் வேறு, மாமனார் குடும்பம் வேறு என்று நினைக்கவில்லை. ஊரிலிருந்து உடன் பிறந்தவர்களை சென்னைக்கு அழைத்து வந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம்.

கூட்டுக் குடும்பமாக வாழவேண்டும் என்பதின் நோக்கம் என்ன என்று பார்த்தால், குடும்பத்தில் பெரியவர்களின் வழிகாட்டுதல், ஆலோசனை இருக்கும். அப்படி பெரியோர்களின் ஆலோசனை கேட்கும்போது குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல், உறவுகளைப் போற்றுதல், சிக்கன வாழ்க்கை என்று பல அனுகூலங்கள் இருக்கும்.

கூட்டுக் குடும்பம் என்றால் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடுத்தடுத்த வீடுகளில் இருக்கலாம். இரண்டு தெரு தள்ளி இருக்கலாம். ஒரே பகுதியில் வசிப்பதால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெற முடியும். இப்படி நெருங்கி வாழும் போது உறவுகள்  பலப்படுகிறது.

என்னுடைய வாழ்க்கையில் பெரியவர்களுக்கு நான் மரியாதை கொடுப்பேன். எந்தவொரு நல்ல காரியமாக இருந்தாலும் அவர்களின் ஆலோசனையும், ஆசீர்வாதமும் இல்லாமல் ஆரம்பிக்கமாட்டேன்.

நான் இன்று நாடறிந்த இயக்குநராக அறியப்படுகிறேன் என்றால் அது என் குடும்பத்தின் ஆதரவால்தான் நடந்தது. நான் டைரக்‌ஷன் பண்ண வந்த போது என்னுடைய குழந்தைகளை என் உறவுகளும், பெரியவர்களும் தான் பராமரித்தார்கள்.
என் கூட்டுக் குடும்ப அனுபவங்களை அடுத்த வாரமும் சொல்லுகிறேன்.

தொகுப்பு : சுரேஷ்ராஜா
தொடரும்...