பழக பழக பலாப்பழம்! விஜய்சேதுபதி குறித்து மாதவன்



அந்த ‘அலைபாயுதே’ நாட்களில் தமிழ் இளம்பெண்களை அலைபாய வைத்த அதே மாதவன். ‘எப்படி இப்பவும் அப்படியே இருக்காரு?’ என்று இன்றும் வசீகரிக்கும் மாதவனுடன் ஒரு கலகல சந்திப்பு....

“மறுபடியும் ஃபுல் ஸ்விங்குலே ஒரு ரவுண்டு அடிக்கறீங்க! ‘விக்ரம் வேதா’வில் விஜய சேதுபதியுடன் நடித்த அனுபவம்?”
“ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விக்ரமாதித்யனும் இருக்கிறான், வேதாளமும் இருக்கிறது. எது எப்போ வெளிப்படும் என்பது கதை.

எனக்கு என்கவுன்டர் ஆபீசர் ரோல். விஜய சேதுபதி தாதாவாக வருகிறார். படப்பிடிப்பில்தான் விஜய சேதுபதியை நேரில் சந்தித்தேன். தாடி, மீசையுடன் முரட்டு ஆசாமியாக அவரது தோற்றத்தைப் பார்த்ததும் கொஞ்சம் மிரண்டு போய்விட்டேன். பழக பழக அவர் ஒரு பலாப்பழம் என்பதை உணர்ந்தேன்.

அப்படியொரு கனிவான மனிதன். தம்மில் ஆரம்பித்தது எங்கள் நட்பு. தம்மடிக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றினால், நான் அவரை கம்பெனிக்கு அழைப்பேன். அவருக்குத் தோன்றினால், என்னைக் கூப்பிடுவார். முதலில் அவரைச் சாதாரணமாகவே நினைத்தேன். ‘ஆக்ஷன்’ என்று சொன்னவுடன் அந்த மனுஷன் எடுக்கும் அவதாரங்களைப்பார்த்து பயம் என்னைத் தொற்றிக்கொண்டது.

இவருடன் போட்டிபோட்டு எப்படி நடிக்கப் போகிறோம் என்கிற கவலை வந்துவிட்டது. நான் களத்தில் இறங்கியதும், அதே பயம் அவருக்கும் வந்ததாகச் சொன்னார். செட்டில் இருப்பவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்குமளவுக்கு சத்தமாக சிரித்து வைத்தோம்.”
“இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி?”

“நான் பொதுவாக இரண்டு டைரக்டர்ஸ் படத்துல நடிக்கிறது இல்ல. அது நமக்கு செட்டாகாது. அதுவும் இவங்க ரெண்டு பேரும் புருஷன்  பொண்டாட்டி. ஒரு ஹெஸிடேசனோடதான் போனேன். அவங்க ரெண்டு பேருக்குள்ள எங்கியாவது   ஒரு எடத்துல சண்டை வராதான்னு உன்னிப்பா பாத்துக்கிட்டிருப்பேன். நோ சான்ஸ். ஒருமித்த கருத்தோட, அதுவும் சினிமாவுல இப்படியொரு ஜோடியை பாக்கறது அபூர்வம்.”
“இரண்டு ஹீரோக்கள் இருக்கும் செட்டில் ஈகோவுக்கு வாய்ப்பு இருக்கிறதே?”

“அவங்கவங்க வேலைய அவங்கவங்க கரெக்ட்டா பாத்துக்கிட்டா, எந்த ஈகோவுக்கும் இடமில்லை. விஜய சேதுபதி  கிடைக்கிற இடத்துல உட்கார்ந்துக்குவார். சில மணி நேரங்கள் ஸ்டூலில், அதாவது முதுகே இல்லாத நாற்காலியில் உட்கார்ந்து  மற்றவர்கள் நடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். நான் அவரை ஆச்சர்யமாகப் பார்ப்பேன்.”

“அவரிடம் கற்றுக்கொண்டது?”
“ரசிகர்களுடன் நேரடியாக பழகும் அவரது பழக்கம் எனக்கு பாடம் கற்றுத்தந்தது. நான் படப்பிடிப்பு முடிந்தால் நேராக வீட்டுக்குப் போய்விடுவேன். அவர் அப்படியல்ல, அங்கு காத்திருக்கும் ரசிகர்களோடு பேசுகிறார். போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார். ரசிகர்கள் அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது, நமக்கு ஏன் இப்படித் தோன்றவில்லை என்று நினைத்துக்கொண்டேன்.  உண்மையாகவே நான் பொறாமைப்பட்டேன்.அது உணர்வு பூர்வமாக வரவேண்டும். அவர், கிராமத்து மண்வாசனையோடு வந்தவர் என்பதால் அந்த உணர்வு இயல்பாகவே வருகிறது.”

“ஆனால், அவரைவிட உங்களுக்குத்தானே பெண் ரசிகர்கள் அதிகம்?”
“அது உண்மைதான். 17 வருடங்களாக இப்படியொரு ஆச்சர்யம் நடப்பது ஒருவகையில் பெருமையாகவே இருக்கிறது. ‘இவனோட பொண்ணு வயசுல உள்ளவங்க எல்லாம் இவனுக்கு ரசிகர்களா இருக்காங்கப்பா’ என்று நண்பர்கள் கிண்டல் பண்ணும் அளவுக்கு இருப்பது உண்மைதான்.”
“கமல், அமிதாப்புடன் நடித்த நீங்கள் விஜய சேதுபதியுடன் நடித்தபோது என்ன உணர்ந்தீர்கள்?”

“யாருடன் நடித்தாலும், நமது திறமையை எப்படியாவது வெளிப்படுத்திவிடவேண்டும் என்பதுதான் எனது பாலிசி. கமலுக்கு அடுத்து நான் பயந்துகொண்டே நடித்த ஹீரோ விஜய சேதுபதி.”
“நாயகி ஷ்ரத்தா?”

“அவங்களுக்கு தமிழ் தெரியாது. கன்னடத்துக்காரங்க. ஆனா, தமிழ் தெரிஞ்சவங்கள விட சூப்பரா நடிக்கிறாங்க. இதற்காக தமிழ் தெரிஞ்ச ஹீரோயின்கள் கோவிச்சுக்க வேணாம். திறமை அடிப்படையில் இந்த மதிப்பீட்டைச் சொல்லுறேன்.”
“இத்தனை வருட அனுபவம் உங்களுக்கு கதையை தேர்வு செய்ய எப்படி உதவுகிறது?”

“இந்தக் கதையை தியேட்டருக்கு வந்து ரசிகர்கள் பார்ப்பாங்களா, மாட்டாங்களா என்பதே என் கதை தேர்வின் அளவுகோல்.”
“அடிக்கடி ‘த்தா’ என்கிற சென்னையின் பிரபலமான கெட்ட வார்த்தையைப் படங்களில் அள்ளிவிடுகிறீர்களே?”

“அது ஒரு கெட்ட வார்த்தை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கோபமாக இருக்கும் ஒருவனுக்கு அந்த வார்த்தை ரொம்ப சுலபமாக வந்துவிடுகிறது. அவன் எவ்வளவு படித்தவனாக இருந்தபோதும், இன்பம் துன்பம் இரண்டிலும் எல்லோரும் பயன்படுத்துகிற வார்த்தை அது. கேரக்டரின் தேவைக்குத் தகுந்தபடி நானும் சில படங்களில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறேன்.”

- நெல்லை பாரதி