MOM
தாய்ப்பறவையின் சீற்றம்!
கல்லூரி மாணவியை ஒரு கும்பல் கடத்திச் சென்று, பாலியல் கொடுமை செய்து, பயங்கரமாக தாக்கி, சாக்கடைக்குள் எறிந்துவிட்டுப் போகிறது. சாட்சியங்கள் இல்லாததால், சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் வெளியே வருகிறார்கள். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மர்மமான முறையில் பழிவாங்கப்படுகிறார்கள். யார் பழிவாங்கியது என்பது மெதுவான திரைக்கதை ஓட்டத்தில் பரபரப்பாக விரிகிறது.
 வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து, வரவேற்பை அள்ளிவிட முடிவெடுத்திருக்கும் ஸ்ரீதேவிக்கு இது மற்றுமொரு வெற்றிப்படம். தான் காட்டும் பாசத்தை அலட்சியம் செய்யும் மகள் மீது துளியும் கோபப்படாத ஸ்ரீதேவியின் சகிப்புத்தன்மை பாராட்ட வைக்கிறது. வேறு வழியில்லாமல் ஒரு பிரைவேட் துப்பறியும் நிபுணரின் உதவியை நாடுவதும், தான் மேற்கொண்ட செயல், வீட்டில் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் காட்டும் கவனமும் மெச்ச வைக்கின்றன.
மகள் கற்பழிக்கப்பட்டுவிட்டாள் என்பதைக் கேள்விப்பட்டதும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு கதறும் காட்சியில், பெண்குழந்தைகளைப் பெற்ற அத்தனை பேர் கண்களும் ஈரமாவது தவிர்க்க இயலாதது. ஒருகாலத்தில் இளைஞர்களின் கனவுக்குள் வட்டமிட்ட ஸ்ரீதேவி, இப்போதெல்லாம் தாய்மார்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, அவர்களது பாசப்பிணைப்புக்குள் பத்திரமாகிவிட்டார். கீப் இட் அப் மாம்!
ஸ்ரீதேவியின் கணவராக வரும் அந்தன் சித்திக் குறைந்த அளவு நடிப்பால் நிறைவு தருகிறார். ஸ்ரீதேவியின் மகளாக (கணவரின் முதல் மனைவியின் மகள்) நடிக்கும் சாஜல் அலி தேர்ந்த தேர்வு. ஸ்ரீதேவியிடம் முறைப்பு காட்டுவது, அப்பாவிடம் பாசம் பொழிவது, பாதிக்கப்பட்ட நிலையறிந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது என முதலில் கோபத்தையும் பின்னர் பச்சாத்தாபத்தையும் அள்ளுகிறார்.
துப்பறியும் நிபுணர் டி.கேவாக வரும் நவாஜுதீன் சித்திக், கோமாளி மாதிரி வந்து, பாராட்டுகளைக் குவிக்கிறார். ‘கடவுள் எல்லா இடத்துலேயும் இருக்கமுடியாது என்பதால்தான் அம்மாவைப் படைத்திருக்கிறான்’ என்று சொல்லி கண்கலங்க வைக்கிறார்.இன்ஸ்பெக்டராக வரும் அக்ஷய் கன்னா, சரியான சந்தேகப்பிராணியாய் அதிகாரத் தோரணை காட்டி, கடைசிக்காட்சியில் கைதட்டல் பரிசு பெறுகிறார்.
மொழிமாற்றுப்படம் என்று தெரியாத வகையில் அழுத்தமான வசனம் எழுதியிருக்கிறார் ஜே.ஷங்கர். பின்னணி இசையில் அழகாக மிரட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மாணவியைக் கடத்திக்கொண்டு செல்லும் கார் பயணிக்கும் காட்சியில் பரபரப்பான நிலைக்கு நம்மைக் கொண்டு வருகிறார்.
சாதாரண கதை. ஆனால், நெஞ்சை உலுக்கும் கதை. அதை நேர்த்தியான திரைக்கதையால் ரசிக்கவைக்கிறார் டைரக்டர் ரவி உதய்வார்.
|