கவிஞர் சினேகனுடன் 200 பேர் ஆடும் நடனம்!



விஷால் கரங்களால் ‘எவனும் புத்தனில்லை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் லிரிக்கல் வீடியோ வெளியிட்ட கையோடு இசையமைப்பாளர் மரியா மனோகருடன் பின்னணி இசை சேர்க்கும் பணியில் இருந்தார் இயக்குநர் எஸ்.விஜயசேகரன். இயக்குநர்கள் சுந்தர்.சி, பிரபுசாலமோன் உள்பட ஏராளமான இயக்குநர்களுடன் சினிமா பயின்றவர்.

‘‘என்னுடைய முதல் படைப்பை எந்தவித சமரசமும் இல்லாமல் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். வெளி கம்பெனிக்கு படம் பண்ணினால் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் உருவாகும் என்பதால் சொந்தமாக தயாரித்து டைரக்‌ஷன் பண்ணலாம் என்று முடிவு செய்தேன்.

இந்தப் படத்தின் கதையை என்னுடைய நண்பர்களிடம் சொன்னேன். அவர்களுக்கு கதை பிடித்திருந்தது. என் மீது நம்பிக்கை வைத்து என்னுடைய நண்பர்கள் பாஸ்கரன், சுப்பிரமணியம், ஜோசப் ஜெய்சிங், கார்த்திகேயன், சூரியன் ஆகியோர் உதவிக்கரம் நீட்டினார்கள். இன்னும் சில நண்பர்கள் பெயர் வேண்டாம் என்று உதவி பண்ணினார்கள்.

நண்பர்களின் ஒத்துழைப்பால்தான் வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இப்போது உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.

இப்போதுதான் படத்தை ஆரம்பித்த மாதிரி இருக்கிறது. அதற்குள் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வரை நெருங்கிவந்துவிட்டோம். ரிலீஸுக்கான வேலைகள் நாலாபக்கமும் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது...’’ பிஸியான ஷெட்யூலுக்கிடையே நிறுத்தி நிதானமாக பேச ஆரம்பித்தார் எஸ்.விஜயசேகரன்.

“தலைப்பு எதிர்மறையா இருக்கே?”

“இன்றையக் காலகட்டத்தில் அடுத்த சந்ததி பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ, கலாச்சாரத்தைப் பற்றியோ எந்தவிதமான கொள்கையும் இல்லாமல், கோட்பாடுகளும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அது மனித இனம் மட்டுமே.

இந்த விஷயத்தைப் பொட்டில் அறைந்த மாதிரி சொல்லவேண்டும். அந்தக் கோபத்தின் ஒரு பகுதிதான் ‘எவனும் புத்தனில்லை’. மற்றபடி இது சென்டிமென்ட் பார்த்து வைத்த தலைப்பு கிடையாது. கதைக்கான தலைப்பு.”

“கதை?”

“தரை மட்டத்திலிருந்து சுமார் 7130 அடி உயரத்தில் உள்ள கிராமம் அது. ஆசியாவிலேயே மிக உயந்த இடத்தில் தேயிலை விளையும் பகுதி. அந்த கிராமத்தின் ஒரு முனை தமிழ்நாட்டைச் சேர்ந்தது. இன்னொரு முனை கேரளாவைச் சேர்ந்தது. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் அப்பாவி மக்களின் கதையை இதில் சொல்லியிருக்கிறேன்.

கல்விக்காக தினமும் நாற்பது, ஐம்பது கிலோ மீட்டர் தூரம் டிராவல் பண்ணும் மக்கள், நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் மலேஷியாவைச் சேர்ந்த சைபர் கிரைம் டீம், வளர்ச்சி மிகுந்த மாநகரமாக இருக்கும் சென்னையில் உள்ள சுயநல மனிதர்களின் அட்டகாசம் ஆகிய மூன்று புள்ளிகளை இணைக்கும்படி திரைக்கதை அமைத்திருக்கிறேன்.”“பெரிய பட்ஜெட் படத்தில் புதுமுகங்கள் நடிக்க என்ன காரணம்?”

