ஒரே டிக்கெட்டில் 6 படம்!



வித்தியாசமான படைப்புகள் வரும்போது அதை தமிழ் ரசிகர்கள் புறம் தள்ளுவதில்லை. அந்த நம்பிக்கையில் வெளிவரும் வித்தியாசமான நல்ல முயற்சிதான் ‘6 அத்தியாயம்’. இந்தப் படத்தை ஆஸ்கி மீடியா ஹட் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டு வந்த நிலையில் ‘6 அத்தியாயம்’ முற்றிலும் வேறு வகையான படம்.முதல் முறையாக உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய்க் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹிட் ட்ரெண்டான ஹாரர் பாணியில் அமைந்திருப்பது படத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும்விதமாக உள்ளது.

 பிரபல எழுத்தாளரும், ‘தொட்டால் தொடரும்’ பட இயக்குநருமான கேபிள் சங்கர் இதில் ஒரு அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான தர் வெங்கடேசன் ஆகியோர் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

‘ஏப்ரல் மாதத்திலே’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா ஆகியோர் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாயங்களுக்கும், பிரபல புகைப்படக் கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

தாஜ் நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ்குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை மா.கா.ப ஆனந்த், கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

“இதழ்களில் சிறு சிறு துணுக்குகள் எழுதியது என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. 12 ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்தவன். சினிமா மீதான காதலால் மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன் .

கேபிள் சங்கருடன் பேசியபோது குறும்படம் எடுக்க ஐடியா கொடுத்தார். பின்னர் அது அந்தாலஜி படமாக மாறியது. 6 வெவ்வேறு வகையான குறும்படங்களை இணைப்பது என்றும் அந்த ஆறு படங்களையும் ஆறு டீம்களை வைத்து எடுப்பது என்றும் திட்டமிட்டோம். அனைத்தையும் ஒரு அமானுஷ்ய விஷயத்தால் இணைப்பது என்று முடிவானது.

ஒவ்வொரு அத்தியாயமும் க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியோடு நிற்கும். எல்லா அத்தியாயங்களுக்குமான ஒரே க்ளைமாக்ஸாக கடைசியில் முடியும். இவர்களில் கேபிள் சங்கர் தவிர மற்ற அனைவருமே அறிமுக இயக்குநர்கள்.

இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்ததை விட கலர் கரெக்‌ஷன் செய்தது தான் பெரிய சவால். வெவ்வேறு ஒளிப்பதிவுகளை ஒரே படமாக்குவது என்பது எவ்வளவு சிரமம் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் என் கதையின் ஹீரோ ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார்தான்’’ என்கிறார் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன்.

  இயக்குநர் கேபிள் சங்கரிடம் கேட்டபோது, “என்னுடைய படத்தில் சிறந்த இயக்குநரான எஸ்.எஸ் ஸ்டான்லியை இயக்கியது மகிழ்ச்சி. என்னுடைய முதல் பட ஹீரோ தமன் குமார், எனது ஒளிப்பதிவாளர் சி.ஜே. ராஜ்குமார் இருவருமே இதில் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்தப் படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே சம்பளத்தை எதிர்பார்க்காமல் ஒரு வாய்ப்பாக எண்ணி பணிபுரிந்தனர். ஒரு பாடலுக்கு ‘விக்ரம் வேதா’ சி.எஸ். சாம் இசையமைத்திருக்கிறார். முதலில் டான்ஸ் பண்ணி வீடியோ எடுத்து பின்னர் மனிதர்களை அனிமேஷன்களாக மாற்றினோம். இந்த அனிமேஷன் பாடல் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்’’ என்றார்.

  “எனது நீண்டகால போராட்டத்துக்கு பேய் தான் உதவி செய்து வெற்றி பெற வைத்திருக்கிறது. எனக்குக் கிடைத்த ஒளிப்பதிவாளர் பொன்.காசிராஜன், ஹீரோ கிஷோர், இசையமைப்பாளர் மூவரும் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்தார்கள். மற்றபடி நான் பேசமாட்டேன். படம்தான் பேச வேண்டும்’’ என்கிறார் இயக்குநர் அஜயன்பாலா.

