இளையராஜாவின் பாராட்டுதான் எனக்கு ஆக்சிஜன்!



சமீபத்தில் திரைக்கு வந்த ‘களத்தூர் கிராமம்’ படத்தின் மூலம், தமிழிலுள்ள யதார்த்தமான இயக்குநர்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார், புதியவர் சரண் கே.அத்வைதன். அவரது முதல் படைப்பை  இளையராஜாவே வியந்து பாராட்டியிருக்கிறார். சரண் கே.அத்வைதனோடு பேசினோம்.

“உங்க பின்னணி?”

“திருக்கோயிலூருக்குப் பக்கத்திலுள்ளசித்தலிங்க மடம் சி.மையூர் எனக்கு சொந்த ஊர். சின்ன வயசுல இருந்து இளையராஜாபாட்டு கேட்டுதான் சினிமா ஆசையே வந்தது. யாரைப் பார்த்து வியந்து ரசிச்சேனோ, அவரே இன்னைக்கு என் முதல் படத்துக்கு மியூசிக் பண்ணியிருக்காருன்னா, எவ்வளவு பெரிய கொடுப்பினை?

பிளஸ் டூ வரைபடிச்சேன். அதுக்குப் பிறகு சினிமா ஆசை விஸ்வரூபம் எடுக்கவே, அந்த ஆர்வத்துக்கு அணை போடாம, நேரா சென்னைக்கு வந்து முயற்சி பண்ணேன்.சினிமாங்கிற இரும்புக் கோட்டையோட கதவு உடனே திறந்துடாதே.

ஒவ்வொரு டைரக்டர்கிட்டேயும் போய் வாய்ப்பு கேட்டேன். ‘சின்னத்தாயி’, ‘மாமியார் வீடு’ படங்களை இயக்கிய எஸ்.கணேசராஜின் அறிமுகம் கிடைச்சது. அப்ப அவர்நெப்போலியன், சங்கீதா நடிச்ச ‘பரணி’ படத்தை இயக்க ஆயத்தமாகிட்டு இருந்தார்.அவரிடம் இணை இயக்குநரா ஆனேன்.

ஆனா, சில காரணங்களால் அந்தப் படம் இன்னும் ரிலீசாகலை. கணேசராஜும் இப்ப இல்லை. அதுக்குப் பிறகு நிறைய கதை எழுதஆரம்பிச்சேன். ஒரு நாவலை அடிப்படையா வெச்சு, மம்மூட்டிகிட்ட ஒரு கதை சொன்னேன்.

அது அவருக்கு ரொம்ப  பிடிச்சிருந்தது. ரெண்டு, மூணு புரொடியூசர்கள் கிட்ட சொல்லிப் பார்த்தார். ஊஹூம், எதுவும் வேலைக்கு ஆகலை.ரொம்ப நொடிச்சுப் போயிட்டேன். இது நடந்தது 2004ல்.

பிறகு இதே கதையைகொஞ்சம் மாற்றி, நெப்போலியன் நடிக்கிறதுக்காக சொன்னேன். அவரும் நடிக்கிறதா சொன்னார். ஆனா, சரியான புரொடியூசர் கிடைக்கலை. அதுக்குப் பிறகு நிறைய இடைவெளி ஏற்பட்டு, ரொம்பவும் கஷ்டப்பட்டேன். ஆனா, முயற்சி பண்றதை மட்டும்விடலை. அதுக்கான பலன் ‘களத்தூர் கிராமம்’ மூலம் கிடைச்சது.

இளையராஜா கிட்ட போனேன். முழுப் படத்தையும் பார்த்தார். அதுக்குப் பிறகுதான் பாட்டுகள்போட்டார். இது ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு ரொம்ப முக்கியமான படம்னு சொன்ன அவர், அதிக நாட்கள் எடுத்துக்கிட்டு, ரொம்ப சிறப்பா பேக்கிரவுண்ட் மியூசிக் பண்ணார்.”

“உங்க படத்துக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?”

“படம் ரிலீசாகி நல்லா போய்க்கிட்டிருக்கு. ஆனா, தியேட்டர்களுக்கு எதிர்பார்த்த கூட்டம் வரலை. காரணம், ஜி.எஸ்.டியும், கேளிக்கை வரியும்தான். எட்டயபுரத்துக்கும், விளாத்திகுளத்துக்கும் இடைப்பட்ட டி.புதுப்பட்டியில், கரிமூட்டம் போட்டு பிழைப்பு நடத்துறது வாடிக்கை.

அந்த மக்களோட வாழ்க்கையை திரையில் யதார்த்தமா பதிவுபண்ணியிருக்கேன்னு எல்லாரும் பாராட்டறாங்க. அதைக் கேட்டு ரொம்ப சந்தோஷமாஇருக்கு” என்கிற சரண் கே.அத்வைதனின் மனைவி பானு, மகன் சஞ்சய்.

- தேவராஜ்