புருஷன் பொண்டாட்டி பிரச்சினை!
சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 40
‘மொத்த சிச்சுவேஷன் முப்பத்தியாறு’ வரிசையில் நாம் இந்த வாரம் வெள்ளிவிழா கொண்டாடுகிறோம்.யெஸ்.இதுதான் இருபத்தைந்தாவது சிச்சுவேஷன்.சினிமாவில் மட்டுமல்ல.நம் குடும்பங்களிலும் எதிர்கொள்ளக்கூடிய சூழல்தான்.
கணவனுக்கும், மனைவிக்கும் சண்டை.இந்த ஒன்லைனரை வைத்து ஒரு லட்சம் கதைகளாவது எழுதிக் குவித்துவிடுவீர்கள் தானே?இருவருக்கும் சண்டை வருவதற்கான காரணம் வேண்டுமானால் தலைமுறை தலைமுறையாக மாறலாம். ஆனால், சண்டை என்பது ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே சாஸ்வதம்தான்.
ஹாலிவுட்டில் கொஞ்சம் பச்சையாக ‘கள்ளக்காதல்’ பிரச்சினையால் பிரிவு என்று எடுப்பார்கள். நம் சூழலில் அந்தக் காரணத்தை முன்வைத்தால் ‘A’ சான்றிதழ் கிடைக்கும். சேட்டிலைட் ரைட்ஸ் போகாது மாதிரி பிரச்சினைகளால் புதுசு புதுசாக காரணம் கண்டுபிடிக்க மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.‘அவ்வை சண்முகி’யின் கதை அபாரமானது.
சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக பணிபுரியும் கமல், பணக்கார வீட்டுப் பெண்ணான மீனாவை காதலித்து கரம் பிடிக்கிறார்.ஸ்டண்ட் வேலை என்பது இரவும், பகலும் கோரக்கூடியது. அதனால் குடும்பத்துக்கு போதிய நேரத்தை கமலால் ஒதுக்க முடியவில்லை. எனவே-பணக்கார மீனா, அப்பாவின் உதவியோடு ‘டிவோர்ஸ்’ செய்கிறார்.
அதற்குள்ளாக இல்லறவாழ்வின் இனிமையான காலகட்டத்து அன்பின் சாட்சியாக ஒரு மகள் பிறந்துவிட்டாள்.ஹஸ்பெண்டாக இருந்தபோது ஏனோதானோ என்றிருந்த கமல், அப்பாவாகும்போது குடும்பத்தின் தேவையை உணர்கிறார்.மகளுக்காக ‘அவ்வை சண்முகி’ ஆகிறார்.அதே நேரம், தான் இழந்த காதலை மீண்டும் பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கிறார்.
இறுதியில் மகளின் ஆதரவோடு வெற்றிக்கொடி நாட்டுகிறார்.மீனாவுக்கு கமலின் அன்பு புரிபடுகிறது.கணவனும், மனைவியும் மீண்டும் இல்லறத்தில் இணைகிறார்கள்.இதுதான் கதை.பிழியப் பிழிய காதலாக சொல்ல வேண்டிய கதை.அப்படிச் சொல்லியிருந்தால் பத்தோடு பதினொன்றாக போயிருக்கும்.
திரைக்கதையில் அவ்வை சண்முகியை ஜொள்ளுவிடும் மணிவண்ணன், உண்மையைத் தெரிந்துகொண்டு போட்டுக் கொடுக்க நினைக்கும் டெல்லிகணேஷ், டிவோர்ஸ் ஆகிவிட்ட கமலை மடக்கிப்போட நினைக்கும் ஹீரோயின் என்று ஏகத்துக்கும் கிளைகளை விரித்ததால் தமிழ் சினிமாவில் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கும் எவர்க்ரீன் காமெடி ஃபேமிலி என்டர்டெயினரை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரால் கொடுக்க முடிந்தது.
இதுதான் நமக்கான பாடம்.மொத்தமே 36 சூழல்களில்தான் கதை எழுத முடியும் என்றாலும், இந்த முப்பத்தாறை வைத்து முன்னூற்றி அறுபது வெவ்வேறு கதைகளை எழுதக்கூடிய ஆற்றலை எட்ட வேண்டும்.
(கதை விடுவோம்)
|