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பார்த்திபன், சேரன், ஏ.வெங்கடேஷ், அறிவழகன், வெற்றிமாறன், மீரா கதிரவன், ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

 “கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன் இருவருக்கும் நன்றி. ஒரே படத்தில் 6 டீம்களை அறிமுகப்படுத்தியிருப்பதற்குத்தான் அந்த நன்றி. அறுபது பேருக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

இதுபோன்ற முயற்சிகள் நிறைய வரவேண்டும். இதுதான் நல்ல மாற்றம். புதிய இயக்குநர்கள் எல்லோருக்கும் ஹீரோக்களை நினைத்து பயம் இருக்கிறது. ஆனால் விரைவில் அவர்களுக்கு நல்ல காலம் வரஇருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும்.

தியேட்டர்களை விட வீடுகளுக்குள் நம் படங்கள் உள்ளே செல்லும். அப்போது இந்த இளைஞர்களுக்குத் தான் எதிர்காலம். இனி சினிமாவை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. இணையம் அதற்கான பெரிய ப்ளாட்ஃபார்மாக மாறும்’’ என்று பேசினார் சேரன்.

“என்னை வழி நடத்திய அஜயன்பாலா இயக்குநர் ஆகியிருக்கிறார். கேபிள் சங்கர் சினிமா வியாபாரத்தைப் பற்றி எழுதியவர். ரசிகர்களின் கணக்கும் நம் கணக்கும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தால்தான் வெற்றியைப்  பார்க்க  வேண்டும்.

ரசிகர்கள் என்று பொதுவாக சொல்கிறோம். ஆனால் ரசிகர்களில் வெவ்வேறு வகையினர் உண்டு. ஆனால் இன்று மூன்றே நாளில் படத்தின் ஆயுள் முடிந்துவிடுகிறது. இனி சினிமாவைத் தேடி ரசிகன் வரமாட்டான். அவனைத் தேடி நாம்தான் செல்லவேண்டும். சினிமாவுக்கான இன்னொரு தளமாக இணையம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

என் படம் ரிலீஸ் தள்ளிப்போனபோது எனக்காக பார்த்திபன் குரல் கொடுத்திருந்தார். அது எனக்கு பெரிய ஆறுதல் தந்தது. பார்த்திபன் அவர்களுக்கு நன்றி’’ என்று ‘விழித்திரு’ மீரா கதிரவன் நெகிழ்ச்சியாகப் பேசினார்.“இந்தப் படம் பற்றி கேட்கும்போதே சுவாரஸ்யமாக இருந்தது. ஷங்கர் சாரிடம் வேலை பார்த்தாலும் மற்ற இயக்குநர்களிடமும் ஒவ்வொன்றாக ஏகலைவனாக கற்றிருக்கிறேன். படத்தை வீடுகளுக்கு கொண்டு செல்வது இனி மிக அவசியம். இந்தப் படம் அதை செய்யும்’’ என்றார் அறிவழகன்.

“இந்தப் படம்தான் எதிர்கால சினிமா. டீம் டீமாக சேர்ந்து படம் பண்ணுவது இனி அதிகரிக்கும். இந்தப் படம் அதற்கு தொடக்கமாக அமையும். மாஸ் ஹீரோவுக்கு நிகராக பேய் இந்தப் படத்தில் இருக்கிறது. அது நிச்சயம் ஹிட்டைத் தரும்’’ என்று கணித்தார் ஏ.வெங்கடேஷ்.
விழாவில் பார்த்திபன் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. “ஆறு பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை.

இங்கே இரண்டு பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது ஆறு பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்தக் கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஷயம் உள்ளவர்களைப் பார்த்தால்தான் சின்ன மிரட்சி ஏற்படும். அப்படி அஜயன்பாலாவைப் பார்த்து மிரட்சி அடைந்திருக்கிறேன்.

தி.நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயம் அப்படி ஒரு படமாக அமையும்’’ என்றார் பார்த்திபன்.

“இந்த மாதிரியான முயற்சிகள் உலகம் முழுக்கவே நிகழ்ந்திருக்கின்றன. தமிழிலும் மிகச்சில நடந்தன. இந்த முயற்சி நாம் ஊக்குவிக்க வேண்டியது. நாங்கள் முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. இது மிகவும் சிரமமான வேலை. எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் பேயை கையில் எடுத்திருப்பது வியாபாரத்துக்கு எளிதாக இருக்கும். இந்த டீம் மீது நம்பிக்கை உள்ளது’’ என்றார் வெற்றிமாறன்.

- சுரேஷ்ராஜா