இயக்குநராகும் ஸ்டண்ட் டைரக்டர்!



பிரபல சண்டை இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘முந்தல்’. இவர் ஸ்டண்ட் நடிகராகவும், இயக்குநராகவும் சுமார் 250 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். அடிப்படையில் மீனவரான ஜெயந்துக்கு கடல் வாழ்க்கை தண்ணிப்பட்ட மாதிரி. அதை வைத்து பெரிய  ஆபத்தான கடல் காட்சிகளையும் ரொம்ப இயல்பாக படமாக்கியுள்ளார்.

கடல்  மற்றும் கடல் சார்ந்த பகுதியில் படமாக்கப்பட்ட இப்படத்தின் விஷுவல்ஸ்  பிரம்மாண்டமாக படத்தில் ஹைலைட்டாக இருக்குமாம். அதுமட்டுமில்ல, படக்குழுவினருக்கு ஒவ்வொரு நாளும்,  ஒவ்வொரு வகையான மீன் உணவை வழங்கி அசத்திவிட்டாராம் ஜெயந்த்.

நாயகன் அப்பு கிருஷ்ணா. முக்‌ஷா நாயகி. இவர்களுடன் நிழல்கள் ரவி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அழகு, ‘மகாநதி’ சங்கர், போண்டா மணி, வெங்கல்ராவ் ஆகியோரும் இருக்கிறார்கள்.   ஒரு குத்துப் பாடலுக்கு ரிஷா நடனம் ஆடியிருக்கிறார்.

புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய மருந்துகளை சிலர் வியாபார நோக்கில் மறைத்து வைக்கிறார்கள். அப்படி மறைக்கப்பட்ட ஒரு அபூர்வ மருந்தைத் தேடி ஹீரோ செல்ல, அதே மருந்துக்காக பலர் பயணிக்க, இறுதியில் அந்த மருந்து யாரிடம் கிடைக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

- எஸ்