நாலு ஹீரோயினும் தங்கமானவங்க! சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார் இயக்குநர்



“இப்போதுதான் படப்பிடிப்பை துவங்கிய மாதிரி இருக்கிறது. அதற்குள் ரிலீஸ் தேதியை நெருங்கிவிட்டோம் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அதற்கு காரணம் என்னுடைய தயாரிப்பாளர் டி.சிவா’’ என்று தயாரிப்பாளருக்கு புகழ் கீதம் பாடி பேச ஆரம்பித்தார்   ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் இயக்குநர் ஓடம் இளவரசு.

‘‘முதல் நாள் படப்பிடிப்பை நாங்கள் மதுரையில் நடத்தினோம். அதர்வா, ரெஜினா, அதிதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்கினோம். படப்பிடிப்பில் ரெஜினாவும், அதிதியும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டார்கள். இருவரும் சேர்ந்து கேரளாவுக்கு டூர் செல்லுமளவுக்கு அவர்களின் நட்பு பலமாகிவிட்டது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. அதில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணீதா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். ஐஸ்வர்யாவுக்கும், ப்ரணீதாவுக்கும் பெரியளவில் அறிமுகம் இல்லையென்றாலும் பல நாள் பழகியவர்கள் போல் நட்புடன் பழகினார்கள்.

படத்தில் ஒரு ஹீரோயின் இருந்தாலே அவரை சமாளிக்க இயக்குநர்கள் திண்டாடுவதுண்டு. ஆனால் என்னுடைய ஹீரோயின்கள் ஜெம் பெர்சன்ஸ். படப்பிடிப்பின்போது  அனைவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நன்றாக நடித்தனர்.

படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் புதுமையாக இருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் எல்லோருடைய கதாபாத்திரத்திலுமிருந்து வேறுபட்டு புதுமையாக இருக்கும். மதுரை பெண்ணாக வரும் ரெஜினாவின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும்.

அதர்வா,  ஐஸ்வர்யா, ப்ரணீதா மூவரும் ஊட்டியில் படிக்கும் கல்லூரி நண்பர்கள். ரெஜினா மற்றும் அதிதி ஆகியோர் அதர்வாவின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்களாக வருகிறார்கள். படத்தில் ஐந்தாவதாகவும் ஒரு ஹீரோயின் உள்ளார். அவருடைய பெயர் நேஹா மாலிக். அவருடைய கதாபாத்திரத்தின் மூலம் நாங்கள் பார்ட்-2 வுக்கு லீட் வைத்துள்ளோம்.

இந்தப் படம் பெண்களின் முதல் காதல் பற்றி அழுத்தமான ஒரு உணர்வைத் தரும். முதல் காதல் தான் சிறந்த காதல் என்பதை திரைக்கதையின் மூலம் அழுத்தமாகக் கூறியுள்ளோம். முதலில் ப்ரணீதா நடித்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக இருந்தது.

தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கத்து வீட்டுப் பெண் இமேஜ் உள்ளவர் என்பதால் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. படத்தில் அதர்வாவின் தந்தை தீவிர ஜெமினி கணேசன் ரசிகர் என்பதால் அவருக்கு ஜெமினி கணேசன் என்று பெயர் வைத்திருப்பார்.

சுருளி ராஜன் என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சுருளிராஜன் ஆகியோருக்கு ட்ரிபியூட் ஒன்றை படத்தின் துவக்கத்தில் வைத்துள்ளோம். படத்தில் பாடல் காட்சிகளில் மட்டும் ‘வண்ணத்திரை’ நடுப்பக்கம் அளவுக்கு சிறிய அளவில் கிளாமர் இருக்கும்.

படத்தில் முத்தக் காட்சி இருக்கு. ஆனால் விரசமாக இருக்காது. படத்தில் நான்கு கதாநாயகிகளுக்கும் நான்கு பாடல் இருக்கும். இரண்டு காட்சிகளைத் தவிர்த்து படத்தில் எல்லா காட்சிகளிலும் அதர்வா இருப்பார். படத்தில் மொத்தம் எழுபத்திநாலு காட்சிகள். அதில் எழுபத்தி இரண்டு காட்சிகளில் அதர்வா இருப்பார்.

படத்தின் எல்லா காட்சிகளிலும் ரொமான்டிக் காமெடி மெயின்டெயின் ஆகும். படத்தில் சீரியஸான காட்சிகள் என்றால் இரண்டு காட்சிகள்தான். அந்த காட்சிகளில் அதர்வா இருக்க மாட்டார்.’’

- சுரேஷ்ராஜா