“இது காதல் கதையாக இருந்தால் பெரிய ஹீரோவிடம் இரண்டு மணி நேரம் கதை சொல்லி என்னால் இம்ப்ரஸ் பண்ணியிருக்க முடியும். மலை கிராமத்து பையனாக காண்பிக்க எனக்கு புகழ் வெளிச்சம் படாத இளைஞன் தேவைப்பட்டார்.

மலை கிராமத்து இளைஞன் வேடத்தில் மக்களுக்கு பரிச்சயமான ஒரு நடிகரை நிறுத்தினால் அது சினிமாவாக மாறிவிடும். ரெகுலர் சினிமாவுக்கான ஃபீல் வந்துவிடும். அப்படியொரு ஃபீல் வரக்கூடாது என்பதற்காக புதுமுகத்தை நடிக்க வைத்தேன்.

மலை கிராமத்தில் உள்ள மக்களும் நடித்துள்ளார்கள். படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் யாரும் இல்லை.மலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞனாக நபிநந்தி. இந்தப் படத்துக்காகவே கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி, ஃபைட் மாஸ்டரை வைத்து சண்டைப் பயிற்சி என்று ஆறுமாதம் பயிற்சி கொடுத்தோம். இன்னொரு ஹீரோவான ஷரத் மெடிக்கல் ஸ்டூடண்ட்.

ஒரு முக்கியமான சண்டைக்காட்சியை கொடுங்கையூர் குப்பை குடோனில் படமாக்கினோம். பல நூறு ஏக்கரில் ஒரு மலை போல் குவிந்திருக்கும் குப்பை மேடுகளுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடத்துவது என்பது நமக்கு நாமே கேடு வரவழைப்பது மாதிரி. முழுக்க முழுக்க மீத்தேன் வாயு நிறைந்த பகுதி.

கீழே சின்ன சிகரெட் துண்டு வீழ்ந்தாலும் தீ பிடிக்கும் அபாயம் உள்ள பகுதி. அங்கு ஒரு காட்சி எடுத்தாலே போதும் என்ற மனநிலைக்கு யாருமே வந்துவிடுவார்கள். ஆனால் என்னுடைய ஹீரோக்கள் கொஞ்சமும் அலுக்காமல், ‘ஒன் மோர் வேணுமா?’ என்று கேட்டு அசரடித்தார்கள்.”

“ஹீரோயின்?”

“நிகாரிகா, சுவாசிகான்னு இரட்டைக்குழல் துப்பாக்கிகள். சுவாசிகா மலை கிராமத்தைச் சேர்ந்த பெண். ‘சாட்டை’ல நடிப்புல பிச்சி உதறின பொண்ணு. நிகாரிகா கிராமத்துல இருந்து டவுன்ல செட்டிலான பெண். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்பதால் க்ளாமர் இருக்காது.”

“கவிஞர் சினேகன்?”

“இந்தப் படத்தில் எல்லா பாடல்களையும் சினேகன் எழுதியிருக்கிறார். அவரே சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவரிடம் ஒரு பாடலுக்கு நடனமாட முடியுமா என்று தயக்கமாகத்தான் கேட்டோம்.

உடனே ஒப்புக்கொண்டார். ‘எதுவும் தப்பில்லை எவனும் புத்தனில்லை’ என்ற அந்தப் பாடலை மலேஷியாவில் உள்ள மிகப் பெரிய பப்புலேயும், சென்னையில் பிரம்மாண்டமாக செட் போட்டும் படமாக்கினோம்.

சினேகனுடன் சேர்ந்து சிங்கப்பூர், மலேஷியா உள்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த 200 டான்ஸர்ஸ் நடனமாடியிருக்கிறார்கள். எல்.ஆர்.ஈஸ்வரி, மலேஷியா பாப் சிங்கர்ஸ் பாடியுள்ள அந்தப் பாடல் இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாக பரவி வருகிறது.”

“மற்ற நட்சத்திரங்கள்?”

