இப்படை வெல்லும்



காமெடி வெல்லும்!

பஸ் டிரைவர்  ராதிகாவின்  மகன்  உதயநிதி, சென்னையில் ஐ.டி. துறையில் வேலைபார்த்து, பின்னர் வேலை யில்லாமல் இருக்கிறார். நாயகி மஞ்சிமா மோகனும், உதயநிதியும் காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் விஷயம்,போலீஸ் அதிகாரியாக இருக்கும்  மஞ்சிமா மோகனின்  அண்ணன்  ஆர்.கே.சுரேஷுக்கு தெரியவருகிறது.

அவர், இவர்களது  காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிரிக்கவும் முயற்சி செய்கிறார். இந்நிலையில், உதயநிதியும், மஞ்சிமா மோகனும், பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.

தீவிரவாதி டேனியல் பாலாஜி வட இந்தியாவில் வெடிகுண்டுகளை வைத்து விட்டு, சென்னையில் வெடிகுண்டு வைப்பதற்காக வருகிறார். எதிர்பாராத விதமாக, உதயநிதியையும், சூரியையும் சந்தித்து செல்கிறார்.

இவர்களின் சந்திப்பு சிசிடிவி கேமராவில் பதிவாகிவிட, டேனியல் பாலாஜிக்கும், உதயநிதிக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கருதி போலீஸ் அவர்களைக் கைது செய்கிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி,  உதயநிதியை என்கவுண்டர் செய்ய முயற்சிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். பிறகு என்ன நடக்கிறது என்பதை விறுவிறு திரைக்கதையில் விளக்குகிறார்கள்.

உதயநிதி வழக்கமான பாணியிலிருந்து மாறி, புதிய பொலிவுடன்  பளிச்சிடுகிறார். படம் முழுக்க ஓடி ஓடி உழைத்து நடித்திருக்கிறார். மஞ்சிமாவுடன் காதல் மன்னனாகவும், சூரியுடன் காமெடி அண்ணனாகவும் கலக்கியிருக்கிறார் . சூரியின் காமெடி படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது.

உதயநிதிக்கு அம்மாவாக, பஸ் டிரைவராக நடித்திருக்கிறார் ராதிகா. வழக்கமான நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வஞ்சக வில்லத்தனத்தை வஞ்சகமில்லாமல் அளித்திருக்கிறார். தீவிரவாதியாக வரும் டேனியல் பாலாஜியின் கண் அசைவுகளே மிரளவைக்கிறது.  இயக்குநர் கவுரவ் சிறப்புத் தோற்றத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார்.

இமான் இசையில் பாடல்கள்  காதுகளுக்கு நல்ல விருந்து. பின்னணி இசையிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்.  ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு  படத்தின் விறுவிறுப்புக்கு  உதவுகிறது. காதல், காமெடி, தீவிரவாதம், தாய்ப்பாசம் என கலந்துகட்டி கலகலப்பான படத்தை இயக்கியிருக்கிறார் கவுரவ்.