“வேல. ராமமூர்த்தி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, ‘பசங்க’ சிவகுமார், பாஸ்கரன், கார்த்திகேயன்னு வெயிட்டா நட்சத்திரப் பட்டாளம் இருக்காங்க. நாங்கள் படப்பிடிப்பு நடத்திய மலை கிராமத்தில் சைக்கிள் உள்பட எந்த வாகனமும் போக முடியாது. கோவேறு கழுதையில்தான் ஜிம்மி ஜிப் போன்ற படப்பிடிப்புக் கருவிகளை எடுத்துச் சென்றோம்.

ஒரு கழுதை வாடகை 500 ரூபாய் செலவாகும். ஒரு எண்ணெய் பாக்கெட்டை மிஸ் பண்ணிவிட்டால் கூட மறுபடியும் கீழே வந்து வாங்கிச் சென்றால் 1200 ரூபாய் செலவாகும். பல சமயங்களில் விலங்குகள் மத்தியில் குழந்தைகளோடு படப்பிடிப்பு நடந்தது. இவ்வளவு ரிஸ்க் தேவையா என்ற கேள்வி இருக்கும்.

சினிமாவை நேசிக்கிறவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. இதில் நடித்த மூத்த நடிகர்கள் பலருக்கு முழுக் கதை தெரியாது. என் மீது நம்பிக்கை வைத்து நடித்துக் கொடுத்தார்கள். இது அறிமுக இயக்குநரான எனக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன்.”

“டெக்னீஷியன்ஸ்?”

“இயக்குநர் சுரேஷ்குமாரும் நானும் சேர்ந்து டயலாக் எழுதியிருக்கிறோம். எஸ்.ஆர்.கதிரின் உதவியாளர் ராஜா சி.சேகர், சுகுமாரின் உதவியாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் மரியா மனோகர் என்னுடைய நீண்டநாள் நண்பர் என்பதால் படம் துவங்குவதற்கு முன்பே அவர்தான் மியூசிக் என்று முடிவு பண்ணிவிட்டேன். படத்துல ஐம்பதுக்கும் மேற்பட்ட லொகேஷன்ஸ் இருக்கிறது. ஒவ்வொரு லொகேஷனுக்கு ஏற்ப வித்தியாசமான இசை தேவைப்பட்டது.

விஷுவல்ஸ் எப்படி காட்சிக்கு காட்சி மாறுதோ அதே மாதிரி பின்னணி இசைக்கும் வித்தியாசமான டோன்ஸ் தேவைப்பட்டது. ஒரு படத்துக்கு முப்பது நாள் ரீ-ரிக்கார்டிங் என்பது இப்போது பெரிய விஷயம். இந்தப் படத்துக்காக மரியா, இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தார். அவருடைய கடின உழைப்பு வியப்பாக இருந்தது. நான் எதிர்பார்த்ததைவிட 200 சதவீதம் ரிசல்ட் கொடுத்திருக்கிறார்.”

“உங்களைப் பத்தி சொல்லவேயில்லையே?”

“ஊர் மதுரை பக்கத்துல மேலூர். கொஞ்சநாள் தஞ்சாவூரிலும் இருந்துள்ளேன். நான் சினிமாவுக்கு வருவது சுத்தமா வீட்ல  பிடிக்கலை. எதிர்ப்புகளை மீறித்தான் வந்தேன். ‘நம்ம அண்ணாச்சி’ தளபதி, சுந்தர்.சி, ஆர்.பாலு, பிரபுசாலமன் ஆகிய இயக்குநர்களிடம் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

அந்த அனுபவம்தான் என்னை பெரிய பட்ஜெட், ஏராளமான நட்சத்திரங்களை வைத்து இயக்குமளவுக்கு தயார்படுத்தியது. நான் ஏராளமான இயக்குநர்களிடம் வேலை பார்த்திருந்தாலும் என் குருநாதராக பிரபு சாலமன் சாரைத்தான் சொல்வேன்.

அப்படிச் சொல்வதிலும் எனக்கு தயக்கம் இருக்கிறது. என்னுடைய குரு இவர் தான் என்பதை விட என் சிஷ்யன் இவர் என்று என்னுடைய இயக்குநர்கள் சொல்ல வேண்டும். அப்படி பேர் சொல்லும் இயக்குநராக பெயர் எடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

- சுரேஷ்ராஜா